Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts
Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts

Thursday, September 24, 2009

உலகை வெல்வோம் !


மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !

தொட்ட உயரமே
கடைசியுமில்லை !

எழுந்து வா . . .

உலகை வெல்வோம் !

உழவன்

யூத்ஃபுல் விகடனில் இக்கவிதையைப் படிக்க இங்கே க்ளிக்கவும்
நன்றி: யூத்ஃபுல் விகடன்

விருப்பமிருப்பின் இப்படைப்பை "பூக்களிலிருந்து சில புத்தகங்கள்" எனும் நூலுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

Wednesday, July 15, 2009

காதலித்துப் பார் !

முந்தானை
சரிந்து கிடந்தாலும்
கண்கள்
காண மறுக்கின்றன !

எதிர்ப்படும்
பெண்களோடெல்லாம்
வாழ்ந்து பார்த்த
ஒரு வினாடிப்
பகல் கனவுகள்
இப்போதெல்லாம்
வரமறுக்கின்றன !

ஆபாசக் கதைகள்
படித்ததையும்
நீலப் படங்கள்
பார்த்ததையும்
பாவம் என்றே
சொல்கின்றன
என் மனங்கள் !

பல்லைக் காட்டி
படுக்கைக்கு அழைக்கும்
பரத்தையரைக் காணும்போது
இதயத்தில்
இரக்கமே
மேலோங்கி நிற்கிறது !

எதேச்சையாகக் கூடக்
கவர்ச்சிப் படங்களைக்
காணக் கூடாதென
கண்கள் வேண்டுகின்றன !

இவ்வாறெல்லாம்
மாறுபட்டிருக்கும்
மனதிடம் கேட்டேன்
காரணம் என்னவென்று!

மனம் சொன்னது
நீயொன்றும் யோக்கியனல்ல;
காதலிக்க ஆரம்பித்துவிட்டாயென்று !

ஆம் ...
காதலித்துப் பார்
காமம் கூட செத்துப்போகும் !

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

Monday, July 13, 2009

நாங்களும் பாரதிதான்

ஆடையைக்
கண்டுபிடித்தவன்
கண்ணத்தில்
ஓங்கி ஒரு
அறை
விடவேண்டும் !

உடல் மறைக்க
எப்போது நினைத்தானோ
அன்றுதான்
நான்கு சுவர்
தேவைப்பட்டிருக்கும் !

எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !

ஒரு வகையில்
நாங்களும்
காணி நிலம் கேட்கும்
பாரதிதானோ !

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

Wednesday, June 24, 2009

டீ ... காபி ...

தெருவெங்கும் டீ கடை
தேடாமல் கிடைக்கும் கடை !

விருந்தாளி வந்தாலும்
விருந்தாளியா நீ
போனாலும்
டீயோ காபியோ நிச்சயம் !
இது
யாரும் மறுக்காத சத்தியம் !

கரிசல் காட்டில்
களை எடுத்தாலும்
டைடல் பார்க்கில்
கோடு அடித்தாலும்
டீ குடிக்காத நாள்
இருந்ததில்லை
கதை பேசாமல்
குடித்ததுமில்லை !

டீ கடை பெஞ்சும்
தினத்தந்தி பேப்பரும்
இல்லாத ஊரு
இருக்குதா இங்க !
காபியிலதான்
பொழுதே விடியுது
பாருங்க !

ஸ்ட்ராங்குனு சொல்றான்..
லைட்டுனு சொல்றான்..
எத்தனை
வகையோ இருக்கு !
வடையோடு குடித்தால்
தனிச்சுவையே இருக்கு !

கருப்பட்டி உடைத்து
இஞ்சி தட்டி
பக்குவமாய்
பாட்டி கொடுத்த காபி
பட்டணத்தில்
எங்கே இருக்கு !

தேனீர் விருந்து
தேசத்தின் விருந்தோ !
தேசமே குடிப்பதால் -இது
தேசிய பானமோ !!

