Thursday, May 18, 2017

இங்கிலாந்து பயணம் - 4

வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று முகத்தை முட்டை போல் வேகவைக்கிறது. சமீப தினங்களில் இப்படிப்பட்ட வாக்கியங்களைத்தான் அதிகமாகப் படிக்க முடிந்தது. வெயிலே இல்லாத குளிர் பிரதேசமான கிரேட் பிரிட்டனுக்கு வந்து இருபது நாட்கள் ஆகின்றன. இருந்தபோதும் நம்மூர் வெயிலின் அளவை தினமும் கேட்கும்போது கொஞ்சம் மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கும். அதுவும் நேற்று சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் இருந்தது என்கிற செய்தி கவலைக்குரியதாக இருந்தது.

நான் தங்கியிருக்கும் சர்வீஸ் அப்பார்ட்மெண்டின் வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம், வெயிலைப் பற்றிப் பேசியபோது வெயில் எப்போது வரும் எனக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நம்மூர் வெயிலின் வெப்ப அளவைச் சொன்னபோது "ஓ .. இவ்வளவா, நான் எரிந்து விடுவேன்" என்றார் .

கடந்த பிப்ரவரி மாதம் எங்கள் கோவை அலுவலக்கத்திற்கு  இங்கிருந்து சக ஊழியர் ஒருவர் வந்தார். மதிய உணவுக்குப்பின் வெளியே வந்து புல் தரையில் நின்று பேசிக்கொண்டிருப்போம். இவரால் பத்து நிமிடம் கூட நிற்க முடியாது. வியர்த்து சட்டை ஈரமாக ஆரம்பிக்கும். "நின்றது போதும்; வாங்க போகலாம்" என்பார்.

வெயிலோ மழையோ குளிரோ. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அதன் மீது ஒவ்வொரு கருத்து வைத்திருக்கிறார்கள். அதுதானே இயற்கை. தமிழகம் முழுக்க பல பகுதிகளில் மழை என்கிற செய்தியை நேற்று இரவு படித்தபோது மனம் கொஞ்சம் குளிர்ந்தது .

No comments: