Sunday, July 19, 2009

காசு வெட்டப் போறீங்களா?

தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், பசுவானது அரண்மனை வாசலில் வந்து மணியடித்தது. ஒற்றைச் சிலம்போடு அரியாசனம் நோக்கி ஓடிச்சென்று வாதிட்டாளே ஒருத்தி. எல்லாமே நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். இப்படி நீதியை நிலைநாட்டிய அரண்மனைகள் பின்னர் காட்சிப்பொருள்களாக மாறிவிட்டன. மக்களாட்சி முறையில் நீதிமன்றங்கள் நீதிகளை வழங்கியபோதிலும் நாட்டாமைகளின் ஆலமரத்தடிகளுக்கும் அதில் நிறைய பங்கிருந்தது. வசதிபடைத்தவர்கள்கூட காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்று தனக்கான நீதியைப் பெறுவதற்குள் போதும் போதுமென்று அலுத்துக்கொள்ளும் நிலையிருக்கும்போது, சாமானியன் நம்பியது இந்த ஆலமரத்தடிகளைத்தான்.

ஆனால் இந்த ஆலமரத்தடிகள் பணம் படைத்தவன் பக்கமும், அதிகார வர்க்கத்தின் பக்கமும் சாய ஆரம்பித்தபோது ஏழைகளின் நீதி கைக்கு எட்டாது காற்றிலேதான் கலந்திருந்தது. வாங்கிய ஆயிரம் ரூபாய் கடன் ஒரு ஜோடிக் கம்மலையே விழுங்கிவிட்டதாக பண்ணையார் சொல்லிவிட்டார்; மனைவியின் மருத்துவச் செலவுக்காக அவசரமாய் பணம் தேவைப்பட்டதால், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதைவைத்து இரண்டு ஏக்கர் நன்செய்யையே அவன் அநியாயமாய்ப் பிடுங்கிக்கொண்டான். இப்படி நிறைய... இவைகளை எதிர்த்து நீதிமன்றங்களுக்குச் செல்லக்கூடிய நிலைமையிலா சாமானியன் இருக்கிறான். அப்படியே சென்றாலும் பாதி வழக்கு முடிவடைவதற்குள் அவனது வாழ்க்கையே முடிவடைந்துவிடுமே. அப்படியென்றால் அவனுக்கு நீதியே கிடையாதா? அவன் தன் மனக்குமுறலை யாரிடம்தான் சொல்வான்?

இதுபோன்ற தருணங்களில் அவன் நாடிசென்ற இடங்கள்தான் கோவில்கள். அங்கு தன் மனக்குமுறலைக் கொட்டி, இறைவனிடம் வேண்டி தன் மனதிற்கு ஆறுதலைத் தேடினான். ஆனால் இந்த வேண்டுதல்கள்தான் ஒரு காலத்தில் நாணயம் வெட்டுதல், செய்வினை செய்தல், ஏவல், மாந்திரிகம்... இப்படி பல வகையில் கொடூர பிரார்த்தனைகளாக மாறின. நாணயம் தவறியவனைத் தண்டிக்க நாணயம் வெட்டி பூஜை செய்யப்படுகிறதாம். இப்படி ஒருவனை அழிப்பதற்காகச் செய்யப்படும் பூஜைகள் பலிக்குமா? பலிக்காதா? மூடநம்பிக்கைகளா? என்பன போன்ற கேள்விகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் இதுபோன்ற வழிபாடுகள் இப்போது நியாயங்களுக்காக அல்லாமல் அநியாயங்களுக்காகவே பெரும்பாலும் செய்யப்பட்டுக்கொண்டிருப்பது கொடுமையான செய்தி.

அநியாயாத்திற்காக என்றால் எப்படி? பக்கத்து வீட்டுக்காரன் நல்ல வசதியோடு வாழ்ந்திடக்கூடாது. பங்காளி தோட்டம் நல்ல விளைச்சலையே கொடுக்கக்கூடாது. நம்ம வீட்டுப் பிள்ளைகள் பள்ளிப் படிப்பையே தாண்டாமல் இருக்கும்போது, அவன் பிள்ளைகள் கல்லூரியில் படித்திடக்கூடாது. மொத்தத்தில அடுத்தவன் நன்றாக இருந்தால் இவனுக்குப் பிடிக்காது. ஒரே வயிற்றெரிச்சல். கிராமங்கள் என்றாலே நாம் எல்லோரும் அதன் பெருமைகளையும், கிராம வாழ்க்கை முறைகளின் சிறப்புக்களையும் பேசத் தவறுவதில்லை. ஆனால் அந்தக் கிராமங்களில்தான் இதுபோன்ற வயிற்றெரிச்சலும், அடுத்தவனை அழிப்பதற்கான வேண்டுதல்களும் நிறைய உள்ளன. நகரங்களில் இது மிக மிகக் குறைவே என்றும் சொல்லலாம். கிராம வாழ்க்கையிலேயே நான் வெறுக்கக்கூடிய ஒரேயொரு செயல் இது ஒன்றுதான்.

இபோதுகூட நான் என் கிராமத்திற்குப் போனால், கையில் வாட்ச் கூட கட்டிக்கொண்டு, ஊருக்குள் அலைவதில்லை. ஒரு பழைய கைலியோடு ஏறக்குறைய பிச்சைக்காரன் மாதிரி அலைவதுதான் நல்லது. வாட்ச், மோதிரம், செயினுன்னு கொஞ்சம் மினுமினுப்பா அலைஞ்சோம் அவ்வளவுதான். நாலு பேரோட வயிற்றெரிச்சலை நாம் சம்பாதிக்கவேண்டியிருக்கும்.
ஆனாலும் இவைகளையெல்லாம் நான் முழுமையாக நம்புவதில்லை. அடுத்தவன் வயிற்றில் அடித்தா நாம் சம்பாதிக்கிறோம். இல்லையே.. பின் ஏன் இவர்களின் செய்வினைகளுக்கெல்லாம் நாம் பயப்படவேண்டும் என நான் வீட்டில்கூட சொல்வதுண்டு. அப்படி ஒருவேளை அவர்களின் ஏவலுக்கும், மாந்திரிகத்திற்கும் பலன் கிடத்துவிட்டால் இறைவன் நியாயம் அற்றவன் என்றாகிப் போகுமே!

அடுத்தவனின் வளர்ச்சி கண்டு, வயிறு பொருமி, எப்படியாவது அவன் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லவேண்டும் என எண்ணுவோர்களே.. உங்களின் கெட்ட எண்ணத்தாலும், வேண்டுதல்களாலும் உண்மையாய் உழைத்து உயர்பவனை ஒன்றும் செய்ய இயலாது. உங்களின் கெட்ட எண்ணத்தைப் போக்கி, நீங்களும் வாழ்வில் உழைத்து உயருங்கள்.
உழைப்போம்! உயர்வோம்!!

உழவன்

(உங்களின் கருத்துகளும், வாக்குகளுமே பதிவிற்கான அங்கீகாரமும், எழுதுபவனுக்கான ஊக்கமும்)

குட்ப்ளாக் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

33 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

//இபோதுகூட நான் என் கிராமத்திற்குப் போனால், கையில் வாட்ச் கூட கட்டிக்கொண்டு, ஊருக்குள் அலைவதில்லை. ஒரு பழைய கைலியோடு ஏறக்குறைய பிச்சைக்காரன் மாதிரி அலைவதுதான் நல்லது. வாட்ச், மோதிரம், செயினுன்னு கொஞ்சம் மினுமினுப்பா அலைஞ்சோம் அவ்வளவுதான். நாலு பேரோட வயிற்றெரிச்சலை நாம் சம்பாதிக்கவேண்டியிருக்கும்.//

உண்மைதான் உழவன்.....

எங்க ஊர்லயும் கூட அப்படித்தான்...

என்னமோ அவங்க வூட்டு சொத்த நாம சாப்புடுற மாதிரி....

ஆ.ஞானசேகரன் said...

//இப்போது நியாயங்களுக்காக அல்லாமல் அநியாயங்களுக்காகவே பெரும்பாலும் செய்யப்பட்டுக்கொண்டிருப்பது கொடுமையான செய்தி.//

பெரும்பாலும் இல்லை எபொழுதுமே

ஆ.ஞானசேகரன் said...

//நகரங்களில் இது மிக மிகக் குறைவே என்றும் சொல்லலாம். கிராம வாழ்க்கையிலேயே நான் வெறுக்கக்கூடிய ஒரேயொரு செயல் இது ஒன்றுதான்.//

நகரங்களில் இல்லை என்றாலும் வேலையிடங்கள் போன்று கூடும் இடங்களின் இருக்கின்றது....

ஆ.ஞானசேகரன் said...

மந்திரம், மாந்திரிகம், பில்லி, சூனியம் என நம்பிய குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை... ஜோசியத்தை நம்புவதும் அப்படிதான்

S.A. நவாஸுதீன் said...

நல்ல பதிவு. கிராமத்தின் இன்னொரு பக்கம்.

ஆ.ஞானசேகரன் said...

மந்திரம், மாந்திரிகம், பில்லி, சூனியம் என நம்பிய குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை... ஜோசியத்தை நம்புவதும் அப்படிதான்

நண்பர் ஞானசேகரன் சொல்வது மிகச் சரி

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
மந்திரம், மாந்திரிகம், பில்லி, சூனியம் என நம்பிய குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை... ஜோசியத்தை நம்புவதும் அப்படிதான்//

உழவன் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்று அந்த சூழ்நிலை சற்று மாறிவிட்டிருப்பதாகவே தெரிகிறது. ஞானசேகரன் சொல்வதையே நானும் வழிமொழிகிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஊருக்காக வாழ ஆரம்பித்தால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது நண்பா.. நீங்க நீங்களா இருங்க..

ராமலக்ஷ்மி said...

//உழைப்போம்! உயர்வோம்!!//

சொல்ல வந்ததை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

கிராமங்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவரவர் வேலையைக் கவனிப்பதே பெரும்பாடாக இருப்பதால் மற்றவரைப் பற்றிய சிந்தனை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

//
உங்களின் கருத்துகளும், வாக்குகளுமே பதிவிற்கான அங்கீகாரமும், எழுதுபவனுக்கான ஊக்கமும் //

கண்டிப்பாக உண்டு!

பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

//இபோதுகூட நான் என் கிராமத்திற்குப் போனால், கையில் வாட்ச் கூட கட்டிக்கொண்டு, ஊருக்குள் அலைவதில்லை. ஒரு பழைய கைலியோடு ஏறக்குறைய பிச்சைக்காரன் மாதிரி அலைவதுதான் நல்லது. வாட்ச், மோதிரம், செயினுன்னு கொஞ்சம் மினுமினுப்பா அலைஞ்சோம் அவ்வளவுதான். நாலு பேரோட வயிற்றெரிச்சலை நாம் சம்பாதிக்கவேண்டியிருக்கும்.//

கிராமத்திலா இப்படி! ச்சேச்சே!

கிராமத்து சனங்க தான் பிழைக்காட்டியும் அடுத்தவங்களை பிழைக்க வெச்சிப் பாக்குறவங்க சார்!

ஷ‌ஃபிக்ஸ் said...

பொறாமை என்பது பொதுவுடமை சொத்து, கிராமங்கள், நகரங்கள் என பிரிக்க முடியாது நன்பரே, கிராமத்தில் எதனையும் பெரிதாக பேசப்படக்காரணம், அந்த ஊரின் அளவு, மக்கள்த்தொகை, அறிந்த முகங்கள் etc. இதற்க்கு தீர்வு, நாம் மற்றவரைப்பார்த்து பொறாமைப்படாமல் இருப்பது தான். நல்ல பதிவு நன்பரே.

" உழவன் " " Uzhavan " said...

