Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, June 15, 2015

முதல் விருது - "செல்ஃபி சூழ் உலகு"

ஆர். கே. வி. பவுண்டேசன் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவின் சார்பில் நடைபெற்ற குறும்படப் போட்டி, கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சிக் கலையரங்கில், கடந்த  சனிக்கிழமை (13.06.2015) நடைபெற்றது. இப்போட்டியில் 49 குறும்படங்கள் கலந்துகொண்டன. முதல் பத்து இடங்களைப் பெரும் குறும்படங்களுக்கு பரிசும், இதில் முதல் மூன்று இடங்களைப் பெரும் குறும்பட இயக்குநர்களுக்கு பெரும்படம் இயக்கம் வாய்ப்பும் வழங்கப் பட்டது.

இப்போட்டியில் கலந்துகொண்டு, பத்தாவது இடத்தை "செல்ஃபி சூழ் உலகு" குறும்படம் பெற்றது என்பதை மிக மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


 6 நிமிடம் 36 வினாடிகள் ஓடக்கூடிய இப்படம், பார்ப்பவர்களுக்கு கொஞ்சமாவது பிடித்திருக்குமா, அவர்கள் மனதினில் ஏதேனும் ஒருவித உணர்வை ஏற்படுத்துமா என்கிற எதுவும் தெரியாமல், ஒருவிதக் குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தோம்.

படம் ஆரம்பித்த மூன்றரை நிமிடத்தில் விழுந்த கைதட்டல்கள் "செல்ஃபி சூழ் உலகு" க்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். அதன் பின்பான காட்சிகளின் முடிவில், பலத்த கைதட்டல்களோடு படம் நிறைவுபெற்றது மிக்க மகிழ்ச்சியைத் தந்ததோடு, பார்ப்பவர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் தருணமாகவும் அமைந்தது.


ஏற்கனவே சொன்னதுபோல், சினிமா பற்றிய எந்தவித அனுபவமும் இல்லாமல், ஏதோ ஒரு நம்பிக்கையில் எடுக்கப்பட்ட இக்குறும்படம் முதல் அங்கீகாரத்தைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியும், எனக்கு உறுதுணையாய் நின்ற நண்பர்களுக்கு நன்றியும்.


Wednesday, March 4, 2015

செல்ஃபி சூழ் உலகு - உருவான விதம்

சினிமா பார்த்த அனுபவத்தைத் தவிர வேறெந்த சினிமா பற்றிய அறிவும் இல்லாமல், ஒரு ஆர்வத்தில் எடுக்கப்பட்ட என் முதல் குறும்படம் இது.

உங்கள் ஆலோசனைகள் / விமர்சனங்கள் இன்னும் எங்களைச் செம்மைப் படுத்தும் என நம்புகிறோம்.

உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
உழவன் "நவநீத்"


Monday, May 14, 2012

"காதல் இயக்குநர்" - இது தேவையா?




வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. மசாலா படங்களுக்கு மத்தியில், இப்படி ஒரு படம் வந்திருப்பது தமிழ் சினிமாவிற்குப் பெருமைதான்.

இப்படிப்பட்ட படத்தை எடுத்துவிட்டு, இது ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் இயக்குநருக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அப்படி ஒரு சந்தேகம் வந்ததினால்தான், "காதல் இயக்குநர்" பாலாஜி சக்திவேலின் "வழக்கு எண் 18/9" என்று விளம்பரம் போடுகிறார்கள். இப்படி விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

"நல்ல படத்தில் யார் நடித்தாலென்ன? யார் இயக்கினாலென்ன? யார் தயாரித்தாலென்ன? இதுவும் ஒரு நல்ல திரைப்படம்" என்று மட்டும் டைட்டில் கார்டு போட்டுவிட்டு, யாருடைய பெயரையும் போடாமல், நேரடியாக படத்திற்குள் வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இப்படி போடுகின்ற தைரியம் வந்திருக்கவேண்டும். இனிமேலாவது யாருக்காவது வருகிறதா எனப் பார்க்கலாம்.

கோவை யமுனா திரையரங்கில் அரங்கு நிறையாத காட்சியில்தான் பார்த்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின்பு மனம் நிறைந்திருந்தது.

வழக்கு எண் - நம்பர் 1

உழவன்

Sunday, September 18, 2011

வந்தான் வென்றான்


ஜீவா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் "வந்தான் வென்றான்". படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை எப்படியெல்லாம் நம்மைச் சாகடிக்க முடியுமோ அப்படியெல்லாம் சாகடிக்கிறார்கள்.

இசை மகாகேவலம். இரண்டு பாடலை பொறுத்துக்கொண்டு கேட்கலாம்.

படத்தின் நாயகி தாப்ஸி ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருப்பதால் மட்டுமே படத்தின் ஹீரோவாக ஜீவாவைச் சொல்லலாம். மற்றபடி இவர் தான் ஹீரோ என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை.

படத்தின் பலமே சந்தானம்தான். நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் அதிகமான சம்பளம் சந்தானத்திற்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

படத்தின் கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீவா பிழைத்து விடுகிறார். ஆனால் தியேட்டரில் இருப்பவர்கள் எல்லாம் செத்துவிடுகிறார்கள்.

இறுதிக்காட்சியில் இயக்குநர் வருகிறார். (அவர் வரும்போது இவர்தான் டைரக்டர் என, சிலர் சொன்னது காதில் விழுந்தது). அவர் வருவது வேறு எதற்காகவும் இல்லை; படம் பார்த்தவர்கள் எல்லாம் இருக்கிறார்களா இல்லை போய்ச் சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்தத்தான்.

இப்படத்தைப் பார்க்கவேண்டும் என ஆசையாக உள்ளதா? போங்க. விதி யாரைவிட்டது.

Tuesday, August 2, 2011

சினிமா



வாரா வாரம் சினிமா பார்த்த காலமெல்லாம் போய்விட்டது. எப்போதாவதுதான் இப்போது சினிமா பார்க்க முடிகிறது. காரணம் குடும்பத்தோடு தியேட்டருக்கு எல்லா திரைப்படங்களுக்கும் செல்ல இயலாது. அதுமட்டுமல்லாது வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமும் இல்லை; வெளிவரும் அனைத்து படங்களும் பார்க்கக்கூடிய வகையில் இருப்பதுவுமில்லை. பத்திற்கு ஒன்று இரண்டுதான் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரக்கூடியதாக இருக்கிறது. இந்த வாரம் எதையாவது எழுதி ப்ளாக்கில் பதிவிட்டுவிடவேண்டும் என்பதற்காகவே எதையாவது எழுதுவதுபோலத்தான், இந்த சினிமாக்காரர்களும் என நினைக்கிறேன். எதையாவது சினிமா என்ற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்யவேண்டும் என்பது போலத்தான் பெரும்பாலும் திரைப்படங்கள் ரிலீஸாகிக்கொண்டிருக்கின்றன.

இப்படி இருந்தால்தான் நல்ல திரைப்படம் என்றெல்லாம் எதுவுமில்லை. படம் பார்க்கும்போது மனது வேறு எங்கும் பயணிக்காமல் திரைப்படத்தோடு ஒன்றிடவேண்டும். அவ்வப்போது மனது சபாஷ் சொல்லவேண்டும்; கண் கலங்கவேண்டும்; நம்மையறியாமல் கைதட்டவேண்டும். அது அங்காடித்தெரு போன்ற திரைக்கதையாக இருந்தாலும் சரி; சாமி போன்ற திரைக்கதையாக இருந்தாலும் சரி.

ஏவிஎம் ராஜேஸ்வரியில் வெற்றிக்கொடிகட்டு படத்தைப் பார்த்தபோது, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு எற்பட்டது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கோயம்பேடு ரோகினியில் மொழி திரைப்படம் முடிந்தவுடன், தியேட்டரே எழுந்து நின்று கைதட்டியது. இரண்டு வயதான என் மகள், என் மீது விழுந்து, தோளிலேறி விளையாடுவாள். பல சமயங்களில் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு கன்னம் அமுங்க முத்தமிடுவாள். அப்போதெல்லாம் அபியும் நானும் படம் நினைவிற்கு வரும். (ஞாபகத்திலிருக்கும் படங்களின் பெயர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன)

சில வாரங்களுக்கு முன்னர் வேங்கை பார்த்தேன். ஹாலிவுட் கதைகளைக் காப்பியடிக்கிறார்களென நாம் சில இயக்குநர்கள் மீது புகார் சொல்கிறோம். அப்படிப் பார்க்கையில் வேங்கையும் காப்பிதான். ஹாலிவுட் காப்பி அல்ல; இது லோக்கல் காப்பி. அவ்வளவுதான் வித்தியாசம். திரும்பத் திரும்ப ஒரே கதை (இதைக் கதை என்றெல்லாம் சொல்லமுடியாது). சண்டைக் கோழியில் பார்த்த அதே ராஜ்கிரன். சிவகாசியில் பார்த்த அதே பிரகாஷ்ராஜ்.

தெய்வத் திருமகள் ட்ரெய்லரை தொலைக்காட்சியில் பார்த்தபோது, விக்ரம் குழந்தைபோல நடித்திருக்கிறார்; படம் முழுக்க இப்படி லூசு மாதிரி பேசிப் பேசி கொன்னாலும் கொன்றுவாங்க என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் வெளியான பின்பு இதற்குக் கிடைத்த நிறைய பேரின் ஃபீட்பேக், என்னை இந்தப் படத்திற்குப் போகவைத்துவிட்டது.

கதாபாத்திரங்களின் தேர்வும், எண்ணிக்கையுமே இத்திரைப்படத்தின் பலம் எனச் சொல்லலாம். தேவையில்லாமல் வந்துபோகும் எந்தக் கதாபாத்திரமும் இல்லை. மிகத் தெளிவான திட்டமிடலோடு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. யார் என்ன சொன்னாலும் அதற்குக் கவுண்டர் டயலாக் விட்டு காமெடி பண்ணும் (பெரும்பாலும்) சந்தானம், இதில் மிக அளவாகவும் தெளிவாகவும் காமெடி செய்துள்ளார். படத்தைக் கலகலப்பாக்குவதே சந்தானம் மற்றும் அனுஷ்கா கூட்டம்தான். விகரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். கலக்கியிருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் அழகாக வந்துள்ளது. விக்ரமின் நண்பர்களாக வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் மிக உயரமான ஒருவரைப் பார்க்கும்போது பயமாகவும் பரிதாபமாகவும் உள்ளது.

காய்ச்சலில் துடித்துக்கொண்டிருக்கும் வக்கீல் நாசரின் மகனுக்காக, தன்னைப் பிடிக்கவரும் அனைவரையும் தள்ளிவிட்டு, ஓடிப்போய் மருந்து வாங்கிவந்து தந்துவிட்டு, தன்னை அடைத்து வைத்த அதே அறைக்குள் மீண்டும் விக்ரம் நுழையும்போது ஒரே கைதட்டல். மொத்தத்தில் மனதில் நிற்கும் திரைப்பட வரிசையில் தெய்வத் திருமகளும் ஒன்றாகிப்போனது. பல திரைப்படங்கள், நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன் என மற்றோரிடம் பெருமையாய்ப் பகிர்ந்துகொள்ளத் தோணாத வகையில்தான் இருக்கின்றன. ஆனால், நான் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்கிறேன் “நான் தெய்வத் திருமகள்” பார்த்துவிட்டேன் என.

இயக்குநர்களே.. இந்தப் படத்திலிருந்துதான் நான் இந்தக் கதையை எடுத்தேன் என நீங்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டால், அது உங்கள் பெருந்தன்மையைக் குறிக்கும். மாறாக கதையை வேறெங்கிலிருந்தோ எடுத்துவிட்டு, நானே அதற்குச் சொந்தக்காரன் எனச் சொன்னால் இவ்வுலகம் உங்களை ஏளனமாகப் பார்க்கும். நானே ரூம் போட்டு கதை எழுதுகிறேன் பேர்வழி என, ஹீரோவுக்காக எதையாவது எழுதி, நான்கு பைட், நான்கு பாடல், கொஞ்சம் கிளாமர் எடுத்து எங்களைச் சாகடிப்பதைவிட உலகின் எந்த மொழிப் படத்தையும் காப்பி அடித்தாவது ஒரு நல்ல தமிழ்ப் படத்தைத் தாருங்கள். தவறில்லை.

உழவன்

Thursday, February 24, 2011

ஆடுகளம் போல் சீடனும் மொக்கையா?

தனுஷின் சீடனுக்கு முந்தைய படமான ஆடுகளத்தை நிறைய பேர் அப்படி இப்படி என ஓகோவென புகழ்ந்து தள்ளினார்கள். வெற்றிமாறன் மதுரையை மல்லாக்கப் போட்டுக் காட்டினார்; திருப்பரங்குன்றத்தைத் திருப்பிப் போட்டுக் காட்டினார் என்றெல்லாம் எழுதினார்கள். படம் பார்த்த பின்புதான் தெரிந்தது அதன் லட்சணம். ஒரு ஓகே ரகம் படத்தை ஏன் தான் இப்படி சொன்னார்களெனத் தெரியவில்லை. அட போடவைக்கும் காட்சிகளெல்லாம் ஆடுகளத்தில் இல்லை.
 
ஆடுகளம் படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என நண்பரொருவரிடம் சொன்னபோது, எந்தப் படத்திற்குத்தான் ஹீரோயின் தேவை. ஒரு படத்திற்கும் தேவையேயில்லை என்று சொன்னார். அவர் சொன்னதும் சரிதான். கார்த்திக்கு மூடு ஏற்றத்தானே தமன்னா சிறுத்தையில் தேவைப்பட்டார். ஹீரோயின்கள் கவர்ச்சிக்காக மட்டுதான் தேவைப்படுகிறார்கள். ஆனால் அதுகூட ஆடுகளத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால் கூட, ஏதோ கொடுத்த காசிற்கு சமாதானம் ஆகியிருக்கலாம்.
 
நானும் பள்ளிக்காலத்தில், சேவல்க்கட்டு நிறையப் பார்த்திருக்கிறேன். சேவலின் காலில் அதற்கென இருக்கும் ஒரு கத்தியைக் கட்டிவிட்டுதான் சண்டைபோட விடுவார்கள். ஆடுகளத்தில் அந்தக் கத்தி பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்ததால் தப்பித்தார் வெற்றிமாறன்.
 
ஆடுகளத்தின் விளம்பரம்கூட இன்னும் சன் டிவியில் ஓயவில்லை. அதற்குள்ளாகவே சீடன் வெளிவருகிறான். எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை. எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். பலரின் சினிமா பற்றிய பதிவுகளை மட்டுமே படித்துவிட்டு, படத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். எப்போதுமே பதிவுலகம் சாராத உங்களது நண்பர்களிடமும் கேட்டுவிட்டு பொறுமையாக முடிவெடுங்கள் திரையரங்கிற்குச் செல்வதா வேண்டாமா என.
 
oOo
 
நேற்று நடந்த அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தபோது, குடிகாரனும், ஊற்றிக்கொடுத்தவரும் கைகோர்த்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அம்மாவிற்கு விஜயகாந்த் பூங்கொத்து அனுப்பி பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். கோவில் குளமெங்கும் அம்மாவிற்காக சிறப்பு பூஜைகள், பால் குடம் பன்னீர்க்குடம் என அம்மாவின் அடிவருடிகள் கோவிலைச் சுற்றி உருண்டார்கள். ஆண்டவன் என்ன நினைத்திருக்கிறானோ தெரியவில்லை. ஒருவேளை அம்மா ஆட்சியைப் பிடித்தால், அதிமுகவினர் நேராகத் திகார் ஜெயிலுக்குச் சென்றுதான் நன்றி சொல்லவேண்டும்.
 
oOo
 
இந்தக் கல்மாடி கல் மாதிரி ஊரெல்லாம் சுற்றிவருகிறார். முதலில் ஷீலாதீட்சித்தைக் கைது செய். அப்புறம் ஜெய்பால்ரெட்டி, எம் எஸ் கில்லைக் கைதுசெய். அப்புறமா கடைசியா என்னிடம் வா எனத் தில்லாகச் சொல்லிக்கொண்டு அலைகிறார். பிரதமர் என்னவென்றால், கூட்டணி தர்மத்திற்காக சிலவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார். என்னங்கடா டேய்... இங்க ஆபீசில் என்னனா, ரொம்பக் கறாரா இந்த ஆண்டுக்கான வருமானவரியை இம்மாதத்திலும், அடுத்த மாதத்திலுமாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மெடிக்கல் பில்லில் என் குடும்ப உறுப்பினர் பெயர் இல்லை என்பதற்காக, அதனை இங்கு நிராகரிக்கிறார்கள். இப்படி எங்களிடம் இருந்து பிடுங்கப்படும் வரிப்பணத்தை நீங்கள் லட்சம் லட்சம் கோடிகளாக அடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எவனை நம்புவதெனவே தெரியவில்லை. எல்லோரும் நாசாமா போக...
 
oOo
 
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக 13 நாட்கள் (26.02.11 முதம் 10.03.11 வரை) கலை இலக்கியத்திருவிழா நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் தலைமையில் கவிதைப் பட்டறை நடைபெறுகிறது. விருப்பமிருப்பவர்கள் கலந்துகொள்ளுவதற்காக இத்தகவல்.