Wednesday, May 18, 2011

புதிய அரசிற்கான சில கோரிக்கைகள்


மின்சாரம்

புதிய அரசிற்கு மிகப் பெரும் சவாலாக இருக்கப்போவது மின்சாரம் தான். ஏனெனில் மனிதனுக்கு உணவு எப்படி முக்கியமோ அதைவிட முக்கியமாகிப் போனது மின்சாரம். உணவு, உடை, உறைவிடம் என்ற அத்தியாவசியத் தேவைகளோடு மின்சாரமும் ஒன்றிப்போனது.
பழைய அரசே தொடர்ந்திருக்குமானால், அவர்களுக்கு இது ஒரு பொருட்டில்லை. இவ்வளவு ஊழல் மற்றும் குடும்ப ஆக்ரமிப்பிற்குப் பின்னரும் நாம் வந்துவிட்டோம் என்ற மிதப்பில் ஏதோவொரு காரணத்தைச் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டலாம். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால், இம் மின்சாரப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய புதிய அரசு ஏதாவதொரு முயற்சியை மேற்கொண்டே ஆகவேண்டும். உடனடியாகத் தீர்ந்துவிடக்கூடிய பிரச்சனை இல்லையென்றாலும், மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு சில திட்டங்களையாவது அறிவித்தே தீரவேண்டும்.

கல்வி

இன்று வீதிகளில் கல்வியைக் குவித்து வைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். விலையுயர்ந்த கல்வியில்தான் தரமிருக்கிறது என்று காசுள்ளவர்கள் அதனை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். காசில்லாதவர்கள் அவர்களின் தரத்திற்கேற்ப கல்வியை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். எது நல்ல கல்வி என்பது தெரியாமல், இதை வாங்கவா அதை வாங்கவா என, நல்ல கல்வி எது என்று தெரியாமல் ஒருசாரார் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். கல்வியை வியாபாரமாக்கிய பெருமை நம் அரசுகளையே சாரும். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்லூரிகளைக்கூட எளிதில் தேர்வு செய்துவிடலாம்; குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்விக் கூடங்களைத் தீர்மானிப்பதுதான் பெரும் சங்கடமாக உள்ளது. பொறியியல் கல்விக்கான ஓராண்டுக் கட்டணத்தை முதலாம் வகுப்பிற்குக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு பள்ளிகளின் தரத்தை உடனடியாக உயர்த்துவதோடு, தனியார் பள்ளிகளையெல்லாம் அரசுடைமையாக்கி, கல்விக்கட்டணங்களை ஒழுங்குபடுத்தினால்தான் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தைத் தடுக்கமுடியும்.

ஊழல்

பத்துப் பைசாவானாலும் ஊழல் என்றால் குற்றமே என்று சொன்ன மக்களையே “ஊழல் செய்யலாம்; ஆனால் கொஞ்சம் அளவோடு செய்யவேண்டும்” என்று சொல்லவைத்த பெருமை நம் அரசியல் கட்சிகளையே சாரும். ஒருவிதத்தில் இது அரசியல் கட்சிகளின் வெற்றிதான். அவர் ஊழல் செய்தார் என்று யாரேனும் சொன்னால், யார் தான் செய்யவில்லை என்ற எதிர்கேள்வியைக் கேட்கவேண்டியுள்ளது. காற்று இருக்கிற இடங்களிலெல்லாம் ஊழலும் லஞ்சமும் விரவிக்கிடக்கின்றன.
இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு முக்கியக் காரணமும் கடந்த ஆட்சியினரின் ஊழல்தான். அதே ஊழல் புகார்கள் இன்றும் முதல்வர் ஜெயலலிதாவின் மேலும் உள்ளது. ஆதலால் விரைவில் ஊழல் தடுப்புக் குழு ஒன்றை அமைத்து, ஊழலுக்கெதிராக புதிய ஆட்சி என்ன செய்யப் போகிறது என்பதை அறிவித்தால் மக்கள் கொஞ்சம் மகிழ்ச்சியடைவார்கள்.

இலவசங்கள்

இலவசக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்திய அரசு இன்று படுதோல்வி அடைந்துள்ளது. இலவசங்களுக்காக ஓட்டுப் போடுவதில்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக அறிவித்திருந்த இலவசங்களுக்குப் போட்டியாகவே அதிமுகவும் அறிவித்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். ஆதலால், இந்த புதிய அரசாவது இலவசங்களைக் கைவிடவேண்டும். அறிவித்தபடி மிக்சி, மின்விசிறி, மடிக்கணினி என அனைத்தையும் கொடுக்கவேண்டும் என அரசு எண்ணூமானால், அதனை மானியவிலையில் கொடுக்கட்டும். அப்பொருளுக்காக அரசு மக்களிடமிருந்து ஏதாவதொரு தொகையைப் பெற்றாகவேண்டும். அப்போதுதான் அதனை வாங்கும் ஏழை மக்களுக்கு, என்னுடைய பணமும் அதிலிருக்கிறது என்ற எண்ணமும், அதனைத் தன் பொருள்போலக் கையாளும் எண்ணமும் வரும்.

நகரங்களுக்கான சமவளர்ச்சி

தொழிற்சாலைகளாட்டும், மென்பொருள் பூங்காக்களாட்டும் அனைத்துமே சென்னையில்தான் பெரும்பாலும் அமைகின்றன. இதனால் அபரிதமாக வளரும் சென்னையில் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, சென்னை ராமாபுரம் அருகில் இருக்கும் மென்பொருள் பூங்கா வருவதற்கு முன்னால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விலைவாசி குறைவாகத்தான் இருந்தன. சென்னையின் மையப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த நடுத்தர மக்களால் அங்கு வாழமுடியாத சூழல் ஏற்பட்டபோது, அவர்கள் சென்னையைவிட்டுத் தள்ளி இதுபோன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஆனால் இங்கும் மென்பொருள் பூங்கா வந்த பின்பு உடனடியாக அனைத்துப் பொருட்களும் விலையேறியதால், இப்போது இந்த இடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆதலால், சென்னைக்குக் கொடுக்கும் முக்கியதுவத்தை, தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும் கொடுத்து தமிழக நகர வளர்ச்சியை சமநிலைப் படுத்தவேண்டும். அதற்கான உட்கட்டமைப்புகளை அரசு துவக்கவேண்டும்.

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

உழவன்

4 comments:

ராமலக்ஷ்மி said...

சிறப்பான சிந்தனைகளையும், அவசியமான ஆலோசனைகளையும் கோரிக்கைகளாக முன் வைத்திருக்கிறீர்கள். மிக நல்ல பதிவு.

Chitra said...

Good suggestions.

பலே பிரபு said...

நியாயமான கோரிக்கைகள். என் மனதுள்ளும் உள்ளவை இவை.

ஹுஸைனம்மா said...

எல்லாரின் கோரிக்கைகளும் இவையே. (பாருங்க, ஆள்பவர்களிடம் நாம் உத்தரவு போட இயலாமல், “கோரிக்கை” வைக்கிறோம்!!)