//பிரியமுடன்.........வசந்த்

உண்மைதான் உழவன்.....
எங்க ஊர்லயும் கூட அப்படித்தான்...
என்னமோ அவங்க வூட்டு சொத்த நாம சாப்புடுற மாதிரி.... //

ஓ.. உங்க ஊரு நம்ம ஊருமாதிரிதானா :-) வருகைக்கு நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//ஆ.ஞானசேகரன்
//இப்போது நியாயங்களுக்காக அல்லாமல் அநியாயங்களுக்காகவே பெரும்பாலும் செய்யப்பட்டுக்கொண்டிருப்பது கொடுமையான செய்தி.//
பெரும்பாலும் இல்லை எபொழுதுமே //
நகரங்களில் இல்லை என்றாலும் வேலையிடங்கள் போன்று கூடும் இடங்களின் இருக்கின்றது....
மந்திரம், மாந்திரிகம், பில்லி, சூனியம் என நம்பிய குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை... ஜோசியத்தை நம்புவதும் அப்படிதான் //

வாங்க நண்பா.. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//S.A. நவாஸுதீன்
நல்ல பதிவு. கிராமத்தின் இன்னொரு பக்கம்.
நண்பர் ஞானசேகரன் சொல்வது மிகச் சரி //

//குடந்தை அன்புமணி
உழவன் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இன்று அந்த சூழ்நிலை சற்று மாறிவிட்டிருப்பதாகவே தெரிகிறது. ஞானசேகரன் சொல்வதையே நானும் வழிமொழிகிறேன்//

ஆம் நண்பர்களே.. இவைகளை நம்பியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ரொம்ப நன்றி.

" உழவன் " " Uzhavan " said...

/ராமலக்ஷ்மி
//உழைப்போம்! உயர்வோம்!!//
சொல்ல வந்ததை அழகாய் சொல்லி விட்டீர்கள்.
கிராமங்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவரவர் வேலையைக் கவனிப்பதே பெரும்பாடாக இருப்பதால் மற்றவரைப் பற்றிய சிந்தனை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் இல்லை என்பதுதான் உண்மை. //

ரொம்ப மகிழ்ச்சி. நகர வாழ்வில் ஏது நேரம்.

" உழவன் " " Uzhavan " said...

//கார்த்திகைப் பாண்டியன்
ஊருக்காக வாழ ஆரம்பித்தால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது நண்பா.. நீங்க நீங்களா இருங்க.. //

சரிதான் நண்பா.. மற்றவர்களுக்காக நம் வாழ்வைத் தொலைத்துவிடக் கூடாதல்லவா.. இருந்தாலும் இப்படியெல்லாம் இருக்கிறது என்ற ஒரு ஆதங்கம்தான்..

" உழவன் " " Uzhavan " said...

//பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி //
உங்களின் கருத்துகளும், வாக்குகளுமே பதிவிற்கான அங்கீகாரமும், எழுதுபவனுக்கான ஊக்கமும் //
கண்டிப்பாக உண்டு! //

மிக்க நன்றி நண்பரே..

//கிராமத்து சனங்க தான் பிழைக்காட்டியும் அடுத்தவங்களை பிழைக்க வெச்சிப் பாக்குறவங்க சார்! //

அப்படி இருப்பவர்கள் மிகக் குறைவுதான் சார். உங்க ஊருக்காரங்க அப்படித்தானா ரொம்ப மகிழ்ச்சி :-)

" உழவன் " " Uzhavan " said...

//ஷ‌ஃபிக்ஸ்
பொறாமை என்பது பொதுவுடமை சொத்து, கிராமங்கள், நகரங்கள் என பிரிக்க முடியாது நன்பரே, கிராமத்தில் எதனையும் பெரிதாக பேசப்படக்காரணம், அந்த ஊரின் அளவு, மக்கள்த்தொகை, அறிந்த முகங்கள் etc. இதற்க்கு தீர்வு, நாம் மற்றவரைப்பார்த்து பொறாமைப்படாமல் இருப்பது தான். நல்ல பதிவு நன்பரே.//

ஆம்.. கிராமங்களில் மட்டுமல்ல. நகரத்திலும்தான்.. ஏன்.. நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கூட இந்த வயிற்றெரிச்சல் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் சொன்னதுபோல இது ஒரு பொதுவுடைமைதான். ரொம்ப நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா சொல்லியிருக்கீங்க உழவன்

இந்த பொறாமை, வயிற்றெரிச்சல் உணர்வு எல்லா இடத்துலயும் இருக்கும் போல. நானும் நிறைய பாத்து இருக்கேன், பட்டும் இருக்கேன்.
சொந்தக்காரர்களிலேயே சிலர் இப்படியிருப்பது இன்னுமே வருத்தம்.
என்ன செய்வது இம்மாதிரி மனிதர்களையும் கடந்து தான் வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் காசு வெட்டுறதப் பத்தி ”பசங்க” படத்துல கூட காமிச்சு இருப்பாங்க.

எனக்கு அதைப் பார்த்தபின் அதற்கு முன் என் தோழிக்கு நடந்த ஒரு சில நிகழ்வுகளும் உடன் ஞாபகத்திற்கு வந்தது :(

சந்திரா said...

மனசுக்குள் ரொம்ப நாளாய் உறுத்திக்கொண்டு இருந்த விஷயமிது. ஊர்க்காரய்ங்கள விடுங்க, நம்ம சொந்தங்க,நம்ம கிட்ட வாங்கி தின்னுட்டு நம்ம மேலேயே பொறாமை படுறதும்,புறம் பேசுவதும் மனச ரொம்ப பாதிச்ச விஷயங்கள்.நாம் கஷ்டப்பட்டு உழைப்பதும், வெற்றி பெறுவதும் ஆண்டவன் நம் மீது காட்டும் கருணை, அடுத்தவன் பொறமையால் அது கெட்டு விடாது.

SUMAZLA/சுமஜ்லா said...

யூத்ஃபுல் விகடனில் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதெல்லாம் உண்மையில்லாம இருக்கலாம்.. ஆனா ஒருவரின் எரிச்சலும் கோவமும் எதிர்மறை எண்ணமும அதிகமாக ஆரம்பித்தால் அந்த எண்ண அலைகளுக்குள் நீங்க இருக்க நேர்ந்தால் கெடுதல் நேர வாய்ப்பிருக்கு.. நம்மைச்சுற்றி எப்பவும் எண்ண அலைகள் இருப்பதாக சொல்றாங்க..அத்னால் தான் நல்ல எண்ணம் வேண்டும்ன்னு சொல்றாங்க.. எண்ண அலைகள் அடுத்தவர்களை பாதிக்க வாய்ப்பிருக்கு.. அதனால் அவர்கள் கண்ணில் விழாம்ல் இருப்பது நல்லது தான்..

அமுதா said...

/*ராமலக்ஷ்மி said...
//உழைப்போம்! உயர்வோம்!!//

சொல்ல வந்ததை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

கிராமங்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவரவர் வேலையைக் கவனிப்பதே பெரும்பாடாக இருப்பதால் மற்றவரைப் பற்றிய சிந்தனை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் இல்லை என்பதுதான் உண்மை.*/
அப்படியே வழிமொழிகிறேன்.

பொதுவாக வேலை இருப்பவர்களுக்கு இந்த வேலை எல்லாம் தெரியாது. சோம்பிக் கிடக்கும் மனம் தான் எதைக் கெடுக்கலாம் என்று அலையும்...

Anonymous said...

மனிதனாக பிறந்தோமே தவிர அப்படி வாழ நாம் யாரும் முயலவும் இல்லை நம்மால் அது இயலவுமில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கட்டுரை.....

" உழவன் " " Uzhavan " said...

//அமிர்தவர்ஷினி அம்மா
நல்லா சொல்லியிருக்கீங்க உழவன்
இந்த பொறாமை, வயிற்றெரிச்சல் உணர்வு எல்லா இடத்துலயும் இருக்கும் போல. நானும் நிறைய பாத்து இருக்கேன், பட்டும் இருக்கேன்.
சொந்தக்காரர்களிலேயே சிலர் இப்படியிருப்பது இன்னுமே வருத்தம்.
என்ன செய்வது இம்மாதிரி மனிதர்களையும் கடந்து தான் வாழ்க்கைய ஓட்ட வேண்டியிருக்கு. //
 
இந்தக் காசு வெட்டுறதப் பத்தி ”பசங்க” படத்துல கூட காமிச்சு இருப்பாங்க.
எனக்கு அதைப் பார்த்தபின் அதற்கு முன் என் தோழிக்கு நடந்த ஒரு சில நிகழ்வுகளும் உடன் ஞாபகத்திற்கு வந்தது :( //
 
ஆமா அமித்துமா.. பசங்க படத்துல காட்டிருப்பாங்க. காசு வெட்டுனா நினைச்சது நடக்கும்னு சின்ன பசங்களே நம்புற அளவுக்கு இப்ப இந்த கொடும் வேண்டுதல்கள் உள்ளன என்பது வேதனையான ஒன்றுதான். ரொம்ப நன்றி.

" உழவன் " " Uzhavan " said...

//சந்திரா
மனசுக்குள் ரொம்ப நாளாய் உறுத்திக்கொண்டு இருந்த விஷயமிது. ஊர்க்காரய்ங்கள விடுங்க, நம்ம சொந்தங்க,நம்ம கிட்ட வாங்கி தின்னுட்டு நம்ம மேலேயே பொறாமை படுறதும்,புறம் பேசுவதும் மனச ரொம்ப பாதிச்ச விஷயங்கள்.நாம் கஷ்டப்பட்டு உழைப்பதும், வெற்றி பெறுவதும் ஆண்டவன் நம் மீது காட்டும் கருணை, அடுத்தவன் பொறமையால் அது கெட்டு விடாது. //
 
ஆமாங்க. எவன் பொறாமைப்பட்டும் என்ன ஆகிறப்போகுது? நம்ம உழைக்கிறோம் நம்ம நல்ல இருக்கோம். இந்த சொந்தக்கரங்களே பெரும்பாலும் இப்படித்தான். வருகைக்கு ரொம்ப நன்றி :-)

" உழவன் " " Uzhavan " said...

//SUMAZLA/சுமஜ்லா
யூத்ஃபுல் விகடனில் வந்திருப்பதற்கு வாழ்த்துக்கள். //
 
தகவலுக்கும் வாழ்த்திற்கும் ரொம்ப நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//முத்துலெட்சுமி/muthuletchumi
இதெல்லாம் உண்மையில்லாம இருக்கலாம்.. ஆனா ஒருவரின் எரிச்சலும் கோவமும் எதிர்மறை எண்ணமும அதிகமாக ஆரம்பித்தால் அந்த எண்ண அலைகளுக்குள் நீங்க இருக்க நேர்ந்தால் கெடுதல் நேர வாய்ப்பிருக்கு.. நம்மைச்சுற்றி எப்பவும் எண்ண அலைகள் இருப்பதாக சொல்றாங்க..அத்னால் தான் நல்ல எண்ணம் வேண்டும்ன்னு சொல்றாங்க.. எண்ண அலைகள் அடுத்தவர்களை பாதிக்க வாய்ப்பிருக்கு.. அதனால் அவர்கள் கண்ணில் விழாம்ல் இருப்பது நல்லது தான்.. //
 
ஆம். நம்மைச் சுற்றி நல்லோர்கள் இருப்பின் நாமும் நல்லா இருப்போம். ரொம்ப நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//அமுதா
அப்படியே வழிமொழிகிறேன்.
பொதுவாக வேலை இருப்பவர்களுக்கு இந்த வேலை எல்லாம் தெரியாது. சோம்பிக் கிடக்கும் மனம் தான் எதைக் கெடுக்கலாம் என்று அலையும்... //
 
சோம்பேறித்தனம் மட்டுமல்ல மேடம், சில பேருக்கு கண்முன்னால இருக்குற யாரும் நல்லா இருந்திரக்கூடாது. பொறுக்காது அவங்களுக்கு.
நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//தமிழரசி
மனிதனாக பிறந்தோமே தவிர அப்படி வாழ நாம் யாரும் முயலவும் இல்லை நம்மால் அது இயலவுமில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த கட்டுரை.....//
 
வாங்க தமிழ்.. ரொம்ப மகிழ்ச்சி உங்களின் கருத்துக்கு :-)

ஸ்ரீதர் said...

நல்ல பதிவு உழவன்.

" உழவன் " " Uzhavan " said...

//ஸ்ரீதர்
நல்ல பதிவு உழவன். //
 
நன்றி ஸ்ரீதர் அவர்களே.