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

Wednesday, June 10, 2009

மஞ்சள் சட்டை - நன்றி விகடன்

ஆடி மாத
அம்மன் கோவில்
பொங்கல் விழா!

பொழைக்க வந்த
பூமி விட்டு
பொறந்த பூமிக்கு
போகுற நேரமிது!

மாலையில ஏறிய ரயிலு வண்டி
மறுநாள் காலையில இறக்கிவிட
பெத்தவ(ள்) இருக்கும்
பக்கத்து ஊருக்குப் போக
மொத்தமா நாங்க காத்திருக்க

'கரிசல் குயில்' னு ஒட்டிய ஸ்டிக்கரோடு
கலர்புல்லா வந்தது மினி பஸ்!

கொண்டு வந்த உடைமையோடு
முண்டியடிச்சு உள்ளே ஏற
வண்டிக்குள்ள இடமில்லாம
ஏணி பிடிச்சு ஏறினோம் பஸ் மேல!

ஆடிக் காத்து லேசா அடிக்க
ஆனை போல அசைஞ்சு போறோம்
ஆண்டு ஒன்னு கழிஞ்சு போச்சு
ஆத்தா அப்பன பார்க்கப் போறோம்!

பனையோலைச் சத்தம் கேக்கும்போது
பதநீ குடிச்ச ஞாபகம்
சுடுகாடு வரும்போது
சுருக்குப்பை காசு தந்த
சுப்பம்மா பாட்டி ஞாபகம்

ஊருணி வந்திருச்சு
ஊருவாசம் அடிச்சிருச்சு
ஊரு எல்லை அய்யனாரை
உள்ளுக்குள்ள வணங்கியாச்சு!

ஆயிரம் நினைவுகள்
அரை நொடியில் வந்து போனாலும்
அவ நெனப்பு மட்டும்
அடி மனசுல தங்கிருச்சு!

அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு
பெத்தவ(ள்) அவ நினைக்க
ஏனிங்கு வந்தேன்னு
எனக்குத் தான தெரியும்!

போன வருஷப் பொங்கலுக்கு
மஞ்சத் தண்ணி ஊத்தி நனைச்சா
எம் மனசை ஈரமாக்கி
ஒரு வருஷமா தவிக்க வைச்சா!

நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

Monday, June 1, 2009

சொந்த மண்ணில் ...


வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா !

உழவன்

நன்றி: இக்கவிதையை வெளியிட்ட யூத்ஃபுல் விகடன்

Wednesday, May 6, 2009

விகடன் தேர்தல் களம் 2009ல் ...


அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

ஈழதேசமே...
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?

நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!

மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!

வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!

உழவன்

நன்றி: விகடன் தேர்தல் களம் 2009

Monday, April 27, 2009

தங்கம் வாங்கலயோ தங்கம் - கவிதை

கட்ட வண்டி போட்டுக்கிட்டு
காடுமேடு உழுதுக்கிட்டு
கட்டையில போறவரை
கால் வயிறு குடிச்சதுபோக சேர்த்தாலும்
ஒரு சோடிக் கம்மல் கூட
ஒரே தவணையில வாங்கிடுவேனோ தெரியல!
சமைஞ்ச ரெண்டு பொண்ணுங்களுக்கும்
தாலி எப்போ ஏறுமோ தெரியல!

வானம் பார்த்த பூமியில
பொன்னு எங்க வெளயுது?
பொன்னு விலைதான் தினமிங்க ஏறுது!
கூலி வேலைக் காசுலதான்
குடும்பமே நடத்தும் போது
செய்கூலி சேதாரத்துக்கு
நாங்க எங்க போறது?

தலைப்புச் செய்தி கேட்டதில்லை
தங்க விலை கேட்க தவறுவதில்லை
விஷம் போல ஏறும் விலை கேட்டு
ரசம் தவிர வேறெதுவும் உண்டதில்லை!

