Sunday, July 6, 2014

11 மாடிக் கட்டிடம்


வழக்கமான மழைதான்
வழக்கமான இடிதான்
ஆனால் அன்றுமட்டும்
அந்நகரம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது.

நகரத்தின் ஓலம்
ஐயோ என்ற அலறலோடு ஆரம்பித்திருந்தது.

செங்கற்களைத் தலையில் சுமந்து
மாடி வளர்த்தவள்
செங்கற்களுக்கிடையில்
முனுமுனுப்பின்றிக் கிடக்கிறாள்.

முனங்கக்கூட திராணியற்று
மூன்று நாட்களாக
மூச்சைப் பிடித்துவைத்த ஒருவன்
நாயின் மோப்பத்தால்
மீண்டும் பிறக்கிறான்.

கையுறைகளின் வழியே
வழியும் சதைகளை
பாலித்தீன் பைகளில் போடும்போது
குவியல் கற்களும் கரைகின்றன.

கழுகுகள் வரத்துவங்கிய காலத்தில்
அவ்விடம் துடைக்கப்பட்டு
வழக்கமான நகரமாயிருந்தது.


உழவன்

1 comment:

'பரிவை' சே.குமார் said...

வலி நிறைந்த கவிதை...
வாழ்த்துக்கள்.