Tuesday, August 13, 2013

முட்டைச் செடி

நேற்று காலை அலுவலகம் கிளம்பும்போது லேசான மழை. சிறிது நேரம் வெயிட் பண்ணிப் பார்த்தேன். மழை நிற்பதுபோல் தெரியவில்லை. ரெயின் கோட்டை மாட்டிகொண்டு கிளம்பிவிட்டேன். 

அலுவலகத்தில் எல்லா க்யுபிகிலும் கொஞ்ச நேரம் மழை பற்றிய பேச்சாகவே இருந்தது. சிலர் நனைந்திருந்தர்கள்; சிலர் லேசாக நனைந்திருந்தர்கள்; சிலருக்கு பேன்ட் மட்டும் நனைந்திருந்தது.

கொஞ்சம் கூட நனையாமல் இருந்த ஒருவரிடம், "நீங்க வரும்போது மட்டும் ழை பெய்யலயா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், " பஸ் ஏறும்போது மழை பெய்யல. பஸ்ல வரும்போது மழை. செம கடுப்பாகிட்டேன். நல்ல வேளை இறங்கும் போது மழை இல்ல" என்றார்.

மாதம் ரெண்டு முறை பெட்ரோல், டீசல் விலை ஏறுது; சாதிக் கொடுமைகள் இன்னும் இருக்கு; அம்மாவை  யானை முட்ட வந்திருக்கு ; காங்கிரஸ் அரசு முடிய இன்னும் பல மாதம் இருக்கு; இப்படி நிறைய பிரச்சனை இருக்கும்போது, இதுக்கெல்லாம் கடுப்பாகாதவங்க, மழை பெஞ்சா கடுப்பகுறாங்க.

ஒன்னு தெரியுமா உங்களுக்கு.. இப்ப பெய்யுற மழையால தனக்கு நட்டம்னு தெரிஞ்சா கூட, மழையை எந்த விவசாயியும் சபிக்க மாட்டன். கடுப்பாக மாட்டன்.


*

நேற்று வெண்பாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, முட்டை எங்கிருந்து வருகிறது? எனக் கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில் "முட்டை, முட்டை செடியில இருந்து வருது" என்றாள்.

ஞே என ஆகிவிட்டது எனக்கு.

அவளுக்கு காட்டுவதற்கு என் வீட்டிலும் கோழி இல்லை. பக்கத்துக்கு வீடுகளிலும் கோழி இல்லை. கடையிலிருந்து மட்டுமே முட்டை வாங்கி வருவதை பார்த்திருக்கிறாள். நான் அவளிடம் முட்டை கோழியிலிருந்து கிடைக்கிறது எனச் சொன்னபோது, "அப்பா.. தாத்தா ஊர்ல கோழி பார்த்திருக்கேன்; ஆனா அது அப்ப முட்டையே வைக்கலையே" என்றாள். எங்கள் ஊரில் இன்னமும் எங்கள் வீட்டில் ஆடு, மாடு, கோழி வளர்க்கிறார்கள். அவள் ஊருக்கு செல்லும்போது கோழி முட்டை விடவில்லை போலும். அதனால் அவளுக்கு இது தெரியாமல் போனது போல. 

கோழியைப் பிடித்து சுண்டு விரலை விட்டு, முட்டை இருக்கிறதாவென பார்த்துவிட்டு, சாக்கை விரித்து கோழியைப் படுக்க வைத்து, கூடையால் மூடிவைத்தவன் நான். முட்டை வைத்த பின்னர் கோழியைத் திறந்துவிட்டு முட்டையை எடுத்து பத்திரமாக அடுக்குப்பானையில் வைப்பேன்.

நல்லவேளை பால் கறப்பதைப் பார்த்திருக்கிறாள். அதனால் பால் மாட்டிலிருந்து கிடைக்கிறது என்பதில் அவளுக்கு சந்தேகம் இல்லை. தாத்தாவுக்கு போன் போட்டு, கோழி முட்டை வைக்கும்போது சொல்லுங்க; நான் ஊருக்கு வந்து பார்க்கணும் எனச் சொல்லியிருக்கிறாள்.


*

5 comments:

ராஜி said...

வெறும் ஏட்டறிவை மட்டும்தான் நம் பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள். என் ஓரகத்தி பெண் ஆறாவது படிக்குறாள். நெல் மரத்துல விளையுதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கு :-(

சே. குமார் said...

இப்ப உள்ள பசங்களுக்கெல்லாம் கிராமத்து வாழ்க்கையை மறந்து நாளாச்சு... ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு சொல்வோம்... அது மாதிரி ஏட்டறிவு வாழ்க்கையைப் படிக்க உதவாது.

மாதேவி said...

பால் சுப்பர் மாக்கட்டில் கிடைக்கும் என எழுதியதாம் ஒரு பிள்ளை. பிழை சொல்லமுடியாது.

இப்படிப்போகிறது காலம்.

ராமலக்ஷ்மி said...

அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவசியம் காட்டுங்கள்.

உண்மைதான். நமது சிறுவயது அனுபவங்கள் பலவும் இந்த தலைமுறைக்கு ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது.

வே.நடனசபாபதி said...

முட்டைச் செடி என்றதும் கத்தரிக்காய் பற்றியோ என நினைத்துவிட்டேன். ஏனென்றால் கத்தரிச் செடியை Egg Plant என்றும் சொல்வதுண்டு.பதிவை இரசித்தேன்.