Tuesday, August 2, 2011

சினிமாவாரா வாரம் சினிமா பார்த்த காலமெல்லாம் போய்விட்டது. எப்போதாவதுதான் இப்போது சினிமா பார்க்க முடிகிறது. காரணம் குடும்பத்தோடு தியேட்டருக்கு எல்லா திரைப்படங்களுக்கும் செல்ல இயலாது. அதுமட்டுமல்லாது வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமும் இல்லை; வெளிவரும் அனைத்து படங்களும் பார்க்கக்கூடிய வகையில் இருப்பதுவுமில்லை. பத்திற்கு ஒன்று இரண்டுதான் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரக்கூடியதாக இருக்கிறது. இந்த வாரம் எதையாவது எழுதி ப்ளாக்கில் பதிவிட்டுவிடவேண்டும் என்பதற்காகவே எதையாவது எழுதுவதுபோலத்தான், இந்த சினிமாக்காரர்களும் என நினைக்கிறேன். எதையாவது சினிமா என்ற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்யவேண்டும் என்பது போலத்தான் பெரும்பாலும் திரைப்படங்கள் ரிலீஸாகிக்கொண்டிருக்கின்றன.

இப்படி இருந்தால்தான் நல்ல திரைப்படம் என்றெல்லாம் எதுவுமில்லை. படம் பார்க்கும்போது மனது வேறு எங்கும் பயணிக்காமல் திரைப்படத்தோடு ஒன்றிடவேண்டும். அவ்வப்போது மனது சபாஷ் சொல்லவேண்டும்; கண் கலங்கவேண்டும்; நம்மையறியாமல் கைதட்டவேண்டும். அது அங்காடித்தெரு போன்ற திரைக்கதையாக இருந்தாலும் சரி; சாமி போன்ற திரைக்கதையாக இருந்தாலும் சரி.

ஏவிஎம் ராஜேஸ்வரியில் வெற்றிக்கொடிகட்டு படத்தைப் பார்த்தபோது, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு எற்பட்டது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. கோயம்பேடு ரோகினியில் மொழி திரைப்படம் முடிந்தவுடன், தியேட்டரே எழுந்து நின்று கைதட்டியது. இரண்டு வயதான என் மகள், என் மீது விழுந்து, தோளிலேறி விளையாடுவாள். பல சமயங்களில் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு கன்னம் அமுங்க முத்தமிடுவாள். அப்போதெல்லாம் அபியும் நானும் படம் நினைவிற்கு வரும். (ஞாபகத்திலிருக்கும் படங்களின் பெயர்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன)

சில வாரங்களுக்கு முன்னர் வேங்கை பார்த்தேன். ஹாலிவுட் கதைகளைக் காப்பியடிக்கிறார்களென நாம் சில இயக்குநர்கள் மீது புகார் சொல்கிறோம். அப்படிப் பார்க்கையில் வேங்கையும் காப்பிதான். ஹாலிவுட் காப்பி அல்ல; இது லோக்கல் காப்பி. அவ்வளவுதான் வித்தியாசம். திரும்பத் திரும்ப ஒரே கதை (இதைக் கதை என்றெல்லாம் சொல்லமுடியாது). சண்டைக் கோழியில் பார்த்த அதே ராஜ்கிரன். சிவகாசியில் பார்த்த அதே பிரகாஷ்ராஜ்.

தெய்வத் திருமகள் ட்ரெய்லரை தொலைக்காட்சியில் பார்த்தபோது, விக்ரம் குழந்தைபோல நடித்திருக்கிறார்; படம் முழுக்க இப்படி லூசு மாதிரி பேசிப் பேசி கொன்னாலும் கொன்றுவாங்க என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் வெளியான பின்பு இதற்குக் கிடைத்த நிறைய பேரின் ஃபீட்பேக், என்னை இந்தப் படத்திற்குப் போகவைத்துவிட்டது.

கதாபாத்திரங்களின் தேர்வும், எண்ணிக்கையுமே இத்திரைப்படத்தின் பலம் எனச் சொல்லலாம். தேவையில்லாமல் வந்துபோகும் எந்தக் கதாபாத்திரமும் இல்லை. மிகத் தெளிவான திட்டமிடலோடு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. யார் என்ன சொன்னாலும் அதற்குக் கவுண்டர் டயலாக் விட்டு காமெடி பண்ணும் (பெரும்பாலும்) சந்தானம், இதில் மிக அளவாகவும் தெளிவாகவும் காமெடி செய்துள்ளார். படத்தைக் கலகலப்பாக்குவதே சந்தானம் மற்றும் அனுஷ்கா கூட்டம்தான். விகரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். கலக்கியிருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் அழகாக வந்துள்ளது. விக்ரமின் நண்பர்களாக வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் மிக உயரமான ஒருவரைப் பார்க்கும்போது பயமாகவும் பரிதாபமாகவும் உள்ளது.

காய்ச்சலில் துடித்துக்கொண்டிருக்கும் வக்கீல் நாசரின் மகனுக்காக, தன்னைப் பிடிக்கவரும் அனைவரையும் தள்ளிவிட்டு, ஓடிப்போய் மருந்து வாங்கிவந்து தந்துவிட்டு, தன்னை அடைத்து வைத்த அதே அறைக்குள் மீண்டும் விக்ரம் நுழையும்போது ஒரே கைதட்டல். மொத்தத்தில் மனதில் நிற்கும் திரைப்பட வரிசையில் தெய்வத் திருமகளும் ஒன்றாகிப்போனது. பல திரைப்படங்கள், நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன் என மற்றோரிடம் பெருமையாய்ப் பகிர்ந்துகொள்ளத் தோணாத வகையில்தான் இருக்கின்றன. ஆனால், நான் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்கிறேன் “நான் தெய்வத் திருமகள்” பார்த்துவிட்டேன் என.

இயக்குநர்களே.. இந்தப் படத்திலிருந்துதான் நான் இந்தக் கதையை எடுத்தேன் என நீங்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டால், அது உங்கள் பெருந்தன்மையைக் குறிக்கும். மாறாக கதையை வேறெங்கிலிருந்தோ எடுத்துவிட்டு, நானே அதற்குச் சொந்தக்காரன் எனச் சொன்னால் இவ்வுலகம் உங்களை ஏளனமாகப் பார்க்கும். நானே ரூம் போட்டு கதை எழுதுகிறேன் பேர்வழி என, ஹீரோவுக்காக எதையாவது எழுதி, நான்கு பைட், நான்கு பாடல், கொஞ்சம் கிளாமர் எடுத்து எங்களைச் சாகடிப்பதைவிட உலகின் எந்த மொழிப் படத்தையும் காப்பி அடித்தாவது ஒரு நல்ல தமிழ்ப் படத்தைத் தாருங்கள். தவறில்லை.

உழவன்

8 comments:

ராமலக்ஷ்மி said...

சினிமா குறித்த பார்வையுடன் சிலாகித்திருக்கும் தெய்வத் திருமகள் விமர்சனம் அருமை. நானும் பார்க்க உள்ளேன்:)!

Chitra said...

"I am Sam"
http://en.wikipedia.org/wiki/I_Am_Sam
பாருங்க..... ஒரிஜினல் நடிப்பு ஒரிஜினல் தான்.
விக்ரம் அந்த படத்தை பார்த்து practice செய்தது போல ஒரு பீலிங்க்ஸ்.
For "I am Sam" trailer: http://www.youtube.com/watch?v=EROTbDCr5ag

சே.குமார் said...

சினிமா குறித்த பார்வை + தெய்வத் திருமகள் விமர்சனம் அருமை.

பலே பிரபு said...

விக்ரமின் உழைப்பு அருமை. But i am sam பாத்த அப்புறம் அது தோனல. இருந்தாலும் நல்ல படம்.

ஹுஸைனம்மா said...

//இந்த வாரம் எதையாவது எழுதி ப்ளாக்கில் பதிவிட்டுவிடவேண்டும் என்பதற்காகவே எதையாவது எழுதுவதுபோலத்தான், இந்த சினிமாக்காரர்களும் என நினைக்கிறேன்//

ஹி.. ஹி... ஐ லைக் இட்.. :-))))))

இராஜராஜேஸ்வரி said...

நான் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்கிறேன் “நான் தெய்வத் திருமகள்” பார்த்துவிட்டேன் என.//

வாழ்த்துக்கள்.

குடிமகன் said...

//இயக்குநர்களே.. இந்தப் படத்திலிருந்துதான் நான் இந்தக் கதையை எடுத்தேன் என நீங்கள் வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டால், அது உங்கள் பெருந்தன்மையைக் குறிக்கும். மாறாக கதையை வேறெங்கிலிருந்தோ எடுத்துவிட்டு, நானே அதற்குச் சொந்தக்காரன் எனச் சொன்னால் இவ்வுலகம் உங்களை ஏளனமாகப் பார்க்கும். நானே ரூம் போட்டு கதை எழுதுகிறேன் பேர்வழி என, ஹீரோவுக்காக எதையாவது எழுதி, நான்கு பைட், நான்கு பாடல், கொஞ்சம் கிளாமர் எடுத்து எங்களைச் சாகடிப்பதைவிட உலகின் எந்த மொழிப் படத்தையும் காப்பி அடித்தாவது ஒரு நல்ல தமிழ்ப் படத்தைத் தாருங்கள். தவறில்லை.//

இதை நான் வழிமொழிகிறேன்..

அமைதிச்சாரல் said...

//படம் பார்க்கும்போது மனது வேறு எங்கும் பயணிக்காமல் திரைப்படத்தோடு ஒன்றிடவேண்டும். அவ்வப்போது மனது சபாஷ் சொல்லவேண்டும்; கண் கலங்கவேண்டும்; நம்மையறியாமல் கைதட்டவேண்டும்//

அப்படியான படங்கள் ரொம்ப குறைச்சலாத்தான் வருது. தெய்வத்திருமகள் அந்த வரிசையில் இல்லாதது நிம்மதி..

விமர்சனம் நல்லாருக்கு..