Showing posts with label அகமதி. Show all posts
Showing posts with label அகமதி. Show all posts

Tuesday, August 13, 2013

முட்டைச் செடி

நேற்று காலை அலுவலகம் கிளம்பும்போது லேசான மழை. சிறிது நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். மழை நிற்பதுபோல் தெரியவில்லை. ரெயின் கோட்டை மாட்டிகொண்டு கிளம்பிவிட்டேன். 

அலுவலகத்தில் எல்லா க்யுபிகிலும் கொஞ்ச நேரம் மழை பற்றிய பேச்சாகவே இருந்தது. சிலர் நனைந்திருந்தர்கள்; சிலர் லேசாக நனைந்திருந்தர்கள்; சிலருக்கு பேன்ட் மட்டும் நனைந்திருந்தது.

கொஞ்சம் கூட நனையாமல் இருந்த ஒருவரிடம், "நீங்க வரும்போது மட்டும் ழை பெய்யலயா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், " பஸ் ஏறும்போது மழை பெய்யல. பஸ்ல வரும்போது மழை. செம கடுப்பாகிட்டேன். நல்ல வேளை இறங்கும் போது மழை இல்ல" என்றார்.

மாதம் ரெண்டு முறை பெட்ரோல், டீசல் விலை ஏறுது; சாதிக் கொடுமைகள் இன்னும் இருக்கு; அம்மாவை  யானை முட்ட வந்திருக்கு ; காங்கிரஸ் அரசு முடிய இன்னும் பல மாதம் இருக்கு; இப்படி நிறைய பிரச்சனை இருக்கும்போது, இதுக்கெல்லாம் கடுப்பாகாதவங்க, மழை பெஞ்சா கடுப்பகுறாங்க.

ஒன்னு தெரியுமா உங்களுக்கு.. இப்ப பெய்யுற மழையால தனக்கு நட்டம்னு தெரிஞ்சா கூட, மழையை எந்த விவசாயியும் சபிக்க மாட்டன். கடுப்பாக மாட்டன்.


*

நேற்று வெண்பாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முட்டை எங்கிருந்து வருகிறது? எனக் கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் "முட்டை, முட்டை செடியில இருந்து வருது" என்றாள்.

ஞே என ஆகிவிட்டது எனக்கு.

அவளுக்கு காட்டுவதற்கு என் வீட்டிலும் கோழி இல்லை. பக்கத்துக்கு வீடுகளிலும் கோழி இல்லை. கடையிலிருந்து மட்டுமே முட்டை வாங்கி வருவதை பார்த்திருக்கிறாள். நான் அவளிடம் முட்டை கோழியிலிருந்து கிடைக்கிறது எனச் சொன்னபோது, "அப்பா.. தாத்தா ஊர்ல கோழி பார்த்திருக்கேன்; ஆனா அது அப்ப முட்டையே வைக்கலையே" என்றாள். எங்கள் ஊரில் இன்னமும் எங்கள் வீட்டில் ஆடு, மாடு, கோழி வளர்க்கிறார்கள். அவள் ஊருக்கு செல்லும்போது கோழி முட்டை விடவில்லை போலும். அதனால் அவளுக்கு இது தெரியாமல் போனது போல. 

கோழியைப் பிடித்து சுண்டு விரலை விட்டு, முட்டை இருக்கிறதாவென பார்த்துவிட்டு, சாக்கை விரித்து கோழியைப் படுக்க வைத்து, கூடையால் மூடிவைத்தவன் நான். முட்டை வைத்த பின்னர் கோழியைத் திறந்துவிட்டு முட்டையை எடுத்து பத்திரமாக அடுக்குப்பானையில் வைப்பேன்.

நல்லவேளை பால் கறப்பதைப் பார்த்திருக்கிறாள். அதனால் பால் மாட்டிலிருந்து கிடைக்கிறது என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. தாத்தாவுக்கு போன் போட்டு, கோழி முட்டை வைக்கும்போது சொல்லுங்க; நான் ஊருக்கு வந்து பார்க்கணும் எனச் சொல்லியிருக்கிறாள்.


*

Tuesday, June 4, 2013

புது 'ஓடி விளையாடு பாப்பா'

"பாரதியார் புக்கை எடுத்துக் குடுங்கப்பா" என நேற்று அகமதி வெண்பா கேட்டாள். எடுத்துக் கொடுத்தவுடன், அதனை அம்மாவிடம் காட்டி, "அம்மா எனக்கு ஓடி விளையாடு பாப்பா சொல்லிக்கொடு" என்றாள். அதற்கு உனக்குத்தான் ஓடி விளையாடு பாப்பா தெரியும்ல; சொல்லு பார்ப்போம் என்றவுடன் "மறந்து போச்சுப்பா" என்றாள். 

ஏற்கனவே அவளுக்கு இப்பாடலை சொல்லிக்கொடுத்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடந்த மாறுவேடப் போட்டியில் இப்பாடலைச் சொல்லியிருக்கிறாள்.

தெரிந்தவரை சொல்லு; ஞாபகம் இருக்கானு பார்க்கலாம் என்றேன்.

சொல்ல ஆரம்பித்தாள் ...

"ஓடி விளையாடு பாப்பா
கீழே விழுந்திருவ பாப்பா
மெதுவா விளையாடு பாப்பா
கீழே விழ மாட்ட பாப்பா"



- உழவன் 

Monday, March 21, 2011

அம்மா… டம்மா…

அடைகோழியின் சிறகுகளுக்குள் அடைபட்டிருக்கும் முட்டைகள் போல, இரவின் சிறகுகளுக்குள் நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தோம். தனது நீண்ட குழலால் வண்ணத்துப்பூச்சி தேனை உறிஞ்சுவதுபோல, சிறு நீல நிற விளக்கொன்று இரவை உறிஞ்சிக்கொண்டிருந்தது.
"அப்பா.. அப்பா.." என அடித்து எழுப்பினாள் இரண்டாவது அகவையை நெருங்கிக்கொண்டிருக்கும் அகமதிவெண்பா. இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது எப்போது எழுந்தாலும் எல்லாவற்றுக்கும் அவள் என்னைத்தான் எழுப்புவாள். இந்த வகையில் அம்மாவுக்கு அவள் தொந்தரவு தருவதில்லை. எழுந்து "என்னடா.. என்ன வேணும்?" என்று கேட்டபோது, "அப்பா.. தண்ணி.. அப்பா.. தண்ணி" என்று அழுதுகொண்டே கேட்டாள். "அழாதம்மா.. வா அப்பாட்ட வா.. அப்பா தண்ணி தர்ரேன்" என அவளைத் தூக்கி தோளோடு சாய்த்துக்கொண்டு, அருகிலிருந்த செம்பை எடுத்துக் கொடுத்தேன். அழுகையை நிறுத்தாமல் தலையை ஆட்டிக்கொண்டே "அப்பா.. டம்மா, அப்பா.. டம்மா" என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

"என்னம்மா.. டம்மா விழுந்திட்டயா. எங்க டம்மா விழுந்த?" என நான் கேட்கக்கேட்க, அவள் அதையே சொல்லிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவள் பாஷையில் டம்மா என்றால், டம்முனு கீழே விழுந்திட்டேன் என்பதுதான் அர்த்தம். எப்போதாவது விழுந்துவிட்டால், விழுந்த இடத்தைக் காட்டிக்கொண்டே "அம்மா.. டம்மா" என சொல்வாள் அகமதி. டமால் என விழுந்துவிட்டாளாம். அழுதுகொண்டிருந்தவளை அணைத்துக்கொண்டு, தண்ணீரைக் கொடுத்துக் குடிக்கவைக்க எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்தும், அவள் அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன கேட்கிறாள் எனப் புரியாது நான் விழித்துக்கொண்டிருந்தபோது, "டம்ளர்ல தண்ணி கேட்குறா" என்று சொன்னாள் மனைவி.

