Wednesday, April 20, 2016

தேர்தல் பரப்புரை
தேர்தல் பரப்புரைகளை எப்போது பார்த்தாலும், எனக்கு பழைய ஞாபகம் வந்துவிடும். 1996 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் விளாத்திகுளம் தொகுதிக்கு கிராமம் கிராமமாகச் சென்று பரப்புரை செய்தேன்.

தேர்தல் பரப்புரையில் நான் ஈடுபட்டது ஒரு விபத்து போலதான் நடந்தது. பரப்புரை யென்றால் ஏதோ கட்சித் தலைமை போல பேசுவது அல்ல. ஊர் ஊராகத் தெருத் தெருவாக ஆட்டோ, வேன், ஜீப் என ஏதாவதொரு வாகனத்தில் அமர்ந்து கொண்டு, மைக்கில் "போடுங்கம்மா ஒட்டு... தாய்மார்களின் சின்னம்.. விவசாயிகளின் சின்னம்.. ஏழைகளின் சின்னம்..." இப்படி சொல்லிக் கொண்டே போவதுதான்.

திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இதற்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். தெரிந்தவர் ஒருவர் மூலமாக எனக்கு அழைப்பு வந்தபோது, " சம்பளம் தந்தா நான் வருகிறேன்; சும்மாவெல்லாம் எந்தக் கட்சிக்கும் என்னால் வரமுடியாது" என்றேன். சம்பளமும் உண்டு; சாப்பாடும் உண்டு. அதிமுக வுக்கு பிரச்சாரம் பண்ணு என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.

முதல்நாள் ஒரு ஆட்டோவில் விளாத்திகுளம் ஊருக்குள் சுற்றியதாக ஞாபகம். வழக்கமான போடுங்கம்மா ஓட்டு.. என்கிற சம்பிரதாயத்துக்கு மாற்றாக நான் வேறு எதோ பேசியிருக்கிறேன் போல. அந்தப் பகுதி மக்களின் பிரச்சனை; வேட்பாளருக்கும் தொகுதிக்கும் உள்ள தொடர்பு.. இப்படி ஏதோ எனக்குத் தெரிந்ததைப் பேசிய விஷயம், வேட்பாளராக நின்ற என்.கே.பெருமாள் அவர்களுக்கு போயுள்ளது. உடனே அவர் "நாளையிலிருந்து அந்தப் பையனை நம்மளோடு வரச்சொல்" எனச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். அடுத்த நாளிலிருந்து இறுதிவரை அவரோடுதான் பயணம். அவரின் வாகனம் முன்னாள் நம் வாகனம் செல்லும். மைக்கைப் பிடித்து பேசிக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.

காலையில் எட்டு மணிவாக்கில் கட்சி அலுவலகம் செல்லே வேண்டியது. அருகிலுல்ள்ள ஓட்டலில் டோக்கனைக் கொடுத்து சாப்பிட வேண்டியது. ஒவ்வொரு வேனிலும் இருக்கும் மைக் செட்டுகாரர் மற்றும் பேச்சாளர் இருவருக்கும் சம்பளம் கொடுப்பவர் வந்து அன்றைக்கான சம்பளத்தைக் கொடுப்பார். வாங்கிக்கொண்டு ஒவ்வொரு வாகனமும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கொண்டேயிருக்கும். வேட்பாளர் வர எப்படியும் பத்து பதினோரு மணியாகும். அதுவரை நான் கட்சி அலுவலகத்தில் இருக்கும் செய்தித் தாள்களைப் புரட்டிக்கொண்டும், அங்கிருக்கும் கட்சிக்காரர்களிடம் பேசிக்கொண்டும் இருப்பேன். வேட்பாளர் வந்தவுடன் கிளம்பினால், இரவு வருவதற்கு பத்து மணிக்கு மேலாகிவிடும்.

இந்தத் தேர்தலில்தான் வைகோவும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பரப்புரையின்போது நாங்கள் பேசியவைகளில் சில தேர்தல்களம் சிறப்புப் பகுதியிலெல்லாம் வந்திருந்தாக கட்சி அலுவலகத்தில் சொல்லிக்கொள்வார்கள்.

இப்படிப் போய்க்கொண்டிருந்த பரப்புரையில் எனக்கு சிறு மனப் பிரச்சனை வந்தது. ஒவ்வொரு ஊருக்குள்ளும் செல்லும்போது, அந்த ஊரின் பெரும்பான்மை சாதி மக்கள் யார் எனத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு ஏற்றாற்போல் சாதிய உணர்வைத் தூண்டி, அவர்களின் வாக்குகளைப் பெரும் வகையும் என் பேச்சு இருக்கவேண்டும் என்பதுதான் அது. இந்த வேலையை ராஜினாமா செய்துவிடலாமா என்று கூட யோசித்திருக்கிறேன்.

இந்தத் தேர்தலில்தான் நான் முதல்முறை வாக்காளன். அப்போதெல்லாம் இது ஏன் என்று புரியவில்லை. அதற்குப் பின்னர்தான் எல்லாக் கட்சிகளுமே சாதி அடிப்படையில்தான் வேட்பாளரையே நிறுத்துகிறது என்பது தெரிந்த்து. சாதிக்கும் ஓட்டுக்கும் உள்ள தொடர்பு தெரிந்தது.

பிரச்சாரத்தின் போது, ஒருமுறை ஒரு கோவிலில் சோளி போட்டுப் பார்த்ததாகக் கூட ஞாபகம். வெற்றி நிச்சயம் என்றுதான் சோளியும் சொன்னது.

முடிவில், திமுக வேட்பாளர் ரவிசங்கர், வைகோவைவிட சுமார் 600 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவிற்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

இந்த 2016 தேர்தலில், வைகோ கோவில்பட்டியில் நிற்கிறார். என்னைப் பொருத்தவரையில் விளாத்திகுளத்திற்கும், கோவில்பட்டிக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இருக்கப் போவதில்லை. சாதியை நம்பித்தான் நிற்கிறார். முடிவு எப்படி இருக்கப் போகிறது எனப் பார்க்கலாம்.No comments: