Wednesday, July 12, 2017

ரிமோட் உங்கள் கையில்தான் இருக்கிறது!

ரிமோட் உங்கள் கையில்தான் இருக்கிறது!
வகை: கட்டுரை

நம் வாழ்வியலில் கேளிக்கைகைகள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை. இவைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும்  வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ரெக்கார்டு டான்ஸ், பாவைக்கூத்து, சர்க்கஸ் இப்படி ஒரு சிறு குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்களைப் பொழுது போக்குவர். பெரும்பாலும் இக்குழுவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர் இருப்பர்.

இவர்களின் இடத்தைத் தொலைக்காட்சிகள் பிடிக்கத் தொடங்கின. தொலைக்காட்சிகள் கொடுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பாவைக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தன. மக்கள் கிராமிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட்டுவிட்டு தொலைகாட்சி முன்னரே அமர்ந்தனர். இது ஒரு பரிணாமம்.

இப்படி அறிவியல் வளர வளர நம் வாழ்க்கையின் பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. மாறிக்கொண்டுதான் இருக்கும். இதனுடைய ஒரு நீட்சியாகத்தான் நான் "பிக் பாஸ்" நிகழ்ச்சியையும் பார்க்கிறேன். இரண்டரை மாதங்களாக எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை. முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் தமிழகத்தின் நிகழ்வுகளை கொஞ்சமேனும் அறிந்து கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் எப்போதும் இந்த நிகழ்ச்சியைப் பற்றியே பேசுகிறார்களே, அப்படி என்னதான் இருக்கிறது என்கிற கேள்வி என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. எப்படியாவது ஒருநாள் ஹாட் ஸ்டாரில் பார்த்துவிடவேண்டும் என்கிற எண்ணம் நேற்று நிறைவடைந்தது. எனக்குப் பிடித்திருந்தது.

ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் கூட, அங்கு குழந்தைகள் விளையாடும் வண்ணம் சில விளையாட்டுப் பொருட்களை அங்கு வைத்துள்ளார்கள். சாப்பிடப்போகும் இடத்தில் விளையாட்டு எதற்கு? தொலைக்காட்சிப்பெட்டி இல்லாத ஹோட்டல்கள் இருக்கிறதா? ஏனென்றால் நமக்கு கேளிக்கைகள் தேவைப்படுகிறது. நம்மை நாம் கவனிப்பதைவிட, நாம் நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரிந்துகொள்ளவே ஆசைப்படுகிறோம். நமக்கு ஏதாவது ஒன்று  தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு எதையாவது தந்துவிடவேண்டும் என்று எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். வார இதழின் நடுப்பக்கம் வேறுவிதமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் விரும்ப வைக்கப்படுகிறீர்கள்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தபோது எல்லோரும் ஜாலியாக இருந்தார்கள். கமலின் விருமாண்டி கெட்டப் போட்டு, பாடலுக்கு ஒவ்வொருவராக ஆடினார்கள். ஓவியா ஆடும்போது அவரின் வேட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்துகொண்டே வந்தது. அருகில் இருந்தவர்கள் வேட்டி வேட்டி என்று சொன்னதை அவர் அறிந்திருக்கவில்லை. ஆடிமுடிக்கும்போதுதான் பார்த்தார். வேட்டியைப் பிடித்துக்கொண்டே "எல்லோரும் பார்த்தாச்சா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். எல்லோரின் முன்னிலையும் ஒரு பெண் இப்படிக் கேட்கிறாரென்றால், அவருக்கு எவ்வளவு மெச்சூரிட்டி வேண்டும். இது ஆண் ; இது பெண். ஆணுக்கு உடல் அமைப்பு எப்படியோ அப்படி ஆணுக்கும், பெண்ணுக்கு உடல் அமைப்பு எப்படியோ அப்படிப் பெண்ணுக்கும் இருக்கிறது என்கிற புரிதல் இருக்கிற யாவருக்கும் இது ஒரு பெரிய விசயமாகத் தெரியாது. உடல் பற்றிய புரிதல் இருந்தாலே பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது. சேரி பிஹேவியர் என்று காயத்ரி சொன்னதாக ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. இது கண்டிப்பாகக் கண்டிக்கக் கூடியது.

புறங்கூறுதல் என்பது நேற்று இன்றா வந்தது. இது தொன்றுதொட்டு நம்மிடையே இருக்கும் ஒரு பழக்கம். இது நல்ல பழக்கமா இல்லை கெட்ட பழக்கமா என்பதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாம் அலுவலகத்தில் பேசாத புறணியா. இதைத்தான் இந்த  நிகழ்ச்சியில் எல்லோரும் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன சமுதாயச் சீர்கேடு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாமல் இதில் இருக்கிறது என்று, அந்த நிகழ்ச்சியை மோசம் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதைப்பற்றி ஒரு விவாதம், காவல்துறையில் ஒரு புகார். இதெல்லாம் எதற்கென்றே தெரியவில்லை. உங்கள் கூச்சலால் கிரிக்கெட்டிலிருந்து சியர் கேர்ள்ஸைத் தூக்கமுடிந்ததா ? கிரிக்கெட் பார்க்காமலா  இருக்கிறீர்கள்?

நீங்கள் மறந்துபோன ஒன்றைமட்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். "ரிமோட் உங்கள் கையில்தான் இருக்கிறது".

இடம்: இங்கிலாந்து
நாள்: 12 ஜூலை 2017 ; இரவு 11.12

No comments: