Monday, July 11, 2011

மகுமை

ஊருக்குள் என்ன வியாபாரம் செய்தாலும்
மகுமை கொடுத்தாகவேண்டும்
ஏலமெடுத்த நாட்டாமைக்கு.

தினமும் காலை 11 மணிக்கு
ஐஸ்காரன் வருவான்.
“காசு வேண்டாம்
புள்ளைகள் கையில் ஐஸ் குடுத்துட்டுப் போ”

சில நாட்களில் மீன்காரன் வந்து
மகுமையை ஆரம்பித்துவைப்பான்.
“மகுமை பத்து ரூபா போக
அரைக் கிலோ மீனுக்கு மிச்ச காசு வாங்கிட்டுப் போ”

செளமிட்டாய்
வளையல்
பேரிச்சம்பழம் என
யார் வந்தாலும்
மகுமை வசூலிக்க
நாட்டாமை தவறியதேயில்லை.

பக்கத்து ஊரு சாந்தி
வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது
ஓடைப்பக்கம் வந்துவிடுவாள்.
'இந்த சனியன் பிடிச்ச மகுமை ஏலத்தை
ஏன் அவரு எடுக்குறார்னு இப்பதான தெரியுது'
உடைந்துபோன பானையின் வாய்வளையத்தில்
இழுத்துக் கட்டப்பட்ட பறையின் சத்தமாய்
நாட்டாமை வீட்டுக்காரியின் புலம்பல்
அவ்விரவை நிறைத்துக்கொண்டிருக்கும்.

உழவன்

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கவிதை சூப்பருங்கண்ணா.