Showing posts with label விஜயகாந்த். Show all posts
Showing posts with label விஜயகாந்த். Show all posts

Tuesday, March 8, 2011

விளாத்திகுளம் தொகுதியில் விஜயகாந்த்?

படம் இணையத்திலிருந்து...

தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள விஜயகாந்த்தின் வளர்ச்சி மிகப்பெரியது. காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருந்தாலும் அவைகளால் தமிழகத்தின் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நின்று தேமுதிக வாங்கும் வாக்குகளின் அளவைக்கூட நிச்சயம் வாங்க இயலாது. அதுமட்டுமல்லாது பாமகவால் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளைத்தாண்டி மற்ற தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கூட வாங்க இயலாது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்தபடியாக தேமுதிகதான் உருவெடுத்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.

எனது பள்ளிக்காலத்தில், நிறைய நண்பர்கள் விஜயகாந்த் ரசிகர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நிறைய விஜயகாந்த் படங்கள் பார்த்ததால் நானும் விஜயகாந்தின் படங்களை விரும்பிப் பார்க்ககூடியவனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு படித்தபோது சின்னக்கவுண்டர் வந்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் கல்யாணம், சடங்கு, கிரகபிரவேசம் இப்படி என்ன விஷேசமாக இருந்தாலும் வீட்டின் முன்னால் டிவி, டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவதுண்டு. அப்போதெல்லாம் விஜயகாந்த் படங்கள் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். விஜயகாந்தின் அறிமுகக் காட்சியில் தேங்காய் உடைத்து சூடமேற்றியவரெல்லாம் இருக்கிறார்கள். எனக்கும் அவரின் படங்கள் பிடித்துப் போய், விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன். (இப்போது அவரின் படங்களைப் பார்ப்பதில்லை; போஸ்டரைக் கூட:-)

பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்றபின்புதான், ஜாதிப்பற்று/வெறி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கல்லூரி ஜாதிகளால் பிளவுபட்டுக்கிடந்தது. ஒருவன் யார் ரசிகனாக இருக்கிறானோ, அதை வைத்தே அவனின் ஜாதியைத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில்தான், எனது தெருக்களைச் சுற்றி இருந்த பெரும்பான்மையான நண்பர்கள் ஏன் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது புரிந்தது. இப்போதும் நாயுடு/நாயக்கர்கள் விஜயகாந்த் ரசிகர்களாத்தான் உள்ளார்கள்.

வைகோ தனியாகக் கட்சி ஆரம்பித்த பின்பு அவரின் ஜாதிக்காரர்கள் அனைவருமே வைகோவிற்குத்தான் ஆதரவாக இருந்தார்கள். எனது தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார்கள்தான் அதிகம். அதற்கடுத்தபடியாக நாயக்கர்கள் இருக்கிறார்கள். விளாத்திகுளம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 1996ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளரான ரவிசங்கரை (சமீபத்தில் சென்னையில் வருமான வரி அதிகாரிபோல் நடித்து திருட முயலும்போது, பொதுமக்களால் பிடிபட்டு அடிபட்டு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டவர்) எதிர்த்து வைகோ போட்டியிட்டார். (அப்போது நான் அதிமுகவிற்காக மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருந்தேன். சாப்பாடு போக தினம் ரூ100 கிடைத்தது என்பது தனிக்கதை) மிகக் குறைவான வாக்குகளில் வைகோ தோற்க நேர்ந்தது. வைகோவின் ஓட்டுக்கள் எல்லாம் இப்போது விஜயகாந்த் பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் விருத்தாச்சலம் தொகுதிக்கு விஜயகாந்த் எந்த அளவிற்குச் செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, இன்னமும் நற்பெயரோடு இருந்தால் மீண்டும் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில்தான் போட்டியிடுவார். இல்லையேல் தன் ஜாதி ஓட்டுக்கள் அதிகமிருக்கும் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்படிப் பார்க்கையில், விளாத்திகுளம், கோவில்பட்டி, சிவகாசி தொகுதிகளில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.

உழவன்