Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Friday, January 6, 2012

தலைப்பு வைக்கமுடியாதது

இந்த இடத்தை வெறும் இருபதாயிரம் ரூபாய்க்கு ஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபதாயிரம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 லட்சம். இப்படி இப்ப நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

இந்த இடத்தை வெறும் இருபத்தைந்து லட்சத்துக்குஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபத்தைந்து லட்சம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 கோடி. இப்படி நாளைக்கு என் புள்ளை சொல்லும்.

***

டிபன் கேரியரில் கொண்டு வந்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிடமுடியாததால், சிறிது சாப்பாட்டை அப்படியே கேரியரில் வைத்து மூடினார் நண்பரொருவர். அருகிலிருந்த இன்னொரு நண்பர், "அதை அள்ளிப்போட்டு கழுவ வேண்டியதானே; சாய்ந்திரம் வீட்டுக்குப் போவதற்குள் கெட்டுப்போகுமே" என்றார். அதற்கு அவர், "கெட்டுப்போனா என்ன. நாய்க்குப் போடவேண்டியதுதான்" என்றார். அப்போதுதான் எனக்கு எப்போதோ படித்தது நினைவிற்கு வந்தது "சாப்பாடு நாறிய பின்புதான் நமக்கு நாய் நினைவே வருகிறது"

***

சென்னையைச் சுற்றிலும் எங்கு ப்ளாட் போட்டு யார் விற்றாலும் எனக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். யாராவது அவர்களிடம் போய் நான் இப்போது சென்னையில் இல்லை எனச் சொல்லுங்களேன்; உங்களுக்குப் புண்ணியமா போகும் :-)

Sunday, April 25, 2010

நாய் பிழைப்பு



மைதானத்திற்குள்
எதிர்பாராது நுழைந்துவிட்ட நாயை
வெளியேற்றும் முயற்சியில்
நான்கு பேர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 
நீளும் முயற்சியின் கணங்களனைத்தும்
விளம்பரங்களால் நிரம்பி வழிகின்றன.
 
உழவன்

Monday, March 1, 2010

விதி வலியதோ?

பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு ஆட்டோ பிடிப்பதற்காக, தெரு முனையிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தேன். வழக்கமாக நூறிலிருந்து நூற்றியிருபது ரூபாய் தான் கேட்பார்கள். ஆனால் அன்று அந்த ஆட்டோக்காரார் இருநூறு ரூபாய் கேட்டார். பொங்கல், தீபாவளி போன்ற விசேச தினங்கள் என்றால் இவர்கள் இப்படித்தான் அளவிற்கதிகமாகக் கேட்பார்கள் என்பது தெரியும். அதற்காக இவ்வளவு அதிகமாகவா கேடபது என்று நினைத்துக்கொண்டு, அவரிடம் பேரம் பேச ஆரம்பித்தேன். அவரும் குறைப்பதாய் இல்லை; எனக்கும் அதில் உடன்பாடில்லை. சரி நான் வேறு ஆட்டோ பார்த்துக்கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்று மனைவி குழந்தையோடு, உடைமைகளையும் எடுத்துகொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். போகிற வழியில் எதாவது ஆட்டோ கிடைக்காமலா போகும் என்ற நம்பிக்கைதான்.

நடந்து செல்லும் வழியில் பல ஆட்டோக்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக வந்து போயின. ஆனால் எல்லா ஆட்டோக்களும் பயணிகளோடு சென்றும், வந்தும் கொண்டிருந்தன. என்னடா இது ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லையே என நொந்துகொண்டு நடக்கையில், எதிரே வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவை கையைக் காட்டி அழைத்தேன். ஆட்டோ அருகினில் வந்த பின்புதான் தெரிந்தது, அது "அந்த" ஆட்டோ என்று. சிரித்துக்கொண்டே சொன்னார், என்ன சார் ஒரு ஆட்டோவும் கிடைக்கலாயா; நூற்றியென்பாதாவது குடுங்க. வேறுவழி. நூற்றியென்பதைக் கொடுத்து அன்றைய விதியை எதிர்கொண்டேன்.

oOo

அது என்னனு தெரியல. ப்ளாஷ்க்குக்கும் எங்க வீட்டுக்கும் ராசியே இல்லை. "Vacuum flask ஒன்னு வாங்கனும்ப்பா" என்று மனைவி சொன்னவுடன், கடன் அட்டையில் சேர்ந்த புள்ளிகளை ப்ளாஷ்க்காக மாற்றினேன். கிரெடிட் கார்டு தொடர்பான பரிமாற்றங்கள் அனனத்தும் அலுவலக முகவரியில்தான் இருந்தது. செக்யூரிட்டி அலவலகத்தில் வாங்கப்படும் பொருளானது எனது இருக்கைக்கு வராமலா போகும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். வழக்கமாக எல்லா கடிதங்களும் இருக்கைக்கே வந்துவிடும். இல்லையேல் நம்மை தொலைபேசியில் அழைத்து, நேரில் வந்து பெற்றுக்கொள்ளச் சொல்வார்கள். ஆனால் இரண்டு வாரத்தில் வருமென்று சொல்லப்பட்ட ப்ளாஷ்க் மூன்று வாரங்களாகியும் வராததால், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏற்கனவே டெலிவரி பண்ணியாச்சே சார் என்று சொல்லவும், என்னடா இது வம்பா போச்சு என என்ணிக்கொண்டு, பொருளை வாங்கியவரின் விவரத்தைப் பெற்றுக்கொண்டு விசாரித்ததில், செக்யூரிட்டி ஆபீசில் சரியான பதில் இல்லை. யாரிடம் சென்று புகார் அளித்தாலும் வேலைக்காவாது எனத் தெரியும். ஆதலால் ப்ளாஷ்க்கை கவலையோடு மறந்துவிட்டேன்.

அதற்குப் பின்னர் கொஞ்ச நாள் கழித்து, வேறொரு ப்ளாஷ்க் வாங்கினோம். வாங்கிய மறுநாளே கைதவறிக் கீழே விழுந்ததில், கீறல் விட்டுப் பயன்படுத்தமுடியாமல் போய்விட்டது. பிளாஸ்டிக் ப்ளாஷ்க் என்பதால்தான் கீழே விழுந்தவுடன் உடைந்துவிட்டது; அடுத்த முறை ஸ்டீலில் வாங்கிடலாம் என்ற முடிவோடு இருக்கையில், சரவனா ஸ்டோர் சென்றிருந்தபோது அங்கு ஒன்று வாங்கினோம். இவ்வளவு குறைந்த விலைக்கு இவ்வளவு பெரிய ப்ளாஷ்க் தரும்போதே நான் சுதாரித்திருக்க வேண்டும். நம்ம தான் அப்படியில்லையே..டீக்கடையில் வடை எடுக்கும்போது கூட எது நமக்கு சற்றுப் பெரியதாகத் தெரிகிறதோ அதைத் தானே எடுப்போம். ரெண்டே ரெண்டு நாள்தான்; அந்த ப்ளாஷ்க் செத்துப்போனது. (ப்ளாஷ்க்கையே செத்துப்போனது என்று சொல்கிறேனெனில் எவ்வளாவு கடுப்பாகியிருப்பேன் என யூகித்துக்கொள்ளூங்கள்) ஒரு மணி நேரம் கூட தன்னால் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

இதுவும் போச்சா.. சரவனா ஸ்டோரில் வாங்கினாலே இப்படித்தான். எந்தப் பொருளிலும் குவாலிட்டியே இருக்காது; அடுத்த முறை வேறொரு கடையில் தான் வாங்கவேண்டுமென முடிவு செய்து, வாங்கியும் விட்டோம். இது நன்றாகத் தன் பணியைச் செய்து, அப்பாடா என்ற பெருமூச்சையும் வரவைத்தது. ஆனால் விதி ப்ளாஷ்க்கை விட்டதா? இல்லையே. போன முறை ஊருக்குச் செல்லும்போது, ரயிலில் என் குழந்தைக்கு நன்றாகப் பயன்பட்ட இந்த ப்ளாஷ்க்கை, மறக்காமல் சென்னைக்குத் திரும்பும்போதும் சூடான பாலோடு எடுத்து வைக்கத் தவறவில்லை. மறுநாள் காலையில் தாம்பரத்தில் இறங்கி, வீட்டிற்குச் சென்று பார்க்கையில் ப்ளாஷ்க் இல்லை. நெல்லை எக்ஸ்பிரஸிலேயே போய்விட்டதா? இல்லை வீட்டிற்கு வந்த ஆட்டோவிலேயே திரும்பிப் போய்விட்டதா என இன்னும் புலப்படவில்லை.

ஒரு மாதத்தில் நான்கு ப்ளாஷ்க் வாங்கியும், எதுவுமே நம் வீட்டில் தங்கவில்லை. இனிமேலும் நமக்கு ப்ளாஷ்க் தேவையா? வேண்டவே வேண்டாமென குடும்பத்தோடு ஒரு மனதாக முடிவெடுத்து விட்டோம். இப்பொது எங்கள் வீட்டில் ப்ளாஷ்க் இல்லை; இனிமேலும் வாங்கப் போவதில்லை.

oOo

இப்ப சொல்லுங்க. விதி வலியதோ?

உழவன்

Wednesday, November 18, 2009

பிடித்ததெல்லாம் பிடித்ததுமல்ல; பிடிக்காததெல்லாம் பிடிக்காததுமல்ல

இப்போதெல்லாம் எதுவும் எழுதப்பிடிக்கவில்லை; எதுவும் எழுதத் தோணவுமில்லை. அப்படியே எழுதினாலும் அவைகளையெல்லாம் ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் இசையவில்லை. எனக்குப் பிடித்த என்னுடைய சில படைப்புகளெல்லாம் இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் அப்படியே தூங்கிக்கொண்டிருக்கின்றன. என் வாசிப்பு வட்டம் மைக்ரான் அளவிலாவது பெரிதாகிக் கொண்டே போகிறதோ; அதுதான் இதற்குக் காரணமோ என்ற எண்ணமும் கூட வருகிறது.

வாரத்திற்கொரு பதிவாவது போடவேண்டும் என்று தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டளையினால் எனக்குப் பிடிக்காமல் போன ஒரு சிலவற்றை வேறுவழியில்லாமல் பதிவிடும் சில சமயங்களில், நண்பர்கள் சிலருக்கு அது பிடித்தும் போகிறது. நண்பர்களாக இருப்பதனால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறதோ? இல்லை எனக்காக அவ்வாறு சொல்கிறார்களா? எந்த வாசகனுக்கு எது பிடிக்கும் என்ற சூத்திரம் தெரிந்தவன்தான் சிறந்த எழுத்தாளனாகிறான். அது எனக்கு எப்போது பிடிபடப் போகிறது?

சாத்தியமில்லாத ஒன்றைத் தன் கற்பனையால், அப்படி இப்படி என்று எழுதுவதெல்லாம் ஒரு கவிதையா? வாழ்க்கையை எழுதாமல் வேறு எதையெதையோ எழுதுகிறார்களே என்றெல்லாம் ஒரு கட்டத்தில் எண்ணியதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளின் மீது மனம் லயிக்காமல் போனது. ஆனால் இப்போதெல்லாம் அவைகள் மிகப் பிடித்துப்போயின. அவைகளை எழுதுவதற்கு எவ்வளவு பெரிய கற்பனை வளம் வேண்டும். அவற்றையெல்லாம் வியக்கிறேன் இப்போது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண், பார்ப்பதற்கு அழகாக இருக்கமாட்டார். நனைந்த பனைமர நிறம். உடல்வாகும் ஒரு வடிவத்திற்குள் அடங்காது. அழகு என்பது இவருக்கு சற்று அதிகமான தூரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவரைப் பார்க்கும்போது, இவளுக்கெல்லாம் எப்படி திருமணம் நடக்கப் போகிறதோ என்று எண்ணியதுண்டு. ஆனால் அவருக்கும் திருமணம் நடந்தது. அதுவும் காதல் திருமணம். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்தப் பெண்ணை ஒருவன் ஆண்டுக் கணக்கில் காதலித்திருக்கிறான். அப்படியென்றால் ஒருவனுக்குப் பிடிக்காது போன ஒன்று, வேறு எவருக்கோ பிடிக்கிறது என்றுதானே பொருள்.

எனது அலுவலகத்தில் இரண்டு வேளை உணவு இலவசம்தான். மதிய உணவு 45 பைசா/ஒரு இட்லி 7 பைசா என்றால் இலவசம்தானே. ஒருநாள் காலையில் ஆபீஸ் கேண்டீனில் இட்லி சாப்பிட்டபோது, எனது நண்பனொருவன் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வெறும் சர்க்கரை மட்டுமே வாங்கிக் கொண்டான். ஏனெனில் அவனுக்கு வடைகறி பிடிக்காதாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வந்தமர்ந்த இன்னொரு நண்பன் வடைகறியைக் கூடுதலாக வாங்கினான். அவனுக்கு வடைகறி ரொம்பப் பிடிக்குமாம். என்னடா இது! அவனுக்குப் பிடிப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை; இவனுக்குப் பிடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

இப்படி நிறைய ....

அதனால என்ன சொல்லவர்றேன்னா.. தலைப்ப இப்ப படியுங்க :-))

டிஸ்கி: யப்பா.. அமிர்தவர்ஷினி அம்மாவும், ஆ.ஞானசேகரன் அவர்களும் "பிடித்தது பிடிக்காதது" பற்றி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னை மன்னித்து, இதையே தொடர்பதிவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)
என்ன எழுதுறதுனே தெரியல; அதனாலதான் இப்படியொரு மொக்கை!!!

கடந்த வாரம் யூத்ஃபுல் விகடனின் முதல் மாத மின்னிதழ் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதில் என்னுடைய "சென்னை கிரிக்கெட்" எனும் கவிதையையும் வெளியிட்டமைக்கு யூத் விகடனுக்கு என் நன்றி! அக்கவிதையைப் படிக்க "இங்கே" கிளிக்கவும்.

உழவன்

Wednesday, November 4, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர்பதிவு

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?

பெயரில் மட்டுமல்ல; அடிப்படையில் நான் ஒரு உழவன். அவ்வளவே!
(நல்ல வேளை "சிறு" குறிப்பு என்று கேட்டீர்கள்)

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?

நான் ஒரு ரெட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் அது சற்று விலையுயர்ந்ததாக இருந்திருக்குமென நினைக்கிறேன். சில்வர் கலர்; நல்லா வெயிட்டாகவும் சற்று பெரியதாகவும் இருக்கும். அதில் ரோல் வெடியைச் லோடு செய்து விட்டு வெடிக்க ஆரம்பித்தால், ஒரே டமால் டமால் தான். எதுவும் மிஸ் ஆகாது. எனக்கு மிகவும் பிடித்த துப்பாக்கி அது. இரண்டு மூன்று வருடமாக அதை வைத்திருந்த ஞாபகம்.

எட்டோ ஒன்பதோ படிக்கும்போது என நினைக்கிறேன். என் அத்தை பையன் ஒருத்தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தான். எங்கள் வீட்டிலுள்ள ஒரு ரூமில் அடுக்குப் பானை இருக்கும். ஒவ்வொரு பானையிலும் ஊறுகாய், முருங்கை விதை, ஆமணக்கு முத்து.. இப்படி எதாவது ஒன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு பானையில்தான் இந்த துப்பாக்கியை வைத்திருப்பேன்.

இவன் கண்ணுல எப்படி அந்த துப்பாக்கி பட்டதுனு தெரியல. எனக்கு அந்த துப்பாக்கிதான் வேணும்னு ஒரே அழுகை. நான் விடுவேனா என்ன. அந்த துப்பாக்கியைத் தரமாட்டேன்னு நானும் அடம் பிடிச்சு அழுகிறேன். அவன் என்னை விட சின்னப் பையன் வேற. அதனால அவனுக்குததான் சப்போர்ட் அதிகமா இருக்கு. என்ன எப்படி சமாதானப் படுத்துனாங்கனு சரியா ஞாபகம் இல்ல. கடைசியில அவந்தான் ஜெயித்தான். இப்பவும் தீபாவளிக்கு அந்த ரெட்டைக் குழல் துப்பாக்கியை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை.

டிஸ்கி: இவனை மாதிரியே நானும் இன்னொரு சொந்தக்காரங்க வீட்டுக்கு கெஸ்ட்டா போனபோது, அவங்க எனக்குக் கொடுத்தது :-)

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

என் சொந்த ஊரில் தான் :-)

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?

தற்போது இருக்கும் சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டம் வெகு சிறப்பாகவே இருக்கும். அதற்கு சாட்சியாக நான் கண்டது வெடிகள்தான். தீபாவளிக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னரிலிருந்தே எங்கு பார்த்தாலும் வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

ஆனால் எனது கிராமத்தில் இருக்கும்வரை இந்த தீபாவளியை ஒரு பெரிய பண்டிகையாகக் கருதியதே கிடையாது. நகரப் பக்கம் வந்த பின்புதான் ஓ.. இந்த அளவிற்கு தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்களா என்று வியந்தேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. தீபாவளிக்குத்தான் கிட்டத்தட்ட எல்லா தொழிலாளர்களுக்குமே போனஸ் கிடைக்கிறது. அதனால்தான் மற்ற பண்டிகைகளைவிட இது சற்று செழிப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் கூட போனஸ் வாங்குகிற குடும்பங்களில் மட்டும்தான் புத்தாடை இருக்கும்.

நன்கு மழை பெய்து, விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் இந்த தீபாவளிப் பண்டிகை வரும். தீபாவளியன்று காலையில் இட்லியைத் தின்றுவிட்டு, அதையே தூக்குவாளியில் மத்தியான சாப்பாடாக எடுத்துக்கொண்டு, உழுவதற்கும், களையெடுப்பதற்கும் காடுகளை நோக்கி என் மக்கள் விரைந்து கொண்டிருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் காட்டிற்குச் சென்ற பின்பு, அவர்கள் கொடுத்து சில சில்லறைக் காசுகளூக்கு வெறும் பொட்டு வெடியை மட்டுமே வாங்கி வெடித்து விட்டு, வேறு யாராவது போடும் வெடிகளின் சத்தங்களை மட்டுமே கேட்டு மகிழ்ந்து கொண்டு, தீபாவளியை நிறைவு செய்யும் குழந்தைகள் இன்னமும் கிராமங்களில் இருக்கிறார்கள்.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?

தீபாவளி நேரத்தில் தி.நகரின் கூட்ட நெரிசலை நினைத்துப் பார்த்தேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கினால் போதும்; நம்மை தீபாவளிக்கூட்டமே அழைத்துக்கொண்டுபோய் ரங்கநாதன் தெருவில் விட்டுவிடும். அதனால் புத்தாடை எடுக்கவில்லை. இருந்தாலும் அகமதிக்கு எடுக்கவேண்டுமே. என் வீட்டின் அருகிலுள்ள ஒரு சிறிய கடையிலேயே அவளுக்கு மட்டும் ரெண்டு ட்ரெஸ் எடுத்தோம். அப்போது மனைவியும் புத்தாடை எடுத்துக்கொண்டார்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

முறுக்கு, முந்திரிக்கொத்து, பாசிப் பருப்பு உருண்டை.. அதிரசம் செய்வதற்கான ராமெட்டீரியலில் ஒரு சின்ன டெக்னிக்கல் ப்ராபிளம். சோ அதிரசம் கேன்சல்.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

அமிர்தவர்ஷினி அம்மா அளித்த பதிலையே இந்த இடத்திலும் போட்டுக்கொள்ளவும்.

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் தான். ஆனால் என்னையே தொலைக்கின்ற அளவிற்கு எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நண்பர்கள் பத்து பதினைந்து பேர் சேர்ந்துவிட்டால் பெரும்பாலும் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்க செல்வதுண்டு. தொடர்ந்தாற்போல் இரண்டு படங்களையெல்லாம் பார்த்த அனுபவமும் உண்டு. இந்த தீபாவளிக்கு படம் பார்க்க செல்லவில்லை.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

சொல்லிக்கொள்ளும் அளவில் அப்படி பெரிதாய் எந்த உதவியும் யாருக்கும் செய்யவில்லை.

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

முத்துச்சரம் ராமலட்சுமி
அம்மா அப்பா ஞானசேகரன்
என் வானம் அமுதா
மனவிலாசம் நவாஸ்


"அகமதியோடு கொண்டாடிய தீபாவளியைப் பற்றி சொல்லுங்க" என அன்போடு என்னை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்காகவும், மற்றும் "Scrumptious blog award" கொடுத்து தனது மேலான அன்பினைப் பகிர்ந்து கொண்டமைக்காகவும் "அமிர்தவர்ஷினி அம்மா" வுக்கு நன்றிகள்.


அகமதியோடு நாங்கள் கொண்டாடும் முதல் தீபாவளி என்ற ஒரு சந்தோசம் தீபாவளிக்கு முன்னரே இருந்தது. அவள் ஆறு மாதக் குழந்தை என்பதால், பலமாக வெடிக்கும் வெடிகளை வீட்டின் முன்னால் வெடிக்கவில்லை. புஸ்வானம், தரைச்சக்கரம்.. போன்ற வெடிக்காது ஒளி தரும் வெடிகளைக் காட்டலாமென்றால், அதற்கும் வீட்டில் தடா. அதிலிருந்து கண் கூசும் அளவில் வெளிச்சம் வருமாம். மற்றபடி தீபாவளியன்று அவளுக்கு நாங்கள் எடுத்தது போக, எங்கள் வீட்டிலும் எடுத்த எல்லா புத்தாடையையும் போட்டு அழகு பார்த்து, மனம் லயித்து அவளோடு விளையாடிய நினைவுகள் நிறைய! ஒவ்வொருவரும் பெற்றோர்கள் ஆன பின்பு, அவர்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே தங்களது குழந்தைகளுக்காகத்தான். அடுத்த தீபாவளிக்கு அவள் கையில் வெடியைக் கொடுத்து வெடிக்கச் சொல்லவேண்டும்.


அன்புடன்
உழவன்