மூத்தவளுக்கு வாங்குன மூக்குத்தியே
ஆயுள அடகுக் கடையில கழிக்கும்போது,
அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குனா
ஆண்டு முழுமைக்கும் செல்வம் பெருகுமென
கவர்ச்சி விளம்பரம் காட்டினாலும்,
கால் பவுனு வாங்கக்கூட
கடனுக்கு கைநீட்டும் வாழ்க்கையில
தங்கம் எங்க வாங்குறது!

பொன்னு வாங்க முடியாத எங்களுக்கு
வாங்குவதற்கும் இருக்குதோ நல்ல நாளு?
வாங்குகிற நாளே எங்களுக்கு நல்ல நாளு!

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

Friday, April 24, 2009

கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம் - சிறுகதை

அந்தா இந்தானு மொத்தம் ஒரு முன்னூறு ரேஷன் கார்டு இருக்கும். சின்ன ஊர்தான் இது. ஆனாலும் தனி பஞ்சாயத்து. பக்குவமா மழை பேஞ்சி நல்லா உழவு வர்ற பருவம் இது. கஞ்சிய குடிச்சிட்டு, கைல தூக்கு வாளியோட வர்றான் பாசம்.

ம்..ம்.. காளியண்ணே.. கரை வேட்டியோட காலயிலேயே கெளம்பியாச்சு போல. இன்னும் உன் மேலக்காடு உழாம கெடக்கு. இன்னிக்கு சரியான பருவம்ணே. உழுது அஞ்சாறு கம்பரிசியை போட்டுட்டா ஈரப்பதத்துலயே அதுவாட்டு வந்துரபோகுது.



சரிதான் பாசம். என்ன பண்ண சொல்ற; கட்சி ஜோலினு வந்திருச்சினா, நம்ம தான பாக்கனும். எம்எல்ஏ வர ரெண்டு நாளுதான்பா இருக்கு. வந்து கொடியேத்துறார்ல நம்ம ஊர்ல. அதான் கட்சி ஜோலியா போய்க்கிட்ருக்கேன்.

அந்த ஊர பொறுத்த மட்டும், காளிதான் அவங்க கட்சிக்கு எல்லாமே. வட்டம், மாவட்டம், எம்எல்ஏ இப்படி யாரு வந்தாலும், ஓடிப்போயி ஒரு மாலையை போட்டு முன்னாடி நிப்பாரு. கொடியேத்தி மிட்டாய் குடுக்குறதுல இருந்து, தலைவர் பொறந்த நாளைக்கு தெரை கட்டி படம் போடுறது வரைக்கு, ஒரு பத்து பேர சேத்துக்கிட்டு, வறட்டு கவுரவத்துக்கு எல்லாத்தயும் பண்ணுவாரு.

ஏலே.. ஆஃப்பாயிலு..எட்டரை கேடிசி போயிருச்சாலே? இல்லணே.. வர்ற நேரம்தான்.
ஆஃப்பாயிலுங்கிறது இவன் பேரு இல்ல. இவன் அப்பன் பேரு. ஆஃப்பாயிலு இல்லாம ஒருநாளும் சாப்பிடமாட்டானாம் இவன் அப்பன் ஆறுமுகம். "ஆஃப்பாயிலு இல்லாத சாப்பாடு அரைச் சாப்பாடுடா" இதுதான் இவன் அடிக்கடி சொல்ற பழமொழி. அதனால ஊரே இவன இப்படித்தான் கூப்பிடும். அப்பன் பேரு புள்ளைக்கும் தொத்திக்கிச்சு.

அதென்ன கேடிசி னு நினைக்கிறீங்களா? அரசாங்கம் பேர மாத்தினாலும், எங்க ஊருக்கு வர்ற பஸ்ஸ கேடிசி னு தான் இப்பவும் சொல்லுவோம்.


