Sunday, May 8, 2011

இப்படியும் காவலர்கள்


ண்பர்களோடு சூளைமேட்டில் வசித்தபோது சனிக்கிழமை தோறும் சினிமாவுக்குச் செல்வது வழக்கமாகிப்போயிருந்தது. அதுவும் இரவுக்காட்சிதான். சிலசமயங்களில் புதிய வரவுகள் இல்லையென்றால், ஏதாவதொரு படத்திற்குச் செல்வோம். மொக்கைப் படம் என்று தெரிந்தே சென்ற படங்களெல்லாம் உண்டு. பச்சக் குதிரை படத்தை இடைவேளை வரை கூடப் பார்க்கச் சகிக்காமல் பாதியிலேயே எழுந்து வந்திருக்கிறோம். சில சமயங்களில் இம்மாதிரியான மொக்கைப் படங்கள்தான் பயங்கர ஜாலியையும் தந்திருக்கிறது. மொக்கைப் படங்களுக்கு கூட்டமும் அதிகம் இருக்காது. நாம் எவ்வளவு கமெண்ட் அடித்தாலும் படம் பார்ப்பவர்கள் யாருக்கும் கோபமும் வராது. மாறாக எல்லோரும் சிரிப்பார்கள். நம்மைப் போன்று வேறு எதாவது நண்பர்கள் கூட்டம் வந்திருந்தால், அவர்களும் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்திற்கும் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சந்திரமுகி படத்தை மினி உதயத்தில் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியில் ரஜினியின் முகத்தில் ஒளி தெரிவதாகக் காட்டுவார்கள் (தேஜஸ்?). அப்போது நான் “யார்டா தலைவன் முகத்துல டார்ச் லைட் அடிக்கிறது?” என சத்தமாகக் கத்தியபோது கிட்டத்தட்ட எல்லோருமே சிரித்துவிட்டார்கள். பக்கதிலிருந்த நண்பன் “யோவ்.. இது ரஜினி படம். ரசிகர் மன்றத்திலிருந்து மொத்தமா யாராவது வந்திருந்தா பிரச்சனையாயிடும்” என்றான். அதற்குத்தானே உஷாரா நான் “தலைவன் முகத்துல”னு சொன்னேன் எனச் சொன்னேன். எஸ்.ஏ. சந்திரசேகரின் மெரும் மொக்கையான ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தையெல்லாம் கமெண்டடித்துக்கொண்டே ஜாலியாகப் பார்த்த ஞாபகம்.

இரவுக் காட்சிக்குப் பின்னர் அறைக்குத் திரும்பும்போது பெரும்பாலும் போலீஸின் சோதனைகளுக்கு ஆளாகவேண்டியிருக்கும். ஒவ்வொரு சோதனையின்போதும், உரிய ஆவணங்களைக் காட்டியவுடன் ஊதச் சொல்வார்கள். அவர்கள் முகத்தில் ப்ப்பூ வென ஊதிவிட்டுக் கிளம்புவோம். சில நேரங்களில் ட்ரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் என எதையுமே கேட்கமாட்டார்கள். ஊத மட்டுமே சொல்வார்கள். ஒருநாள் இரண்டு பைக்குகளில் நாங்கள் நால்வர் தியேட்டருக்குச் சென்றுவிட, வெளியே சென்றிருந்த நண்பனொருவன் நேராகத் தியேட்டருக்கு வந்துவிட்டான். அவனிடம் பைக் இல்லை. படம் முடிந்தவுடன் ஒரு வண்டியில் ட்ரிபிள்ஸ் செல்லவேண்டிய கட்டாயம். சரி வா போகலாம்; ஒருத்தனும் இருக்கமாட்டான். அப்படியே இருந்தாலும் பார்த்துக்கிடலாம் என்ற தைரியத்தில் புறப்பட்டோம்.

