Sunday, July 24, 2016

சமூக மாற்றம்



ட்ரவுசர் போட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த பள்ளிக்கு காலங்களில், சனி ஞாயிறு விடுமுறைகளில் நாம் ஓணான் பிடித்திருப்போம். பெரிய மஞ்சனத்திக் கம்பை எடுத்து, அதன் நுனியில் சுருக்குப் போட்ட நரம்பைக் கட்டி வைத்துக் கொள்வோம்.
ஓணான் கண்ணில் பட்டுவிட்டால், பூவினும் மென்மையாக அக்கம்பை நீட்டி, அதன் கழுத்தில் சுருக்கை நுழைத்து வெடுக்கென இழுத்ததும் ஓணான் மாட்டிக் கொள்ளும். அதன்பின்னர் அது படும் பாட்டை சொல்லி மாளாது.
மிளகாய்ப் பொடி, மூக்குப்பொடி இப்படி ஏதேனும் ஒன்றை அதன் மீது தூவும்போது கண்களில் பட்டு, எரிச்சல் தாங்காமல் துடிக்கும். அதனைப் பார்க்கும் நாம், "ஹேய்.. சூப்பரா டான்ஸ் ஆடுது" என சந்தோசத்தில் கைதட்டி மகிழ்வோம்.
புளியமரத்தில் அணில்கள் சுற்றிச் சுற்றி விளையாடும். நரம்புக் கயிற்றில் நிறைய சுருக்குகள் செய்து, புளியமரத்தின் மேல் சுற்றிலும் கட்டிவிட்டு, சுருக்குகள் இருக்கும் இடத்திலெல்லாம் சிறிது கம்மஞ் சோற்றை வைத்துவிட்டால் போதும். அணில்கள் சோற்றைத் திங்க மெதுவாக வரும். வரும்போதோ திண்றுவிட்டுச் செல்லும்போதோ எப்படியும் நாலைந்து மாட்டிக் கொள்ளும்.
அதனைப் பிடித்து, பிளேடால் அறுத்து தோல், குடலை நீக்கி, உப்பு வைத்து தீயில் சுட்டு ஆளுக்கு கொஞ்சம் தின்ற அனுபவமும் உண்டு.
இப்படி இருந்தது நம் பால்யகால விளையாட்டுக்கள் / கொடூரங்கள். இன்று காலை பாலிமர் தொலைக்காட்சி பார்த்தபோது, சிறுவர்கள் சிலர் தீயை மூட்டி விளையாடுகிறார்கள். அத்தீயில் ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிப் போடுகிறார்கள். அது கீச் கீச் எனக் கத்திக் கொண்டே எரிந்து சாம்பலாகிறது.
காலமாற்றம் நம் சமூகத்தை எங்கோ கொண்டு சென்றிருக்கிறது. அடுத்தவன் உடம்பிலிருந்து தெறிக்கும் இரத்தம் நமக்கு எந்தவித படபடப்பையும் இப்போது கொடுப்பதில்லை. அது இரத்தம் அவ்வளவே என எளிதில் நம்மால் கடந்துவிட முடிகிறது.
சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றமே இப்படி என்றால், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் சமூக மாற்றம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

No comments: