Monday, May 8, 2017

இங்கிலாந்து_பயணம் - 2

பெண்கள் எவ்வளவு அழகாக ஒயின் குடிக்கிறார்கள். கண்ணாடிக் குவளையில் இருக்கும் ஒயினை உதட்டில் மட்டும் ஒற்றி எடுப்பது போல சொட்டுச் சொட்டாக சுவைக்கிறார்கள். மதுக் கடைகளே வேண்டாம் என, கடைகளை அடித்து நொறுக்கும் ஊரிலிருந்து வரும் நமக்கு இது கொஞ்சம் மாறுபட்டதாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் இம்மக்கள் குடிப்பதில் ஒரு ஒழுங்கைப் பார்க்க முடிகிறது.

மனைவியுடனோ இல்லை காதலியுடனோ ரயிலில் பயணம் செய்து கொண்டே இருவரும் பியரைப் பருகிக் கொண்டு பயணிக்கிறார்கள். பருகி முடித்த பின்பு, காலிக் குவளையை ரயிலில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

கடந்த வாரம் நான் இருக்கும் லீட்ஸ் நகரத்தில் இருந்து விட்பி எனும் ஊருக்குச் சென்றேன். அது ஒரு சிறிய சுற்றுலா தளம். எல்லோரும் வந்து போகிற கடற்கரை குப்பைகளற்று குறிப்பாக காலி மதுக் குடுவைகளற்று இருக்கிறது.

நாம் ரயிலில் நண்பர்களோடு பயணிக்கும்போது என்னென்ன அலப்பறைகள் செய்வோமோ அதே அலப்பறைகளை இவர்களும் செய்கிறார்கள். சத்தமாகப் பாடுகிறார்கள். விசில் அடிக்கிறார்கள். விரல்களை வாயினுள் வைத்து விசில் அடிக்கும் பழக்கம் நம்மூரில் மட்டும்தான் இருக்கிறது என எண்ணியிருந்தேன். அப்படியில்லை போலும். உலகம் முழுக்க விசிலடிக்கும் பழக்கம் இருக்கும் போலும்.

ஒரு பத்துப் பதினைந்து பேர் மொத்தமாக ரயிலில் ஏறினார்கள். எல்லோரும் குடித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. பயணத்தின் போது கத்திக் கொண்டும் பாடிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் வந்தார்கள். டிக்கெட் பரிசோதகர் கொஞ்சம் அமைதியாக வருமாறு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவர்கள் சாரி சாரி என்று சொல்லுவிட்டு, சில வினாடிகளிலேயே மீண்டும் அலப்பறைகளை ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் அல்ல. அனைவருமே கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஐம்பது வயதுக்காரர்கள். வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள்.

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

03 May 2017
https://m.facebook.com/story.php?story_fbid=1420381281351321&id=100001383893870

1 comment:

Yaathoramani.blogspot.com said...

நம்மிடமிருந்து அந்த
விசிலடிக்கும் பழக்கத்தைக்
கற்றுக் கொண்டிருப்பார்களோ
முடிந்தால் புகைப்படங்களை
இணைக்கலாமே