Saturday, July 9, 2016

வரிசையும் வாழ்க்கையும்

நாம் படிக்க நினைக்கும் புத்தகம் தடிமனாக இருந்தால், அதனைப் பார்த்த உடனே நமக்கு ஒரு சலிப்பு வரும். "எப்படா இதை படிச்சு முடிக்கிறது" என்று. ஆரம்பித்துவிட்டால் முடித்துவிடலாம். அதுபோலதான் வங்கி, டிக்கெட் கவுண்டர் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது, வரிசை மிகப் பெரியதாக இருந்தால், உடனே நமக்கு ஒரு சலிப்பு ஏற்படும். "இவ்வளவு பேருக்குப் பின்னால நின்னு நாம எப்ப டிக்கெட் எடுக்குறது" என்கிற எண்ணம் வரும்.

கடந்த சனிக்கிழமை வீட்டில் உலாத்திக் கொண்டிருக்கும்போது, தெரியாத்தனமா "சே.. லீவுனாலே போரடிக்குது; ஒரு வேலையும் இல்லாம" என்று சொல்லிவிட்டேன். சனிக்கிழமையாதலால் சனிபகவான் நாவில் குடியிருந்திருக்கிறார் போல. உடனே சுதாரித்த வீட்டம்மணி, "ரேஷன் கடைக்குப் போய் சீனி வாங்கிவிட்டு வாங்க" என்று பணித்தாள்.

அங்கு போனால் மிக நீண்ட வரிசை. பார்த்தவுடன் எனக்கும் என்னடா இது இவ்வளவு கூட்டமா இருக்கே என்றுதான் தோன்றியது. இதைக் காரணமாக சொல்லி, வீட்டிற்கு திரும்ப செல்லமுடியாது என்பதும், அப்படிச் சென்றால் என்ன நடக்கும் என்பதையும் நீங்கள் யூகித்திருக்கக் கூடும்.

"சரி..வரிசையிலேயே நிற்போம்" என்று முடிவெடுத்து நின்றேன். சிறிது நேரத்திலேயே எனக்குப் பின்னால் நிறையே பேர் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் பெரும்பாலானோர் என்னைப்போன்ற குடும்பத் தலைவன்கள். ரேஷன் கார்டில் மட்டுமாவது நாம் "குடும்பத் தலைவன்"களாக இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் பலருக்கு ஒரு மன ஆறுதல். இரண்டு கிலோ சீனி வாங்க ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று வாங்கிக் கொண்டு, ஏதோ நம் குடும்பத்திற்காக சாதித்தவன் போல வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் "ரெண்டு கிலோ கோதுமையும் சேர்த்து வாங்கியிருக்கலாம்ல; இதெல்லாம் சொல்லவா செய்யணும்" என்கிற கேள்வியை எதிர்கொண்ட கொடுமை எனக்கு வாய்க்கவா வேண்டும்.

நீண்ட வரிசையில் நாம் காத்துக் கிடக்க நேரிடும் போது, நமக்குத் பின்னால் நிற்பவர்களை பார்த்த பின், நமக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். வரிசையில் நிற்பதற்கு முன்னால், "நிற்கவா வேண்டாமா" எனத் தயங்கிய மனம் இப்போது வரிசையை விட்டு வெளியேறாது. அந்த இடம் கிடைத்ததிற்காக மகிழும்; நிம்மதி கொள்ளும்.

அதுபோல தான் வாழ்க்கையும். 

2 comments:

ராமலக்ஷ்மி said...

/வரிசையில் நிற்பதற்கு முன்னால், "நிற்கவா வேண்டாமா" எனத் தயங்கிய மனம் இப்போது வரிசையை விட்டு வெளியேறாது. /

உண்மைதான்:)

நல்லதொரு வாழ்க்கைப் பாடம்.

'பரிவை' சே.குமார் said...

உண்மைதான்.. இதெல்லாம் வாழ்க்கைப் பாடம் நண்பரே...