Showing posts with label இங்கிலாந்து_பயணம். Show all posts
Showing posts with label இங்கிலாந்து_பயணம். Show all posts

Tuesday, January 23, 2018

சும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்

பைக்கின் ஹெட்லைட் ஃபியூஸாகிவிட்டது. ஒரு வாரமாக ஹெட்லைட் இல்லாமல்தான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தேன். கடந்த சனிக்கிழமை வேறு புதிய பல்ப்பை மாட்டிவிட முடிவுசெய்த போதிலும் முடியாமல் போய், ஞாயிற்றுக்கிழமைதான் வாய்த்தது.

சரவணம்பட்டியில் பெருமாள் கோவிலின் எதிர்புறமிருக்கும் ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் பிலிப்ஸ் பிராண்ட் பல்பு ஒன்றை வாங்கிக்கொண்டு, ஆனந்தகுமார் மில்ஸ் எதிர்புறமிருந்த ஒரு ஆட்டோமொபைல் ஒர்க் ஷாப்புக்குச்  சென்றேன்.

அக்கடையில் ஒரு பையன் இருப்பான். மிக வேகமாக சடசடவென வேலையை முடிப்பான். ஸ்பீடா மீட்டர் கேபிளை ஒருமுறை அவன்தான் மாட்டிக்கொடுத்தான். பொதுவாக பைக்கில் கைவைத்தாலே முப்பது முதல் நாற்பது ரூபாய் வாங்கிவிடுகிறார்கள். நான் போன சமயத்தில் அப்பையன் இல்லை. கடைக்குள் ஒருவர் இருந்தார். உள்ளே சென்று சொன்னேன். அவரும் நம்மைப்போலவே மொபைல் பைத்தியம் போல. "பையன் வெளிய போயிருக்கான், ஒரு ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க வந்துருவான்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் ஆன்டராய்டில் ஆட்காட்டி விரலால் தடவ ஆரம்பித்தார். இருசக்கர வாகனங்களை இவரும், அங்கு வேலை பார்க்கும் அப்பையனும்  சர்வீஸ் செய்வதை பார்த்திருக்கிறேன். இவரும் அப்பையன் போல ஒருகாலத்தில் யாரிடமாவது தொழிலாளியாக இருந்துதான் இப்போது முதலாளியாக உயர்ந்திருப்பார். இப்போது  இந்த சின்ன வேலையையெல்லாம் செய்ய மனம் ஒப்பவில்லை போலும்.

நானும் பைக்கின் மேல் அமர்ந்துகொண்டு மொபைலை நோண்ட ஆரம்பித்தேன். ஐந்து நிமிடம் முடிந்து ஆறாவது  நிமிடத்திற்குள் நானும் என் யுனிகார்னும் நுழைந்தோம். ஆறு ஏழு எட்டு என பத்தாவது நிமிடமும் கடந்திருந்தது. நான் முதலாளியின் அருகில் சென்று "என்னங்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? நான் வேணா போய்ட்டு அப்புறம் வரவா?" என்றேன். "அநேகமா வந்துகிட்டு இருப்பாப்ல. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் அம்முதலாளி. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தொழிலாளி வந்தார். மூன்று நிமிடத்தில் வேலையை முடித்தார். நாற்பது ரூபாயை முதலாளி வாங்கிக்கொண்டார்.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரத்தின் மையப் பகுதியில் ஆறு மாதத்திற்கு முன்னால் , மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டும் அப்பகுதியின் காஸ்டலியான அப்பார்ட்மெண்ட்களில் ஒன்று. அலுவலகம் முடிந்து திரும்பிய உடன் அங்கிருக்கும் ஜிம்முக்குப் போவது வழக்கம். அப்படி ஒருநாள் சென்றபோது ஜிம்முக்கான அக்சஸ் கார்டு வேலைசெய்யவில்லை. வரவேற்பறைக்குச் சென்று கார்டு ஒர்க் ஆகவில்லை எனச் சொல்லலாம் என வந்தபோது, வரவேற்பறைக்கு சற்று முன்னரே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இருந்தார். அதுவரை அவரை நான் பார்த்ததில்லை.

கையில் கார்டுடன் வருவத்தைப் பார்த்த அவர், "ஏதாவது உதவி தேவைப்படுகிரதா?" என்றார். விபரத்தை சொன்னவுடன், "இப்போதைக்கு கார்டில் இருக்கும் பிரச்னையை சரி செய்யமுடியாது. சாவியை வைத்து நான் திறந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு,
அவராகவே சாவியை எடுத்துக்கொண்டு, என்னோடு வந்து ஜிம் அறையைத் திறந்துவிட்டார்.

என்னோடு அவர் வரும்போது, "நான் இதுவரை உங்களை இங்கு பார்த்ததில்லையே. இங்குதான் பணிபுரிகிறீர்களா?" எனக் கேட்டபோது, அவர் சொன்ன பதில் "I am the owner of this appartment".

#முதலாளிடா 

Friday, July 21, 2017

ஆண்பால் - பெண்பால் - தாய்ப்பால்

குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே, பல்பொருள் அங்காடியில் தனக்கான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்து செல்லும் பெண்மணியை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மேற்கத்தியக் கலாச்சாரம் நம் கலாச்சாரத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. அது நமக்கு ஒத்துவராது என்றுதானே நாம் இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

இங்கிருக்கும் பெண்கள் எப்போதும்  தன் உடையைச் சரிசெய்துகொண்டே இருப்பதைப் பார்த்ததேயில்லை. தன் உடலில் அங்கு தெரியக் கூடாது; இங்கு தெரியக்கூடாது என்று அதை மறைப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் நாள்முழுக்க செலுத்துவதுமில்லை. அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான உடையை அவர்களே முடிவு செய்கிறார்கள். இங்கிருக்கும் யாரும் அதனைக் குறுகுறுவெனப் பார்ப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இங்கிருக்கும் வீதிகளிலும், பூங்காக்களிலும் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். புணர்தலைத் தவிர.

இவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்போது முதல் பத்தியின் முதல் வரிக்கு வாருங்கள். ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடியில், டிராலியைத் தள்ளிக்கொண்டு தனக்கான பொருட்களை எடுத்துக் போட்டுக்கொண்டே வருகிறார்  ஒரு பெண். தன் மார்பில் தொட்டில் போன்று கட்டப்பட்ட ஒரு துணிக்குள்ளிருக்கும் கைக்குழந்தை  அன்னையின் திறந்த மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கிறது. போகிறவர் வருகிறவர் என யாரும் இதனை வேடிக்கை பார்க்கவில்லை. அவரவர் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய உயர்ந்த குணம். ஒரு சமூகத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் ஒரு பெண்ணால் இதுபோன்று பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டமுடியும். இப்போதுதான் நாம் சானிட்டரி நாப்கினைப் பற்றியே பேச ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் வளரவேண்டிய உயரம் எவ்வளவோ இருக்கிறது.

இந்த விஷயத்தில் இச்சமூகம் நம்மைவிட எவ்வளவோ உயர்ந்ததாகவே இருக்கிறது. இங்கிருக்கும் அனைவரும் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடின்றி அனைவரும் புகை பிடிக்கிறார்கள்; மது அருந்துகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் இவர்களிடம்  கற்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.

#இங்கிலாந்து_பயணம்

Tuesday, May 30, 2017

இங்கிலாந்து பயணம் - 5

கோடையே வா வா...

கழுத்து முதல் கால் வரை உடல் முழுவதும் மறைத்து ஆடை அணிந்து வந்த வெள்ளைக்காரர்கள் இப்போது ஆடையின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். ஷூக்கள் இல்லாத கால்களையே பார்க்க முடியாமல் இருந்தது. இப்போது பெண்களிடம் விதவிதமான மாடர்ன் செப்பல்களைப் பார்க்க முடிகிறது. ஆம். கோடை துவங்கிவிட்டது. கோடை துவங்கியதின் மகிழ்ச்சியை இவர்களின் முகத்தில் காணமுடிகிறது.

ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குளிர் நிலவும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் உடம்பில்   விதவிதமான டிசைன்களை  பச்சை குத்திக்கொள்கிறார்கள். சூரிய ஒளிக்காக ஏங்கும் இவர்கள், கோடை வர ஆரம்பித்த உடன், சூரியக் குளியலுக்காக ஆடைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடே இல்லை. அப்படி வெளிக்காட்டும் உடல் அழகாகத் தெரியத்தான் நாம் நினைத்துக் கூடப் பார்க்காத இடத்திலெல்லாம் டாட்டூக்களை வரைந்து கொள்கிறார்கள். இந்த டாட்டூக்களை  காட்டுவதற்காகவே பெண்கள் குட்டைப் பாவாடை அணிவார்கள் போலும்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட்டுதான் இங்கு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை. குளிருக்கான பிரத்யேக ஆடைகள் இல்லாமல் நம்மூர் குழந்தைகளைப்போன்று ஆடையணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்.

அதிகாலை நான்கரைக்கெல்லாம் சூரியன் வந்துவிடுகிறான். இரவு சுமார் ஒன்பதுமணி வரை மக்களை மகிழ்விக்கிறான். சூரியனைப் பார்த்து நேரம் சொல்வதெல்லாம் இங்கு ஆகாது. காரின் மேல்பகுதியைத் திறந்துவிட்டு ஜாலியாகக்  காரில் செல்கிறார்கள்.

இங்கு ஆண்கள், பெண்கள் என எல்லோரும் மது அருந்துவதற்கு காரணம் குளிர்தான். இவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அப்படியெனில் இந்தக் கோடைகாலத்தில் மது விற்பனை குறைந்துவிடுமா?. நிச்சயம் இருக்காது என்றே தோன்றுகிறது. நம்மூரில் "இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பியர் அடிச்சா நல்லாருக்கும்" என்று சொல்லிக் குடிக்கிறார்கள். இவர்கள் குளிருக்காக பியர் குடிக்கிறேன் என்கிறார்கள். அப்படியெனில் பியர் எந்த சீதோஷண நிலைக்குக் குடிப்பது? குளிருக்கா இல்லை வெயிலுக்கா?.

சமீபத்தில் வாட்டர் தீம் பார்க் சென்றிருந்தேன். முழுக்க முழுக்க தண்ணீருக்குள் சறுக்கி விளையாடும் விளையாட்டுகள். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கு போட்டோ எடுக்க அனுமதியே இல்லை. இந்த ஊரிலும் இப்படியா என ஆச்சரியமாகப் பட்டது. குளிர் இருந்த சமயத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது. இனி கேட்கவா வேண்டும். கூட்டம் கூட்டமாகப் படையெடுப்பார்கள். கோடையே வா..வா.. கொண்டாடுவோம் வா..வா..

பின்குறிப்பு: இப்பதிவில் இணைத்துள்ள இப்படம் இணையத்தில் இருந்து இறக்குமதி செய்தது. இதுபோன்ற படங்களை இங்கு தாராளமாக எடுக்கமுடியும் என்றபோதிலும் நாகரிகம் கருதி எடுக்கவில்லை.

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

https://m.facebook.com/story.php?story_fbid=1440176172705165&id=100001383893870

Thursday, May 18, 2017

இங்கிலாந்து பயணம் - 4

வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று முகத்தை முட்டை போல் வேகவைக்கிறது. சமீப தினங்களில் இப்படிப்பட்ட வாக்கியங்களைத்தான் அதிகமாகப் படிக்க முடிந்தது. வெயிலே இல்லாத குளிர் பிரதேசமான கிரேட் பிரிட்டனுக்கு வந்து இருபது நாட்கள் ஆகின்றன. இருந்தபோதும் நம்மூர் வெயிலின் அளவை தினமும் கேட்கும்போது கொஞ்சம் மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். அதுவும் நேற்று சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் இருந்தது என்கிற செய்தி கவலைக்குரியதாக இருந்தது.

நான் தங்கியிருக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம், வெயிலைப் பற்றிப் பேசியபோது வெயில் எப்போது வரும் எனக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நம்மூர் வெயிலின் வெப்ப அளவைச் சொன்னபோது "ஓ .. இவ்வளவா, நான் எரிந்து விடுவேன்" என்றார் .

கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் கோவை அலுவலக்கத்திற்கு  இங்கிருந்து சக ஊழியர் ஒருவர் வந்தார். மதிய உணவுக்குப்பின் வெளியே வந்து புல் தரையில் நின்று பேசிக்கொண்டிருப்போம். இவரால் பத்து நிமிடம் கூட நிற்க முடியாது. வியர்த்து சட்டை ஈரமாக ஆரம்பிக்கும். "நின்றது போதும்; வாங்க போகலாம்" என்பார்.

வெயிலோ மழையோ குளிரோ. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அதன் மீது ஒவ்வொரு கருத்து வைத்திருக்கிறார்கள். அதுதானே இயற்கை. தமிழகம் முழுக்க பல பகுதிகளில் மழை என்கிற செய்தியை நேற்று இரவு படித்தபோது மனம் கொஞ்சம் குளிர்ந்தது .

Monday, May 8, 2017

இங்கிலாந்து பயணம் - 3

மதிய உணவிற்குப் பின், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்போம். புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புகைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அரை மணி நேரத்தில் தெர்மோகோல் முதல் அனைத்து விஷயங்களும் பேசப்பட்டிருக்கும்.

ஆனால் UK அலுவலகம் அலுவலகம் வந்தபின்பு மதிய உணவுக்குப்பின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். சாப்பிட்டு முடித்த பின் நேராக இருக்கைக்கே சென்றுவிடுவது. ஆனால் இங்கு இருக்கும் சக ஊழியர்கள் மதிய உணவை விரைவாக முடித்துவிட்டு, நண்பர்களோடு குழுக் குழுவாக சுமார் அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இப்போது நானும் என்னோடு வந்த சக நண்பர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டோம்.

அப்பாதை ஒரு சிறிய கால்வாயை ஒட்டி மரம் செடி கொடிகளுக்கு நடுவே செல்கிறது. வெயில் இங்கு சுத்தமாக இல்லாததால் ஜெர்கின் அணிந்து கொண்டு சிறு குளிரில் இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டே நடப்பது அருமையாக இருக்கிறது.

அந்தக் கால்வாயில் நீர் நிறைந்திருக்கிறது. சில படகுகள் காணப்பட்டன. இக்கால்வாய் பற்றிய கதையை சக ஊழியர் ரிச்சர்ட்டிடம் கேட்டபோது, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்து வசதிக்காக இக்கால்வாயை ஏற்படுத்தினார்களாம். இப்போது சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இங்கு வந்துவிட்டதால் இப்போது இக்கால்வாயை போக்குவரத்திற்கு பயன்படுத்துவது இல்லையாம்.

மாறாக படகு சவாரிக்காக இப்போது பயன்படுத்தப் படுகிறதாம். இந்தப் படகை வாடகைக்கு எடுத்து இரவில் கூட தாங்கிக்கொள்ளலாம் என்றார் . இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கால்வாய் கழிவு நீர் கலக்காமல் அப்படியே இருக்குறது என்பது கூவத்தைக் கொண்ட நமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

செல்லும் வழியில் இருந்த ஆப்பிள் மரத்தையும், செர்ரி மரத்தையும் காட்டினார்கள். ஆப்பிள் இப்போதுதான் பூக்கத் தொடங்கியுள்ளது. மரம் முழுக்க பூக்கள். செர்ரியில் காய்கள் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. இனி தினமும் இப்பாதையில் அரைமணி நேரம் நடைப்பயிற்சிதான்.

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

06 May 2017

https://m.facebook.com/story.php?story_fbid=1422785854444197&id=100001383893870

இங்கிலாந்து_பயணம் - 2

பெண்கள் எவ்வளவு அழகாக ஒயின் குடிக்கிறார்கள். கண்ணாடிக் குவளையில் இருக்கும் ஒயினை உதட்டில் மட்டும் ஒற்றி எடுப்பது போல சொட்டுச் சொட்டாக சுவைக்கிறார்கள். மதுக் கடைகளே வேண்டாம் என, கடைகளை அடித்து நொறுக்கும் ஊரிலிருந்து வரும் நமக்கு இது கொஞ்சம் மாறுபட்டதாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் இம்மக்கள் குடிப்பதில் ஒரு ஒழுங்கைப் பார்க்க முடிகிறது.

மனைவியுடனோ இல்லை காதலியுடனோ ரயிலில் பயணம் செய்து கொண்டே இருவரும் பியரைப் பருகிக் கொண்டு பயணிக்கிறார்கள். பருகி முடித்த பின்பு, காலிக் குவளையை ரயிலில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

கடந்த வாரம் நான் இருக்கும் லீட்ஸ் நகரத்தில் இருந்து விட்பி எனும் ஊருக்குச் சென்றேன். அது ஒரு சிறிய சுற்றுலா தளம். எல்லோரும் வந்து போகிற கடற்கரை குப்பைகளற்று குறிப்பாக காலி மதுக் குடுவைகளற்று இருக்கிறது.

நாம் ரயிலில் நண்பர்களோடு பயணிக்கும்போது என்னென்ன அலப்பறைகள் செய்வோமோ அதே அலப்பறைகளை இவர்களும் செய்கிறார்கள். சத்தமாகப் பாடுகிறார்கள். விசில் அடிக்கிறார்கள். விரல்களை வாயினுள் வைத்து விசில் அடிக்கும் பழக்கம் நம்மூரில் மட்டும்தான் இருக்கிறது என எண்ணியிருந்தேன். அப்படியில்லை போலும். உலகம் முழுக்க விசிலடிக்கும் பழக்கம் இருக்கும் போலும்.

ஒரு பத்துப் பதினைந்து பேர் மொத்தமாக ரயிலில் ஏறினார்கள். எல்லோரும் குடித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பயணத்தின் போது கத்திக் கொண்டும் பாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் வந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் கொஞ்சம் அமைதியாக வருமாறு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவர்கள் சாரி சாரி என்று சொல்லுவிட்டு, சில வினாடிகளிலேயே மீண்டும் அலப்பறைகளை ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்ல. அனைவருமே கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஐம்பது வயதுக்காரர்கள். வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள்.

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

03 May 2017
https://m.facebook.com/story.php?story_fbid=1420381281351321&id=100001383893870

இங்கிலாந்து_பயணம் - 1

முதல் முறையாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 92 நாட்கள் இருக்கப் போகிறேன். இது ஒரு நீண்ட பிரிவுதான். இதுவரையில் இப்படி இருக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. அலுவலகத்தில் இருந்து மாலை வீட்டிற்கு வருவதற்கு சில நாட்கள் மிகத் தாமதமாகிப் போகும். அந்த நாட்களிலெல்லாம், அகமதியும் யாழ்மதியும் பைக் சத்தம் கேட்கும்  போதெல்லாம் கதவைத் திறந்து நீங்கள்தானா என்று பார்ப்பதாக மனைவி சொல்வார்.

இந்த நாட்களில் இங்கு எந்த வித அசம்பாவித சூழலும் நடைபெற்றுவிடக் கூடாது என்றே மனம் வேண்டிக்கொண்டிருக்கிறது. இப்போது போலவே ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழலே இருக்க மனம் ஆசைப்படுகிறது. இந்த மூன்று மாதத்திற்கே இப்படி என்றால், ஆண்டுக் கணக்கில் வெளிநாடுகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் செல்வோர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். எவ்வளவு கொடுமையானது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களை வழியனுப்பி விட்டுவிட்டு, அவர்களின் போனுக்காக வீட்டு ஓனரின் லேண்ட் லைன் முன்னால் காத்துக் கிடைத்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுவும் முதல்முறை செல்கிற நண்பர்களை வழியனுப்ப ஒட்டு மொத்த சொந்தமும் வந்து மீனம்பாக்கத்தில் காத்துக் கிடைக்கும். ஆனால் இன்று தாத்தா வீட்டிலிருந்து வீடியோ காலிங்கில் பை சொல்லி வழியனுப்புகிறார்கள் மகள்கள். இந்த இணைய வளர்ச்சியே இப்போது ஆறுதல் தருகிறது.

இன்றைய விடியல் கோவையில். நாளைய விடியல் லண்டனில். வாழ்தல் எவ்வளவு அழகானது. வாழ்வோம்!

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip