எங்கள் ஊரில் ஒரு பெரிய புளியமரம் இருந்தது. அதற்கு இனிச்சமரம் என்றுதான் பெயர். அந்த மரத்திற்குப் பக்கத்தில்தான் நான் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு படித்த காலத்தில், எல்லா சிறுவர் சிறுமியர்களுக்கும் பள்ளி நேரம் தவிர்த்த ஏனைய பகல் பொழுதுகள் எல்லாம் இந்த மரத்தடியில்தான். ஆரம்பக் கல்விக்குப் பின்னர் வேறுவேறு ஊர்களுக்குப் படிக்கச் செல்லும் நிலை ஏற்பட்டதால் முன்பு போல் இந்த மரத்தடிக்குச் செல்ல முடியாமல் போனது. எப்போதாவது விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டுக்கு வரும்போது, இந்த இனிச்சமரத்தடிக்குச் செல்வதுண்டு. மரத்தடியிலும் கிளைகளின் மீது ஏறியும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களைக் கண்டு, தன் பழைய நினவுகளை அசைபோட்டுக்கொண்டே, காற்றிற்கு ஏதாவது பழம் விழுந்து கிடந்தால் எடுத்துச் சுவைத்துக்கொண்டு, பெருத்த மரத்தின் வேர்ப் பகுதியில் சிறிது நேரம் உட்காருவதுண்டு. சில நேரங்களில் மரத்தின் கிளைகளிலும்.சென்னைக்கு வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டதால், அங்கெல்லாம் இப்போது செல்வது ஏறக்குறைய நின்றே போய்விட்டது. ஊருக்குப்போவதே வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைதான் என்றிருக்கும்போது இனிச்ச மரமெல்லாம் நினைவில் கூட இருப்பதில்லை.
போன வாரம் நண்பனொருவன் திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எதிரே இருந்தவர் பரிமாறியவரைப் பார்த்து "என்ன மாப்ளே.. ரசத்துல புளிப்பே இல்ல. இனிச்சமரத்துப் பழம் போட்டாதான் புளிப்பே இருக்காது. ஆனா இப்ப இனிச்ச மரத்துப் பழமும் ஊருல இல்ல. பின்ன எப்படி ரசம் இப்படி இருக்கு" எனக் கேட்டார்.
"அட.. நம்ம இனிச்சமரம். இப்ப பழம் வேற இல்லேனு சொல்றாரு. அவ்வளவு வயசாச்சா அதுக்கு. போகும்போது பார்த்துவிட்டுதான் போகனும்" என முடிவு செய்தபின், பால்ய கால ஞாபகங்களோடு மரத்தின் திசைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
"சாய்ங்காலம் பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்ட பாத்து வர்றதில்லை; பையைக்கூட வீட்டுல வைக்காம அப்படி என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு; ஓடுல வீட்டுக்கு" இனிச்ச மரத்திற்கே வந்து அடித்து அம்மா எத்தனை முறை அழைத்துப் போயிருப்பாள். பள்ளியிலிருந்து நேராக இங்கு ஓடி வந்து பழங்களையும், ஒதக்காய்களையும் பொறுக்கி கால்சட்டையின் இரண்டு பைகளையும் எத்தனை முறை நிறைத்திருப்பேன். ஒதக்காய் என்று சொல்லக்கூடிய பாதி மட்டுமே பழுத்த அந்த பழத்தின் ஒட்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து, ஒவ்வொரு கொட்டையாகக் கடித்து சப்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நம்மால் அவனிடன் கொஞ்சம் கேட்காமல் இருக்கவே முடியாது. அவனிடம் கெஞ்சி வாங்குவதற்குள் இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்.
காமராஜ் கொஞ்சம் வித்தியாசமானவன். இனிச்சமரத்துப் பழங்களைப் புத்தகப் பைக்குள் வைத்திருந்து, பதினோரு மணிக்கு விடப்படும் பத்து நிமிட இடைவேளையின் போது, ஒரு பழம் ஐந்து பைசா என்று விற்பான். அதுவும் விற்றுத் தீர்ந்துவிடும்.
எல்லாக் காலங்களிலும் புளியமரம் காய்ப்பதில்லை. இருப்பினும் மரத்தில் ஏறி விளையாட, கோலி, பம்பரம், ஊஞ்சல் என எல்லாவற்றிற்கும் எங்களுக்கு இந்த இனிச்சமரம்தான். "பள்ளிக்கூடத்த இனிச்ச மரத்துக்கு மாத்திட்டாங்களா?" என்று சொல்லுமளவிற்கு ஒட்டு மொத்த பள்ளிக்கூடமே மாலை வேளையில் இங்குதான் இருக்கும்.
பின்னால் இருந்து வந்த சைக்கிளின் மணியோசை, என் மனதினுள் விண்டோஸ் மீடியா பிளேயரில் ஓடிக்கொண்டிருந்த பழைய நினைவுகளை pause செய்தது. திரும்பிப் பார்த்தால் காமராஜ். "என்ன காமராஜ் புளி வியாபாரமா?" சைக்கிள் கேரியரைப் பார்த்துக் கொண்டே கேட்டேன். "ஆமாம்பா.. புளியோ பூண்டோ எது கெடச்சாலும் விக்க வேண்டியதான" சொல்லிக் கொண்டே சென்றுகொண்டிருந்தான் அதே காமராஜ்.
இதோ வந்துவிட்டது; பால்காரர் வீட்டை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பினால் இனிச்சமரம் கண்ணில் பட்டுவிடும். சற்று வேகமாகவே கால்கள் இயங்குகின்றன. "ஆஹா.. மரத்தக் காணோமே; அந்த இடத்துல பெரிய கட்டடம் ஒன்னு இருக்கு" இயங்கிய கால்கள் தயங்கி நிற்கின்றன. இனிச்சமரத்தையே வெட்டும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் வந்தது. அப்படி அது என்ன கட்டடம் என்றுதான் பார்த்து விடுவோமே என எண்ணியவாறே மெதுவாய் நடக்கிறேன். "பிரபாத் மேச் பாக்டரி" என எழுதப்பட்ட போர்டு இப்போது தெளிவாகத் தெரிகிறது. எட்டயபுரத்தில் தானே இந்த தீப்பெட்டி ஆபீஸ் இருந்தது. இப்போது இங்கும் ஆரம்பித்திருக்கிறார்களா. அருகினில் சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறேன். இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.
உழவன்



