Saturday, June 6, 2009

23C - சென்னை அனுபவம்

சென்னையை கருவாட்டுக் கொழம்புனே சொல்லலாம். அது என்னடா கருவாட்டுக் கொழம்புனு கேட்கிறீங்களா? கருவாட்டுக் கொழம்புல இதத்தான் போடனும்னு எந்த விதிமுறையும் கிடையாது. கத்தரிக்காய் போடலாம்; முருங்கைக்காய் போடலாம்; உருளைக்கிழங்கு போடலாம்... இப்படி எதைவேணும்னாலும் போட்டு சமைக்கலாம். அதுமாதிரிதான் சென்னையில நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, தஞ்சை... இப்படி எல்லா ஊருக்காரங்களும் இருக்கிறதாலதான் சென்னையை கருவாட்டுக் கொழம்புனு சொன்னேன்.

இப்படி எல்லா ஊரு தமிழையும் சுமக்கிற சென்னைக்கு, நானும் படிச்சு முடிச்சிட்டு பிழைப்புக்காக 1997 மே மாதத்தில வந்தேன். வந்த புதுசுல சென்னையை (அப்ப மெட்ராஸ்னுதான் எல்லோரும் சொல்வாங்க) பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பா இருக்கும். ஏன்னா நம்ம அதிகபட்சமா பார்த்த டவுனு கோவில்பட்டியும், தூத்துக்குடியும்தான். திருநெல்வேலியே எப்பவாவது போறதுதான். அப்படியிருக்கும்போது கேட்கவாவேணும்.

இதுல பெரிய கஷ்டம் என்னன்னா, எந்த ரோட்டைப் பார்த்தாலும் எனக்கு எல்லாமே ஒரே ரோடு மாதிரிதான் தெரியும். எனக்கு மட்டும்தான் இப்படியா? இல்லை சென்னைக்கு புதுசா வந்த எல்லாருக்குமே இப்படித்தானானு தெரியல. இது மெளண்ட்ரோடு, இது அந்த ரோடு, அது இந்த ரோடு அப்படிங்கிற எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாம, ஆரம்பகாலத்துல தெற்கு வடக்கே தெரியாம கஷ்டப்பட்டேன்.

சென்னைக்கு வந்த ரெண்டு மூனு நாளுலலேயே, கல்லூரி சீனியர் நண்பர் ஒருவரோட ரெஃபரன்சுல 1200 ரூபாய் சம்பளத்துல ஒரு வேலை கிடைச்சது. வாணிமகாலுக்கும் பாண்டிபஜாருக்கும் நடுவில, கொஞ்சம் மெளண்ட் ரோட்டை ஒட்டிய தி.நகர்லதான் ஆபீஸ். நுக்கம்பாக்கத்துல வள்ளுவர்கோட்டத்துக்குப் பக்கதில நான் தங்கியிருந்ததால ரொம்ப சுலபமா ஆபீஸ் போயிருவேன்.

வேலையில சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகல. தட்டுத்தடுமாறி சென்னையை முழுசா புரிஞ்சிக்கிடுவதற்கு முன்னாலயே, ஆபீஸானது தி.நகர்ல இருந்து அடையாறு கஸ்தூரிபாய் நகருக்கு போகப்போகுதுனு சொன்னாங்க. சரி இப்பதான இந்த பேச்சு அடிபட ஆரம்பிச்சுருக்கு; புது ஆபீஸுக்கு போக இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோனு நான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். வழக்கம்போல ஒருநாள் ஆபீஸுக்கு போனா, உங்க PCய புது ஆபீசுக்கு ஷிப்ட் பண்ணியாச்சு; ஏதோ அர்ஜெண்ட் ஒர்க் ஒன்னு இருக்குதாம்; உங்களை வந்த உடனே, புது ஆபீஸுக்கு வரச்சொல்லுங்கனு MD இப்பதான் போன் பண்ணி சொன்னாருனு சொன்னாங்க. உங்க டாக்குமெண்ட எதாவது இருந்தா எடுத்துக்கிட்டு கிளம்புங்கனு சொல்லிட்டாங்க.

அடையாறு எந்தப் பக்கம் இருக்கு; எப்படிப் போகனும் எதுவுமே எனக்குத் தெரியாது. நம்ம ஆபிசிலயிருந்து வெளிய போனவுடன, ரைட்சைடு ஸ்ட்ரெய்ட்டா போனீங்கனா மெளண்ட்ரோடு வரும். அதான் சார் அறிவாலயத்துக்கு ஆஃப்போசிட்ல. அங்க இருந்து 23C பஸ்சுல ஏறி மத்தியகைலாஷ்ல இறங்கிக்கோங்க. அங்க போய் கஸ்தூரிபாய் நகர் எங்க இருக்குனு கேட்டீங்கனா சொல்லிடுவாங்கனு ரொம்ப தெளிவா எனக்கு ரூட் சொல்லி அனுப்புனாங்க.

நானும் முதன்முதலா நுக்கம்பாக்கம், தி.நகரைத் தாண்டி வேற ஏரியாவுக்குப் போறோம்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டு நடந்தேன். அட.. அவங்க சொன்ன மாதிரியே மெளண்ட்ரோடு வந்திருச்சு; ஆமா.. இந்தா அறிவாலயம் வேற பஸ் ஸ்டாப்புக்கு ஆப்போசிட்டலதான் இருக்கு. 23C வருதானு பார்ப்போம். அட.. 23Cயேதான். பஸ்சுலயும் ஏறியாச்சு.

