Friday, February 18, 2011

நடுநிசி நாய்கள்

இந்த நடுநிசி நாய்கள்
இருள் விழுங்குகையில்
தொண்டையில் சிக்கிக்
கத்திச் சாகின்றன.
 
தரை வெளுத்ததும்
பாதையோரம்
குனிந்த தலை குனிந்தபடி
மோப்பக் காற்றில் தூசி பறக்க
சாபத்தின் ஏவல்போல்
மனித மலங்கள்
தேடித் திரிகின்றன.
 
கறுப்பு விதைகாட்டி
பிட்டி சிறுத்துக் குலுங்க,
வெட்கம் கெட்டுத்திரியும்
இந் நடுநிசி நாய்களுக்கு
ஓய்வில்லை;
உறக்கமும் ஓய்வாக இல்லை.
 
கை உயர்த்திப் பாசாங்கு காட்டும்
பள்ளிச் சிறுவரிடம் பயங்கொண்டு
இந் நடுநிசி நாய்கள்
பின்னங் காலிடை நுழையும் வாலை
வாய்கொண்டு பற்றி இழுத்து
பயங்கொண்டு வால்தின்று சாகின்றன.
 
முற்பகலில் மனம் மூட்டமடைய
நினைவுகளால் துக்கம் தேக்கி
சிறிது வலுச்சண்டை கிளப்பி
கடித்துக் குதறி
ரத்தம்கண்டு ஆசுவாசம் கொள்கின்றன.
 
பிற்பகல் ஒளிவெள்ளம்
பார்வையைத் தாக்க
இலைகளின் நிழல்கள் முதுகில் அசைய
சற்றே கண்மயங்கிக் கிடக்கின்றன.
 
மாலையில் கண்விழித்து
நால் திசையும் பார்வை திருப்பி
உறக்கத்தில் சுழன்ற உலகம் மதித்து
எழுந்து சோம்பல் முறித்து நீட்டி நிமிர்ந்து
தேக்கிய சிறுநீர்
கம்பந்தோறும் சிறுகக் கழித்து
ஈக்கள் மேல்வட்டமிட்டுப் பின்தொடர
மாலை நடை செல்கின்றன.
 
அந்தியில் புணர்ச்சி இன்பம்
(ஒரு தடவை அல்லது இரு தடவை)
மீண்டும் நடுநிசியில் இருள் விழுங்கித்
தொண்டை சிக்கக் கத்தல்.
 
-கசடதபற மார்ச் 1973
 
("சுந்தரராமசாமி கவிதைகள்" நூலிலிருந்து)

4 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க... Good timing!

Anonymous said...

அடடா இதையும் கவிதையாக்கியதை என்னவென்று சொல்ல..மிகச்சரியா சொல்லி இருக்கீங்க கிருஷ்ணா..என்ன செய்ய அதன் இயல்பு..

இராஜராஜேஸ்வரி said...

தொண்டை சிக்கக் கத்தல்.
not lovably.

"உழவன்" "Uzhavan" said...

@Chitra
@தமிழரசி
@இராஜராஜேஸ்வரி

அனைவருக்கும் நன்றி