ஏல பாண்டி .. எங்கல போன இவ்வளவு நேரம்? வாயெல்லாம் புண்ணு மாமா. அதான் வீட்டுல வெந்தயக்களி கிண்டுனா. ஒரு வாயி தின்னுட்டு வர்றேன்.

அது சரி.. சொல்றத நல்லா கேட்டுக்கோ. இன்னிக்கு ராத்திரி அவங்க நட்டுற புது கொடி கம்பத்த நம்ம வெட்டுறோம். போனவாட்டி அவன் வீட்டு சுவத்துல நோட்டீசு ஒட்டுனதுக்கே அம்புட்டு சண்டை போட்டான் காளி. பேசிகிட்டு இருக்கும்போதே உன் செவுல்ல வேற அடிச்சிட்டான்ல. எதாவது ஒன்னு பண்ணியே ஆகனும்டா.

கொடிக்கம்புக்கு பெயிண்ட் அடிச்சிக்கிட்டு இருக்காங்க. பத்து மணிக்குள்ள நட்டிட்டு எல்லாரும் போயிருவாங்க. நம்ம மொத கோழி கூவுறதுக்குள்ள கொடிக்கம்பத்த வெட்டி சாய்க்கிறோம். கெடைக்கிற ஒரு மொழக் கம்புலதாண்டா அவனுங்க காலைல கொடி ஏத்தனும். அவங்களுக்கு நாலு பேருனா, நமக்கும் நாலு பேருனு புரியனும். கோபமாகவும் நிதானமாகவும் பேசி முடித்தான் கொண்டுசாமி.

இப்படித்தான் இவனுங்களுக்குள்ள கட்சி பேர வச்சி அப்ப அப்ப சண்ட வரும். சிலநேரம் அடிச்சுக்குவாங்க. கட்சி மேல அவ்வளவு பாசமாம். ஒரு ஊருக்குள்ள இருந்துக்கிட்டு மூஞ்சி குடுத்து பேசமாட்டானுங்க. சல்லிக்காசு பெறாத விஷயத்துக்கெல்லாம் சட்டைய கிழிச்சுக்கிடுவாங்க. தொடர்ந்து மூணு நாளைக்கு வேலைக்குப் போகலனாலே, உலை வைக்கவே திண்டாடுவானுங்க. இருந்தாலும் வறட்டுக் கவுரவம் கொறயில்லாம இருக்கும்.


சொன்ன மாதிரியே வெட்டிடானுங்க. பொழுது விடிஞ்சது. விஷயம் ஊருபூராம் தெரிஞ்சது. பச்ச மிளகா கடிச்ச மாதிரி சும்மா சுள்ளுனு நின்னான் காளியும் அவன் ஆளுங்களும். இந்த சின்ன ஊர்ல வெட்டுனது யார்னு தெரியாமலா போகும். ஒருத்தன் கைய வெட்டுவேன்றான். இன்னொருத்தன் தலய வெட்டுவேன்றான். காபி கடையே காலியாக் கெடக்கு. அவ்வளவு பேரும் கொடிக்கம்பம் இருக்கிற களத்து மேட்டுலதான் இருக்காங்க. ரெண்டு மூணு பெருசுங்க தலயிட்டதால, ஒருவழியா அப்போதைக்கு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இப்படி அடியும் புடியுமா இவங்க காலம் ஓடிக்கிட்டு இருந்தப்பதான் இந்த சம்பவம் நடந்திச்சு.



இவ்வளவு சீக்கிரம் இப்படி நடக்கும்னு இவனுங்க யாரும் நெனச்சுப் கூடப் பாத்திருக்க மாட்டானுங்க. வரப்போற சட்டசபை தேர்தல மனசில வச்சி, கட்சியப் பலப்படுத்தனும்னு, இவனுங்க கட்சியும் அவனுங்க கட்சியும் கூட்டணி வச்சுக்கிடுச்சி. ரெண்டு கட்சி தலைவர்களும் கை கோர்த்துக்கிட்டு எடுத்த போட்டா, பேப்பர்ல மொத பக்கத்தில இருக்கு.

அப்புறம் என்ன.. அய்யய்யோ... தாயா புள்ளயா பழகுற ஒரு ஊருக்குள்ள, இவ்வளவு நாளா யாருக்காகவோ அடிச்சிக்கிட்டு கெடந்தோம்னு புரிஞ்சதுக்கு அப்புறம், இப்பதான் சண்ட சச்சரவு இல்லாம நிம்மதியா காலத்த ஓட்டுறாங்க. பொண்டாட்டி, புள்ள, குடும்பம்னு அவன் அவன் நிம்மதியா இருக்கான். குடிசையில எதுக்குங்க கொடி?


உழவன்

இச்சிறுகதை இளமை விகடனில் 22.04.2009 அன்று வெளியாகியுள்ளது.

Wednesday, April 15, 2009

தேர்தல் - கவிதை

குத்தி
மடித்தது போய்
பொத்தானை
அழுத்தும்
காலம் !

இன்னும்
நாங்கள் தான்
அப்படியே !

உழவன்
இக்கவிதை 15.04.2009 அன்று இளமை விகடனில் வெளியாகியுள்ளது.

Wednesday, April 1, 2009

தேர்தல் அதிசயங்கள்!

அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்
'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!
கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்
சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!
பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!
கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!
கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்
கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!
அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
உழவன்
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 01.04.2009 அன்று இடம்பெற்றுள்ளது.

Sunday, March 8, 2009

பெண்ணினமே வாழி நீ!

இயற்கை ரசிக்கும் ஓவியம் நீ
இடையில் குடம் சுமக்கும் அதிசயம் நீ
எவனும் தொழுகின்ற தாய் நீ
சிவனின் உருவத்தில் பாதி நீ
தவழும் குழந்தையறிந்த உலகம் நீ
உலவும் இளைஞன் அறிந்த காதலி நீ
வெட்கம் தெரிந்த ஒரேயினம் நீ
காதல் தந்த பூவினம் நீ
சிசு சுமக்கும் சிற்பம் நீ
சிகரம் தொடும் மேகம் நீ
தாயாய் தாரமாய் வீடாள்கிறாய் நீ
பாசமாய் காதலாய் உள்ளமாள்கிறாய் நீ
கட்டிலுக்கும் தொட்டிலுக்குமே
ஒரு காலத்தில் வாழ்ந்தாய் நீ
சட்டத்தையும் பட்டத்தையும்
எட்டிப்பிடித்தவளாய் இன்று நீ
சாலையோரச் சாப்பாட்டால்
சாகப் போகும் நாக்குக்கு
புதுப்புதுச் சுவையால் உயிரூட்டும்
ஏழாம் சுவை நீ
நொடிப் பொழுதில் விழியோரம்
உப்பு அருவி கொட்டுவாய் நீ
என்ன வரத்தால்தான் அதைப் பெற்றாய் நீ
மதுரையை எரித்த கோபமும் நீ
மஞ்சள் பூசும் சாந்தமும் நீ
பெண்ணாய்ப் பிறந்ததே
பெருமையென்று நினைப்பாய் நீ
எனைப் பெற்றெடுத்த
பெண்ணினமே வாழி நீ !
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 09.03.2009 ல் இடம்பெற்றுள்ளது.

http://youthful.vikatan.com/youth/uzhavanpoem090309.asp

Wednesday, March 4, 2009

விகடனில் என் கவிதை - ஈழத் தாலாட்டு!

ஈழத் தாலாட்டு!
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
மேலும் படிக்க ...
 
 
 
இதே கவிதை என் வலைப்பூவில்..
 
 
 
அன்புடன்,
உழவன்

Thursday, January 22, 2009

ஈழத் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..
பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..
சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !