Wednesday, March 15, 2017

உணவும் சுவையும்

நேற்று இரவு ஒரு மீன் கடைக்குச் சாப்பிடச் சென்றேன். வழக்கமாக அக்கடையில்தான் வார இறுதிகளில் மீன் வாங்குவோம். பகலில் மீன் வியாபாரம்; இரவில் மட்டும் இட்லியும் மீன்குழம்பும், அதோடு வறுத்த மீனும் கிடைக்கும்.
ஒரு வறுத்த கிழங்கானோடு, நான்கு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு எதிரே ஒருவர் வறுத்த மீன் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்கு இட்லியை சாப்பிட்டு முடித்த பின்னர், மேலும் இரண்டு இட்லி வாங்கினேன். எனக்கு எதிரே இருந்தவர் "இட்லி நல்ல இருக்குங்களா ?" என்று கேட்டார்.
ந்த மாதிரி ஒரு கேள்வியை யார் என்னிடம் கேட்டாலும் சற்று குழம்பிவிடுவேன். சிலர் "ஆஹா.. என்ன சுவை" என்று கூறி உண்ணும் ஒரு உணவை, இன்னொருவர் "என்ன இப்படிக் கேவலமா இருக்கு" என்றும் சொல்வதுண்டு. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுவை சார்ந்த ஒன்று. அலுவலகத்தில் நண்பர்களோடு மதியம் உணவருந்தும் வேளையில் இப்படிப்பட்ட சம்பவம் நடப்பதுண்டு. நான் நன்றாக இருக்கிறது என எண்ணிச் சாப்பிடும் ஒரு உணவை, வேறொருவர் "என்ன இப்படிக் கேவலமா இருக்கு" என்றும் சொல்வதுண்டு. இது அப்படியே எதிர்மாறாகவும் நடப்பதுண்டு.
இப்போது நான் அவரிடம், இட்லி நன்றாக இருக்கிறது என்று சொல்லவா; இல்லை சுமாரா இருக்கிறது எனச் சொல்லவா என்கிற குழப்பம் வந்தது. நன்றாக இல்லை எனச் சொன்னால், "அப்புறம் ஏன் இவன் இரண்டாவதாக இரண்டு இட்லி வாங்கினான்" என்றும் அவர் நினைக்க வாய்ப்பு இருக்கிறது. "நல்லா இருக்குங்க" என்றே சொல்லிவிட்டேன்.
உடனடியாக அவரும் நான்கு இட்லி வாங்கினார். இவருக்கு இந்த டேஸ்ட் பிடிக்கிறதா இல்லையா என்று அறிய அவரின் முக பாவனையை லேசாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான்கு இட்லியை முடித்துவிட்டு, "இன்னும் ரெண்டு இட்லி குடுங்க" என்றார்.
அப்பாடா... மனுஷன் நம்மை திட்டமாட்டான் என்ற நினைப்பு அப்போதுதான் வந்தது. அதனால் உலகுக்குக் கூறும் நீதி என்னவெனில், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "இவ்வளவு கேவலமா இருக்கு, இத மனுஷன் சாப்பிடுவானா" என்று ஒருபோதும் கூறாதீர்கள். அவ்வுணவு இன்னொருவருக்குப் பிடித்திருக்கக் கூடும்.

No comments: