Monday, May 8, 2017

இங்கிலாந்து பயணம் - 3

மதிய உணவிற்குப் பின், அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்போம். புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் புகைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அரை மணி நேரத்தில் தெர்மோகோல் முதல் அனைத்து விஷயங்களும் பேசப்பட்டிருக்கும்.

ஆனால் UK அலுவலகம் அலுவலகம் வந்தபின்பு மதிய உணவுக்குப்பின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். சாப்பிட்டு முடித்த பின் நேராக இருக்கைக்கே சென்றுவிடுவது. ஆனால் இங்கு இருக்கும் சக ஊழியர்கள் மதிய உணவை விரைவாக முடித்துவிட்டு, நண்பர்களோடு குழுக் குழுவாக சுமார் அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இப்போது நானும் என்னோடு வந்த சக நண்பர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டோம்.

அப்பாதை ஒரு சிறிய கால்வாயை ஒட்டி மரம் செடி கொடிகளுக்கு நடுவே செல்கிறது. வெயில் இங்கு சுத்தமாக இல்லாததால் ஜெர்கின் அணிந்து கொண்டு சிறு குளிரில் இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கொண்டே நடப்பது அருமையாக இருக்கிறது.

அந்தக் கால்வாயில் நீர் நிறைந்திருக்கிறது. சில படகுகள் காணப்பட்டன. இக்கால்வாய் பற்றிய கதையை சக ஊழியர் ரிச்சர்ட்டிடம் கேட்டபோது, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்து வசதிக்காக இக்கால்வாயை ஏற்படுத்தினார்களாம். இப்போது சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இங்கு வந்துவிட்டதால் இப்போது இக்கால்வாயை போக்குவரத்திற்கு பயன்படுத்துவது இல்லையாம்.

மாறாக படகு சவாரிக்காக இப்போது பயன்படுத்தப் படுகிறதாம். இந்தப் படகை வாடகைக்கு எடுத்து இரவில் கூட தாங்கிக்கொள்ளலாம் என்றார் . இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கால்வாய் கழிவு நீர் கலக்காமல் அப்படியே இருக்குறது என்பது கூவத்தைக் கொண்ட நமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

செல்லும் வழியில் இருந்த ஆப்பிள் மரத்தையும், செர்ரி மரத்தையும் காட்டினார்கள். ஆப்பிள் இப்போதுதான் பூக்கத் தொடங்கியுள்ளது. மரம் முழுக்க பூக்கள். செர்ரியில் காய்கள் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. இனி தினமும் இப்பாதையில் அரைமணி நேரம் நடைப்பயிற்சிதான்.

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

06 May 2017

https://m.facebook.com/story.php?story_fbid=1422785854444197&id=100001383893870

1 comment:

Yaathoramani.blogspot.com said...

கொஞ்சம் மாறுபாடாகத்தான் இருக்கிறது
நாம் சாலைப் போக்குவரத்தில் இருந்து
கால்வாய்க்கு மாற முயற்சிக்கையில்
அவர்கள் அதிலிருந்து இதற்கு
மாறியது

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்..