"டம்ளர்ல தண்ணி வேணுமா?" என கேட்டவுடன், "ம்ம்ம்.. " என வேகமாகத் தலையை ஆட்டி அழுகையை நிறுத்தினாள். இப்போது அவள் கூறிய டம்மாவிற்கு டம்ளர் என்று பொருள் கொள்ளத் தெரியாதவனாகிப் போனேன். கதவைத் திறந்து சமயலறை சென்று டம்ளரை எடுத்துத் தண்ணீர் பிடித்துத் தந்தவுடன், கையில் வாங்கி மடக் மடக்கென அவ்வளவையும் குடித்து முடித்தாள். "ஃபுல்லா குடிச்சிட்டயாம்மா.. அவ்வளவு தாகமா?" அதற்கு அவள் "ம்ம்ம்ம்.."

குழந்தையோடு முடிந்த அளவு அதிக நேரம் செலவழித்தும் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தது. ஒரு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் புரிந்துகொள்ள தாயால் மட்டுமே முடிகிறது. அதற்காகத்தான் தாய் எப்போதும் குழந்தையுடனேயே இருக்கிறாள். காலச் சூழலால் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்பவர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது.

உழவன்

Friday, April 2, 2010

அகமதி வெண்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்




அன்புள்ள அகமதிக்கு,
 
காலம் எவ்வளவு அதிவேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் இதே நாளின் பச்சையம் இன்றும் அப்படியே இருப்பதுபோலதான் உணர்கிறேன். அதற்குள் நீ பிறந்து ஓராண்டாகிவிட்டதா என எண்ணும்போது பிரமிப்பாகவே உள்ளது. கடந்த மார்ச் 8ம் நாளில்தான் வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. துருதுருவென நீ உதைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. உள்ளங்கையால் உன்னோடு பேசிய தருணங்கள் அவை.
 
பல ஆண்டுகளுக்கு முன்,  ஒரு பிரபல வார இதழில் வெளிவந்த கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் சீன அட்டவணையொன்றை நண்பனொருவன் எனக்குத் தர, அதில் பார்த்தபோது பிறக்கும் குழந்தை ஆண் என்று இருந்தது. அதனை ஒரு பிரதி எடுத்து இன்னொரு நண்பனுக்கு நான் தர, அவன் அதனை வேறு சில நண்பர்களோடு சரி பார்த்துவிட்டு, இதுவரை சரி பார்த்ததில் இந்த அட்டவணையில் இருப்பது மிகச் சரி என உறுதி செய்தான். அவனுக்கும் அவ்வட்டவணையில் இருந்தது போலவே பெண் குழந்தைதான் பிறந்தது.
 
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், எங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கப் போகிறது என்றே நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம். அதற்காக, ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது என்று பொருள் அல்ல. எந்தக் குழந்தையாயினும் சம மன மகிழ்வோடுதான் நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தோம். அந்த அட்டவணையின் பிரகாரம் ஆண் குழந்தை என்று நம்பினோம். அவ்வளவே. இருப்பினும் ஒரு சராசரி மனிதனாய் எனக்கு ஒரு சிறு விகிதாச்சார மகிழ்வு அதிகம் இருந்தது என்பதையும் உன்னிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.
 
ஒரு நாள் இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன். "பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எழுந்திரு" என்று யாரோ ஒருவர் என்னை எழுப்புவதுபோல் இருந்தது. எழுந்து பார்க்கிறேன்; யாருமேயில்லை. கனவோ என எண்ணிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். இச்சம்பவம் நடைபெற்ற ஒரு சில தினங்களில்தான், பிரசவத்திற்காக உனது அம்மாவை இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அந்த நிமிடத்திலிருந்து ஒருவித பயம் கலந்த மனநிலையுடன் தனிமையில் நான் இங்கு இருக்கிறேன். அலைபேசியில் அவ்வப்போது அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டுக்கொண்டே இருந்த நான், எப்போது தூங்கிப்போனேன் எனத் தெரியவில்லை. செல்போன் என்னை அழைக்கிறது; "பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்ற செய்தியைத் தருகிறது. என்னே மகிழ்வான தருணங்கள் அவை. அந்த நள்ளிரவில் என்னைப் பார்த்து நான் புன்னகைக்கிறேன்.
 
சில தினங்களுக்கு முன்பு நான் கண்ட கனவு என் முன்னால் மெல்ல எட்டிப் பார்க்கிறது. ஜோசியம், அமானுஷ்யம் இதுபோன்ற இத்யாதிகள் எதிலுமே ஆர்வமில்லாத எனக்குள், இதுமட்டும் எப்படி என்ற கேள்வி எழுகிறது. அத்தருணத்தில் என் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுவரில் சட்டங்களுக்குள் இருக்கும் அம்மா என்னைப் பார்த்து புன்னகைப்பதாய் உணர்கிறேன். "நீயே எனக்கு மகளாய்ப் பிறந்து விட்டாயோ; இதைக் கூறத்தான் அன்று என் கனவில் வந்தாயோ அம்மா" என்று கேட்கும்போது அழுகை பீறிட்டது. இதோ இதை எழுதும் இந்தத் தருணத்திலும் கண்கள் கசியத்தான் செய்கின்றன.
 
கடந்த ஆண்டின் ஏப்ரல் 3ம் நாளான வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் பிறந்த உன்னை, அடுத்த நாளின் அதிகாலையில்தான் பார்த்தேன். பூட்டியிருந்த மருத்துவமனையின் கேட்டைத் தட்டி, என் மகளைக் காணவந்திருக்கிறேன் எனக்கூறி உள்ளே நுழையும்போது உனது அழுகுரல் கேட்டது. அழைத்தாயோ என்னை?
 
இப்போதும் உன்னைப் பார்க்கிறேன். தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்துவிட்டாய். சொல்வதைப் புரிந்துகொள்ளவும் செய்கிறாய். மனதின் இடுக்குகளிலெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.
 
நல்லோர் எல்லோரின் ஆசியும் வாழ்த்தும் என்றும் உனக்குக் கிடைக்கட்டுமாக!
 
மகளாய்ப் பிறந்த என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
 
அன்புடன்
அப்பா
 

ம்ம்.. எப்படியோ 100 இடுகை போட்டாச்சு..:-)

Sunday, October 11, 2009

அன்புள்ள அகமதிக்கு,

சென்னை
12.10.2009

அன்புள்ள அகமதிக்கு,

வழக்கமா ஆபீஸ் முடிஞ்சதுக்கப்புறம், கொஞ்ச நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடிட்டு, ஏதோ நம்மளால முடிந்த ஒரு நாலைந்து ஃபோர், சிக்ஸ் எல்லாம் அடிச்சு, நானும் பிளேயர்தான் நானும் பிளேயர்தான்னு காட்டிட்டு, அப்படியே அங்க இருக்கிற நியூஸ்பேப்பர்ஸ், குமுதம், ஆ.விகடன்னு எல்லாத்திலயும் அங்க அங்க கொஞ்ச நேரம் மேஞ்சிட்டு, ஒரு ஏழு ஏழரைக்குக் கெளம்பித்தான் வீட்டுக்குப் போறது வழக்கம். வீடு ஆபிசுக்குப் பக்கத்தில்தான்; ஐந்து நிமிஷத்துல வீட்டுக்குப் போயிரலாங்குறது கூடுதல் சவுகரியம். இதுதான் போனமாசம் உன்ன சென்னைக்குக் கூட்டிட்டு வருகிற வரைக்கும் பெரும்பாலும் வழக்கமா நடந்துக்கிட்டு இருந்தது.

ஆனா இப்ப நிலமை தலைகீழ். ஆபிசில இருந்து எப்படா கெளம்புவோம்னு இருக்கும். TT, கேரம், பேப்பர்ஸ் எல்லாத்துக்கும் நோ சொல்லிட்டு எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவேன். கதவைத் திறந்து மதி....னு உன்னைக் கூப்பிடும்போது உன் சிரிப்பைப் பார்க்கனுமே..அடடா.. இந்த இடத்துல உன் சிரிப்புக்கு ஒரு உவமை சொல்லனும்னு நினைக்கிறேன். சில நிமிஷம் யோசிச்சதுக்கப்புறமா அதுக்கு ஈடா எந்த உவமையும் சொல்லமுடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, எதுவும் சொல்லாமலேயே உன்னுடைய சிரிப்ப அசை போட்டுக்கிட்டே இந்த மடலை எழுதுகிறேன்.

இப்பெல்லாம் நீ ஓ..ஓ.. ஆ..னு கையக் கால ஆட்டிக்கிட்டே சத்தமிட இல்லையில்லை பேச ஆரம்பிச்சிட்ட. உன்கூடவே சேர்ந்து நாங்களும் பேசனும். அப்பதான் நீ தொடர்ந்து இப்படி பேசிக்கிட்டே இருப்ப.

பாலில் ஊறவைத்த இட்லி, பருப்பு சாதம், கேரட் சாதம், பருப்பு வேகவைத்த தண்ணி என உனக்கான உணவுகளைப் பட்டியலிட்டு இப்போது ஊட்டத் துவங்கியிருக்கிறார் உன் அம்மா. சமத்தா சாப்பிட்டுக்கிட்டு இருந்த நீ, இப்போதெல்லாம் சாப்பிட மறுக்கிறாய். பெரிய பிள்ளையாய் ஆவாதால் தான் இப்படி அடமோ? ம்..ம்

"நாலு மாதம் வரைக்கும் புள்ளையை நாய் கூட வளர்க்கும்"னு ஊர்ல சொல்வாங்க. அது சரியாத்தான் இருக்கு. முன்னெல்லாம் கட்டில்ல போட்டா, அமைதியா கையக் கால ஆட்டிக்கிட்டு அப்படியே படுத்திருப்ப. ஆனா இப்ப உன்னைச் சுத்தி எத்தனை தலையனை வைச்சாலும் எல்லாத்தயும் உதைச்சுத் தள்ளிவிட்டுட்டு தவழ்ந்து கட்டிலோட நுனிக்கு வந்திடுற. அதனால இப்ப பெரும்பாலும் தரையிலதான் உன்ன படுக்க போடுறோம். இருந்தாலும் நீ, தவழுறதுல காட்டும் ஆர்வத்தைவிட, எழுந்து உட்காருவதில்தான் அதிக ஆர்வம் காட்டுற. நீ தவழ்ந்து போவதையும், பாதிக்கு மேல் எழுந்து உட்காருவதையும் நம்ம வீட்டுக் கேமராவும், என்னோட மொபைலும் படம் பிடிச்சுக்கிட்டே இருக்கு.

தூக்கம் வரும்போதும், அப்புறம் பசி எடுக்கும்போதும் விரல் சூப்புற கெட்ட பழக்கம் இப்ப உன்ட இருக்கு. அதுவும் பசிக்கும்போது விரலை எடுத்துவிட்டாபோதும், ஒரே அழுகைதான். சில சமயங்களில் பால் புட்டியை நீயே கையில் பிடித்துக்கொண்டு பால் குடிப்பதைக் காணும்போது உள்ளம் ஆர்ப்பரிக்கிறது.

முக்கியமா, இந்த ஆறு மாதகாலமாக உன்னை நல்ல ஆரோக்கியதுடன் பார்த்துக்கொண்ட உன் அம்மாவுக்கும், இறைவனுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

அப்புறம்.. நான் உன்னை எப்போதெல்லாம் தூக்கி வைத்துள்ளேனோ, அப்போதெல்லாம் என் மீது அடிக்கடி ஒன்ஸ் போகிறாய். அதற்கு உன் அம்மா, குழந்தைஙக யார் மீது அடிக்கடி ஒன்ஸ் போறாங்களோ அவங்க மேலதான் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்னு சொல்றாங்க. அப்படியா அகமதி?

அன்புடன்,
அப்பா

Friday, June 19, 2009

அகமதி அப்டேட்ஸ்

" இப்பவே இவளோட சேட்டை தாங்கல. காலையில ஊத்துற சொட்டு மருந்தை குடிச்சிடுறா.. ஆனா சாயங்காலம் ஊத்துற சொட்டுமருந்தை தூ..தூ.. னு துப்புறா. கையை வேற தட்டி விடுறா. இப்பலாம் கன்னத்த தொட்டா போதும் உடனே நல்லா சிரிக்கிறா. நேத்து முகத்துல லேசா ஃபூ... னு ஊதுரேன்..உடனே ஒரே சிரிப்புதான்.

தொட்டில்ல போட்ட உடனே, ஒத்த கைய வெளியில நீட்டி, தொட்டில வெலக்கி விட்டு எல்லாரையும் பார்த்துக்கிட்டே இருக்கா.

ஏய்.. என்ன சொல்லுற? இரண்டரை மாதம்தான் ஆகுது. அதுக்குள்ளவா இப்படியெல்லாம் பண்ணுறா?

நீங்க வேற.. ரெண்டு நாளைக்கு முன்னாடி, நைட்டு தொட்டில விட்டு அவளாவே கீழே விழுந்திட்டா. எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கோம்; திடீர்னு இவளோட அழுகைச் சத்தம். முழிச்சிப் பார்த்தா தொட்டிலுக்கு கீழ விரிச்சிருக்கிற சாக்கு மேல கிடக்குறா. ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன். காலை உதைச்சு உதைச்சு எப்படியோ வெளியே வந்திருக்கா. சொன்னா நீங்க திட்டுனாலும் திட்டுவீங்கனுதான் சொல்லல.. யப்பா.. இப்பலாம் தொட்டில்ல போடவே பயமா இருக்கு. தொட்டிலுக்கு ரெண்டு பக்கமும் நல்லா ஊக்கு மாட்டிருவேன்.

ம்ம்ம்..

இதுமட்டுமில்ல.. காத்தாட கொஞ்சநேரம் கெடக்கட்டுமேனு கட்டில்ல போட்டிருந்தேன். சும்மா கைய கால ஆட்டிக்கிட்டு கெடந்தா. திடீர்னு பார்க்கிறேன் உருண்டு குப்புற விழுந்து கெடக்கா....."

இவையெல்லாம் அகமதியைப் பற்றி அவள் அம்மா எனக்கு தொலைபேசியில் அப்டேட் செய்தது. இதுக்கப்புறமும் என் செல்ல மகளைப் பார்க்க ஊருக்குப் போகாமல் இருக்க முடியுமா? இதோ கெளம்பியாச்சு.. இந்த வார இறுதிக் கொண்டாட்டம் அவளோடுதான். நெல்லை எக்ஸ்பிரஸில ஒரு டிக்கட் போடுங்கப்பா :-)

உழவன்

(படிச்சிட்டு மட்டும் போயிறாதீங்க.. உங்க ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிழிசுலயும் போட்டுட்டு போங்க)

Monday, May 4, 2009

அகமதி வெண்பா

பெயர் சூட்டுங்கள் என்ற என் பதிவிற்கு, நிறைய தோழர்களும் தோழிகளும் வந்து, தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை வழங்கியதோடு மட்டுமல்லாது, என் குழந்தைக்கு ஆசிகளையும் வழங்கினார்கள். அந்த நல் உள்ளங்கள் அனைவர்க்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவள் பிறந்த 30வது நாளான மே 2ம் நாள் " அகமதி வெண்பா " என பெயர்சூட்டி மகிழ்ந்தோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.


என் மகளுக்காக நான் உளறிய உளறல்...

"அகமதி வெண்பா"

வேண்டி நின்ற
சாமி தந்த வரமே!
பங்குனி வெயிலில்
நெஞ்சினில் விழுந்த சந்தனமே!!
உன் அழுகுரல் கேட்கிறேன் நறுமுகையே
என் உயிருடல் உனக்கே குறுந்தொகையே!!!

தூளியிலாடிடும் தூரிகையே - என்
தோளினிலேறிடும் மயிலிறகே!
கைகால் உதைக்கும் கவிதையே - என்
கைவிரல் பிடிக்கும் நறுமுகையே!!
இதழ் திறந்து நீ என்னை
முதன் முதலாய் அழைக்கும் கணமே
நான் கொள்ளும் உவகையின் முன்னே
கடலும் குளமே!!!

உள்ளங்கையில் தவழ்ந்திடும் வெண்பூவே - என்
இலக்கணமில்லா வெண்பாவே!
நீ எழுந்து வைக்கும் முதலடி காணும்
பாக்கியம் வேண்டும் இறைவாவே!!

என்னகத்தில் உலாவரும் மதியே!
மகளாய்ப் பிறந்த என் தாயே!!
வையம் வாழ்த்த வாழ்வாய் நீயே!!!

உழவன்

Thursday, April 9, 2009

பெயர் சூட்டுங்கள்

அன்று இரவு 9.00 மணி. வலியின் அளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. காரில் அவளை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். இந்தத் தருணத்தில்தான் நான் தொலைபேசியில் தற்செயலாக தொடர்பு கொண்டிருக்கிறேன். பொறுமையாகச் செல்லுங்கள்; நான் சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஒருவிதத் தவிப்போடு நான் தனியாக வீட்டில் இருக்கிறேன்.

என்னாச்சோ ஏதாச்சோ என்கிற தவிப்பு ஒவ்வொரு வினாடியும். பார்சல் வாங்கி வந்த சப்பாத்திப் பொட்டலம் பிரிக்காமல் அப்படியே பரிதாபமாய்க் கிடக்கிறது. அரைமணிக் கொருமுறை தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்த நான், எப்படி கண்ணயர்ந்தேன் என தெரியவில்லை. 12 மணிக்கு மேல் என்னையறியாது அமர்ந்தவாறே உறங்கியிருக்கிறேன்.

மொபைல் அலறுகிறது. ஹலோ..

பெண் குழந்தை பிறந்திருக்கிறது. சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம். எதிர்முனையில் இந்த வார்த்தைகளைக் கேட்டபின்புதான், என் தவிப்பு, படபடப்பு.... எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை; எல்லாம் அடங்கி, நெஞ்சுக்குள் ஒரு இதமான உணர்வு ஏற்பட்டது. நிம்மதி பெருமூச்சு விட்டவாறே என்னைப் பார்த்து நானே சிரிக்கிறேன். 03.04.2009 அதிகாலை 1.06க்கு தந்தையான மகிழ்ச்சியில் தூங்காமல் படுத்தே கிடந்தேன்.

தமிழ்மணத்தில் உலவும் தமிழறிஞர்களே.. என் செல்ல மகளுக்கு பெயர் சூட்டுவதற்காக தங்களின் ஆலோசனைகளைப் பெறலாம் என எண்ணுகிறேன். கீழ்க்கண்ட பெயர்களில் உங்களுக்குப் பிடித்த பெயர்களைத் தெரிவியுங்கள். அதுமட்டுமல்லாது தமிழின் முதல் எழுத்தாம் '' எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் உங்களுக்குப் பிடித்த நல்ல பல பெயர்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. அகமதி வெண்பா
2. அமோதினி தூரிகா
3. அருந்ததி வெண்ணிலா
4. அமிர்தவர்ஷினி
5. அமராவதி


அன்புடன்,
உழவன்