Thursday, September 25, 2014

புலி அப்படித்தான்


புலி அப்படித்தான்
தன்னைப் பார்க்க
தான் இருக்குமிடம்
தேடி வந்தவனின்
கழுத்தையும் பிடித்து
இழுத்துச் செல்லும்
புலி அப்படித்தான்
ஒரு குழந்தையின் சிரிப்பை
ஒரு அகாலத்தின் மௌனத்தை
ஒரு தொடுதலின் பரிசத்தை
எதுவுமே அறியாத
புலி அப்படித்தான்
கழுவி சுத்தம் செய்து
தோல் சீவி எச்சிலூற
ஒரு பப்பாளியை வெட்டுவதைப் போல
ஒரு குழந்தையை
வெட்டுபவனின் கைகளுக்கும்
அதனை சிரத்தையோடு
படம் பிடிப்பவனின் கைகளுக்கும்
ஏதேனும் வித்தியாசம் இருப்பின்
அதனை ஸ்டேட்டஸாகப் போடுங்கள்
- உழவன்