Monday, May 4, 2009

அகமதி வெண்பா

பெயர் சூட்டுங்கள் என்ற என் பதிவிற்கு, நிறைய தோழர்களும் தோழிகளும் வந்து, தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை வழங்கியதோடு மட்டுமல்லாது, என் குழந்தைக்கு ஆசிகளையும் வழங்கினார்கள். அந்த நல் உள்ளங்கள் அனைவர்க்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவள் பிறந்த 30வது நாளான மே 2ம் நாள் " அகமதி வெண்பா " என பெயர்சூட்டி மகிழ்ந்தோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.


என் மகளுக்காக நான் உளறிய உளறல்...

"அகமதி வெண்பா"

வேண்டி நின்ற
சாமி தந்த வரமே!
பங்குனி வெயிலில்
நெஞ்சினில் விழுந்த சந்தனமே!!
உன் அழுகுரல் கேட்கிறேன் நறுமுகையே
என் உயிருடல் உனக்கே குறுந்தொகையே!!!

தூளியிலாடிடும் தூரிகையே - என்
தோளினிலேறிடும் மயிலிறகே!
கைகால் உதைக்கும் கவிதையே - என்
கைவிரல் பிடிக்கும் நறுமுகையே!!
இதழ் திறந்து நீ என்னை
முதன் முதலாய் அழைக்கும் கணமே
நான் கொள்ளும் உவகையின் முன்னே
கடலும் குளமே!!!

உள்ளங்கையில் தவழ்ந்திடும் வெண்பூவே - என்
இலக்கணமில்லா வெண்பாவே!
நீ எழுந்து வைக்கும் முதலடி காணும்
பாக்கியம் வேண்டும் இறைவாவே!!

என்னகத்தில் உலாவரும் மதியே!
மகளாய்ப் பிறந்த என் தாயே!!
வையம் வாழ்த்த வாழ்வாய் நீயே!!!

உழவன்

15 comments:

ராமலக்ஷ்மி said...

அகமதி வெண்பா

அழகான பெயர். வாழ்த்துக்கள்.

//கைகால் உதைக்கும் கவிதை//யை போற்றிப் பாடியிருக்கும் 'வாழ்த்துப்பா'வும் அருமை உழவன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் உழவன்

அகமதி வெண்பா

இந்தப் பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதில் உங்களை விடவும் மகிழ்ச்சி எனக்கு. அருமையான பெயர் நண்பரே.

பங்குனி வெயிலில்
நெஞ்சினில் விழுந்த சந்தனமே!!
உன் அழுகுரல் கேட்கிறேன் நறுமுகையே
என் உயிருடல் உனக்கே குறுந்தொகையே!!! //

அருமையான வரிகள்
ம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

அகமதி.
அழகான பெயர். வாழ்த்துகள்!

அகநாழிகை said...

அழகான பெயர்,
வாழ்த்துக்கள் நண்பா.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

சொல்லரசன் said...

//வையம் வாழ்த்த வாழ்வாய் நீயே!!!//

வாழ்த்துகள் அகமதிவென்பாவிற்கு

Anonymous said...

varthaigalai nangu agala aazha uzhuthu uramittu kozhithu sezhithu aruvadai seidhu irukirergal uzhavan avargaley....vazhthukkal anbu magalukku....arputhana peyar agamathivenpaa..unmathi avalpaa.....suvaiyoo suvai....

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி
அழகான பெயர். வாழ்த்துக்கள்.

//கைகால் உதைக்கும் கவிதை//யை போற்றிப் பாடியிருக்கும் 'வாழ்த்துப்பா'வும் அருமை உழவன்.//
உங்கள் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி


@அமிர்தவர்ஷினி அம்மா
//அருமையான வரிகள்
ம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்//
துவங்கிடலாம் . இந்தப் பொறுப்பை திருமதி உழவனிடம் கொடுக்கலாமென எண்ணுகிறேன். :-)

//இந்தப் பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதில் உங்களை விடவும் மகிழ்ச்சி எனக்கு. அருமையான பெயர் நண்பரே.//
உங்கள் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.

@குடந்தைஅன்புமணி
@“அகநாழிகை“பொன்.வாசுதேவன்
@சொல்லரசன்
@தமிழரசி

வாழ்த்திய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அளவிலா நன்றிகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

@அமிர்தவர்ஷினி அம்மா
//அருமையான வரிகள்
ம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்//
துவங்கிடலாம் . இந்தப் பொறுப்பை திருமதி உழவனிடம் கொடுக்கலாமென எண்ணுகிறேன். :-)

ப்ளீஸ்
சீக்கிரமே செய்யுங்க

அகமதியைப் பற்றி அவ்வப்போது அறிய அவா

பனசை நடராஜன் said...

வணக்கம் நண்பா,
குழந்தை பிறந்த செய்தி இன்றுதான் தெரியும்.
மிக்க மகிழ்ச்சி. என் குழந்தை 'பொன்னி'யும் 03-04-2006
அன்றுதான் பிறந்தாள். தமிழில்
பெயர் வைக்க எண்ணி நான் தஞ்சை மாவட்டம்
என்பதால் காவிரியின் பெயரான 'பொன்னி' என்ற
பெயரை தன்னிச்சையாக தேர்வு செய்தேன்.(அதனாலேயே
அவ்வபோது "யார் அந்த பொன்னி?" என்ற மனைவியின்
துப்பறியும் முயற்சி வேறு).
உன்னைப் போல நானும் வலையுலக நண்பர்களிடம்
கருத்துக் கேட்டு விட்டு பெயர் வைத்திருக்கலாமோ..!
தொடர்ந்து உன் பதிவுகளைப் படிக்கிறேன். உன்னைப்
போல கொஞ்சமாவது எழுத வேண்டுமென்ற ஆசையில்...

- பனசை நடராஜன்-

அமுதா said...

அழகான பெயர். வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

@அமுதா
//அழகான பெயர். வாழ்த்துக்கள்.//
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை என் தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி :-)

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துக்கள் தோழா!

அழகானது உங்கள் மகளின் பெயர் மட்டுமல்ல, உங்கள் கவிதையும் தான்.

///இதழ் திறந்து நீ என்னை
முதன் முதலாய் அழைக்கும் கணமே
நான் கொள்ளும் உவகையின் முன்னே
கடலும் குளமே!!!///

முதன்முதல் தந்தையாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நீங்கள் எழுதிய விதத்தை மிகவும் ரசித்தேன். “கடலும் குளமே” - என்ன அருமையான உவமை.

உங்கள் மகளின் படத்தை வெளியிட்டிருந்தால், மிக பொருத்தமாக இருந்திருக்கும்.

அகமது மகிழ்ந்திட,
சுகமது படைத்திட,
மதிமுக மலராய்
மதியுகம் கொண்டு,
வெண்ணிலவாக
ஒளிமுகம் கொண்டு,
‘பா’வினமெல்லாம்
உனைப்பாடும் வகையில்
பூவினமாக புன்னகையோடு
பூமியில் என்றும்
புகழொடு வாழ்க!!

"உழவன்" "Uzhavan" said...

@SUMAZLA/சுமஜ்லா

எனதருமைத் தோழியே.. எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
இப்பதிவைப் படித்த கணப்பொழுதில், என் செல்ல மகளைப் புகழ்ந்தும், வாழ்த்தியும் தாங்கள் எழுதிய கவிதையை எண்ணி நான் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது வாழ்க்கையில் பெருமையுடன் நான் பாதுகாப்பவைகளில், உங்களின் இந்த வாழ்த்துக்கவிதையும் ஒன்று.

‘பா’வினமெல்லாம்
உனைப்பாடும் வகையில்
பூவினமாக புன்னகையோடு
பூமியில் என்றும்
புகழொடு வாழ்க!!

உங்களின் இந்த வரிகளைப் போலவே அவள் புகழோடு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி நன்றி நன்றி :-)))))

SUMAZLA/சுமஜ்லா said...

ம்... இப்பத்தான் பார்த்தேன், என் கவிதைக்கு உங்கள் மறு மொழியை! நான் எழுதியது, ஒரு இன்ஸ்டண்ட் கவிதை!

கமெண்ட் பாலோ அப் த்ரூ ஈமெயில் ஆப்ஷன் இருக்கும், பொதுவா அதை டிக் செய்து விடுவேன். ஆனால், உங்களுடையதில் அது மிஸ்ஸிங்.அதான் பார்க்கவில்லை.

"உழவன்" "Uzhavan" said...

//ம்... இப்பத்தான் பார்த்தேன், என் கவிதைக்கு உங்கள் மறு மொழியை! நான் எழுதியது, ஒரு இன்ஸ்டண்ட் கவிதை!

கமெண்ட் பாலோ அப் த்ரூ ஈமெயில் ஆப்ஷன் இருக்கும், பொதுவா அதை டிக் செய்து விடுவேன். ஆனால், உங்களுடையதில் அது மிஸ்ஸிங்.அதான் பார்க்கவில்லை. //

மீண்டுமொருமுறை நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி :-)