உதயம் தியேட்டரிலிருந்து வெளிவந்து, வடபழனி செல்லும் சாலையில் திரும்பி, கோடம்பாக்கம் செல்வதற்காக வலதுபுறம் திரும்பினால் எதிரே ட்ராபிக் போலீஸ். உயரதிகாரி போல. அவர் காரின் முன் நின்று கொண்டிருக்க, இரண்டு காவலர்கள் கையில் கம்போடு வண்டிகளை ஓரங்கட்டிக்கொண்டிருந்தார்கள். ட்ரிபிள்ஸில் வந்த எங்கள் வண்டியை மட்டுமே நிறுத்தினார்கள். ஒரு நூறு ரூபாய்க்கு வேட்டு வைச்சிட்டாங்க என நினைத்துக்கொண்டே இன்ஸ்பெக்டரின் அருகில் சென்றோம். ஆனால் நடந்தது வேறு. அட்வைஸோ அட்வைஸ். கால்மணி நேரத்திற்குமேலாக இன்ஸ்பெக்டரின் அட்வைஸ் மழையில் நனைந்துகொண்டிருந்தோம். “உங்க நன்மைக்காகத்தான் ட்ரிபிள்ஸ் போகக்கூடாது எனச் சொல்கிறோம். எங்கேயாவது விழுந்து கிடந்தால் யாருக்கு நஷ்டம், எங்க வேலை பார்க்குறீங்க, எந்த ஊரு?” இப்படியே போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் “நீங்கள் ஆட்டோவில் போயிருந்தால் ஒரு நாள் அந்த ஆட்டோக்காரன் வீட்டுல அடுப்பு எரியும். ஏன் இப்படியெல்லாம் இளைஞர்கள் யோசிக்கமாட்டிக்கிறீங்க” எனச் சொன்னார். ரொம்ப நல்லவரு. இனிமே இப்படி போகக்கூடாது என அறிவுரைகள் கூறிவிட்டு, “தலைக்கு பத்து ரூபாய். மூன்று பேருக்கு முப்பது ரூபாய் ஃபைன். அதையும் என்னிடம் கொடுக்கவேண்டாம். அதோ நிற்கிறாரே போலீஸ். அவரிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். பாவம் நைட் முழுக்க வேலை பார்க்குறாங்க” எனச் சொல்ல, சந்தோசமாய் முப்பது ரூபாயைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டோம். இவ்வளவு நல்ல போலீசாரும் இருக்கிறார்களா என அவரைப் பற்றியே பேசிக்கொண்டு சென்றோம். இது நடந்து எப்படியும் ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்.

ந்த 2011-12ம் ஆண்டிற்கான மொத்த விற்பனை (Turnover) அளவை நிர்ணயித்து, அது சம்பந்தமாக ஒரு கூட்டம் ஒன்றிற்கு வருமாரு கடந்த மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை கம்பெனி அழைத்திருந்தது. பாண்டிச்சேரியில் வேலை பார்த்துகொண்டிருந்த நண்பனொருவனுக்கு, சென்னையில் வெறொரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்ததால், சென்னையில் வீடு பார்ப்பதற்காக வந்தவன் சனிக்கிழமை என் வீட்டில் தங்கியிருந்தான். மற்நாள் அவனுக்கு என்னுடைய பைக் தேவைப்பட்டதால், என்னைக் கம்பெனியில் விட்டுவிட்டுச் செல்லுமாறு சொல்லிவிட்டு இருவரும் பைக்கில் புறப்பட்டோம். வழியில் என்னோடு பணிபுரியும் நண்பனொருவர் நடந்து வந்துகொண்டிருக்க, வண்டியை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொண்டோம். எனது வீட்டிற்கும் கம்பெனிக்கும் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம்தான். மிகவும் அருகில் என்ற காரணத்தாலும், அதுவும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிபோல் ட்ராபிக் போலீஸ் யாரும் இருக்க வாய்ப்பில்லை என்றும் கருதித்தான் ட்ரிபிள்ஸில் சென்றோம். பாதி தூரத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் இரண்டு ட்ராபிக் போலீஸார் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. உடனேயே வண்டியை நிறுத்தி, மூன்றாவதாக ஏறிய சகஊழியனான என நண்பனை ஷேர் ஆட்டோவில் கம்பெனிக்கு வரச்சொல்லிவிட்டு, இருவருமாய்ச் சென்றோம். எல்லா வண்டிகளையும் விட்டுவிட்டு, எங்கள் வண்டியை மட்டுமே ஓரங்கட்டினார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ட்ராபிக்கே இல்லை. அதனால் நாங்கள் ட்ரிபிள்ஸ் வந்ததையும், போலீஸைப் பார்த்தவுடன் ஒருவரை இறக்கிவிட்டதையும் அங்கிருந்தே பார்த்திருக்கிறார் போலும்.

“அதான் ட்ரிபிள்ஸ் வரக்கூடாதில்ல; அங்கேயே இறக்கிவிட்டுட்டா சும்மா விட்டுருவமா? ஹெல்மெட் வேற போடல” எனச் சொல்ல, அவரிடம் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தோம். கம்பெனி ஐடிகார்டைக் காண்பித்து, “இங்கு பக்கத்தில்தான் இருக்கிறோம்; கொஞ்சம் முக்கியமான வேலை இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை கூட செல்லவெண்டிய கட்டாயம். உங்களைப் பார்த்தவுடனேயே ஒருவரை இறக்கிவிட்டோம் எனில் உங்கள் மேல எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறோம் பாருங்க” என நான் சொல்ல, அவரோ “மரியாதையில்ல பயம்” என அவர் சொல்ல, “ஏதோ ஒன்னு” என நான் திரும்பச் சொல்ல, “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க?” என அவர் கேட்கவும், “மன்னிச்சு விட்டுரலாம்” என நாங்கள் சொன்னவுடன், சரி போங்க எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அட.. என்னையை பிடிக்கிற ட்ராபிக் போலீஸெல்லாம் எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க என நினைத்தபோது, எனக்கு மேற்சொன்ன பழைய ஞாபகமே வந்தது.

உழவன்

டிஸ்கி: எப்ப மாட்டிக்கிட்டு ஃபைன் கட்டப் போகிறேனோ தெரியல. யாரும் சாபம் விட்டுறாதீங்க :-)

5 comments:

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறீங்க.

அந்த “ஏதோ ஒன்னை” விதிமுறை மேலும் வைத்து விட்டால் மாட்டும் பிரச்சனையே வராது பாருங்க:))!

sakthi said...

தலைப்பை பார்த்து ஏதோ விவகாரம்ன்னு வந்தால் காவலர்களுக்கு நல்ல பேர் தந்திருக்கும் உங்களை என்ன சொல்ல வாழ்த்துக்கள் எப்பவும் மாட்டாம இருக்கிறதுக்கு

Chitra said...

எப்ப மாட்டிக்கிட்டு ஃபைன் கட்டப் போகிறேனோ தெரியல. யாரும் சாபம் விட்டுறாதீங்க :-)


......நீங்க நல்லவரா? கெட்டவரா? ஹா,ஹா,ஹா,ஹா.....

ஹுஸைனம்மா said...

ஹெல்மெட் தவறாமல் அணியுங்க. எல்லா நேரமும் நல்ல நேரமாக இருக்காது. கவனமா இருங்க.

காவலர்களில் நல்லவங்களும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். (ஆமா, ஹெல்மெட் போடாமப் போனாலும், லஞ்சம் வாங்கல, சரி. ஆனா, ஃபைன் போடாம விட்டா நல்ல போலீஸா என்ன? :-)))))) )

ss said...

ஏய் அத்ருஷ்டகாரன்யா நீ !!! நல்லருக்குதுப்ப உன் ப்ளாக்.