பஸ்சுல முன்னாடி ஏறிய நான், இந்த ஊர்ல கண்டக்டர் பின்னாலதான் இருப்பாருங்குறது ஞாபகத்துக்கு வர, கூட்டத்துக்குள்ள புகுந்து பின்னாடி வந்து, அண்ணே மத்திய கைலாஷ் ஒன்னு குடுங்கனு கேட்டேன். என்னை ஒரு தடவை ஏற இறங்க நக்கலா பார்த்த கண்டக்டர், காச வாங்கிக்கிட்டு ஒரு டிக்கட்டை என் கையில குடுத்திட்டு, பஸ்சு அடுத்த ஸ்டாப்புல தொளசன் லைட்டுல நிக்கும். இறங்கி சப்வேயக் கிராஸ் பண்ணி, அந்தாண்ட போயி 23Cல ஏறு. இது அயனாவரம் போற பஸ்சுனு அவருக்கே உரிய பாஷையில சொன்னாரு. பஸ்சுல இருக்கிற அவ்வளவுபேரும் என்னையே ஒருமாதிரி பார்த்தானுங்க. அப்புறம் ஒருவழியா அவரு சொன்னமதிரியே இறங்கி, ரோட்ட க்ராஸ் பண்ணி, ஒன்னுக்கு நாலு பேர்ட்ட கேட்டு, 23Cக்காக பஸ்ஸ்டாப்புல வெயிட் பண்ணுனா, அங்க வந்த 23Cக்கும், நான் முதல்ல ஏறுன 23Cக்கும் அவங்க வச்சிருந்த போர்டுல எந்த வித்தியாசமும் இல்ல. கடைசியா ஒருவழியா புது ஆபீஸுக்குப் போய்சேர்ந்தேன்.

டிஸ்யூம் டிஸ்யூம்: யெப்பா.. போக்குவரத்துதுறை அதிகாரிங்களா.. பஸ் தாம்பரம் போகுதுனா தாம்பரம்னு மட்டும் போர்டு போடுங்க; பாரீஸ் போகுதுனா பாரீஸ்னு மட்டும் போர்டு போடுங்க. பாரீஸ் - தாம்பரம்னு ரெண்டு ஏரியா பேரையும் போர்டுல போட்டுக்கிட்டு, என்ன மாதிரி புதுசா சென்னைக்கு வர்றவங்களை ஏம்பா கன்ஃபியூஸ் பண்ணுறீங்க. துணைமுதல்வரே நீங்களாவது கொஞ்சம் இதைக் கவனிங்க.

பி.கு: அண்ணா மேம்பால குதிரை என்ன ஏமாத்துன கதையை அடுத்த பதிவுல சொல்லுறேன்.

உழவன்

18 comments:

Kaliraj said...

I too have same experience. Also I suffered with different color boards.

கார்த்திகைப் பாண்டியன் said...

சென்னை உங்களை .............. என்று அசிங்கப்படுத்தி இருக்கு? அனுபவக்கதை.. நீங்க சொன்ன விதம் நல்லா இருக்கு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அனுபவக் கதை நல்லா நகைசுவையுடன் சொன்னிங்க நண்பா

Vidhya Chandrasekaran said...

23c மட்டும் எப்பவுமே கூட்டமாய் தான் இருக்கும்.

"உழவன்" "Uzhavan" said...

//Kaliraj

I too have same experience. Also I suffered with different color boards. //

இந்த கலரை வச்சுக்கிட்டு, டிக்கட் ரேட்டுல எவ்வளவு வித்தியாசம் இருக்குது பாருங்க.. இப்படி ஊரை வேற ஏமாத்துவாங்க.
வருகைக்கு நன்றி நண்பா..

"உழவன்" "Uzhavan" said...

//கார்த்திகைப் பாண்டியன்

சென்னை உங்களை .............. என்று அசிங்கப்படுத்தி இருக்கு? அனுபவக்கதை.. நீங்க சொன்ன விதம் நல்லா இருக்கு நண்பா //

ஆமா நண்பா.. சென்னை என்னை போடா வெண்ணை என்று அசிங்கப்படுத்திவிட்டது. இதச் சொல்லுறதுக்கு என்ன கூச்சம். :-)

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
நல்ல அனுபவக் கதை நல்லா நகைசுவையுடன் சொன்னிங்க நண்பா //

என் கஷ்ட அனுபவம் உங்களுக்கு நகைச்சுவையா இருக்கா? :-))

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
23c மட்டும் எப்பவுமே கூட்டமாய் தான் இருக்கும். //

ஆம் தோழி.. இந்தக் கூட்டத்தினுள் ஏறி, வேலைக்குச் சென்று வருவதென்பது மிகப் பெரிய சவாலகவே இருக்கும்.
வருகைக்கு நன்றி!

பழமைபேசி said...

கோயமுத்தூர் வாசம் அடிக்குதே?
இஃகிஃகி!

"உழவன்" "Uzhavan" said...

/கோயமுத்தூர் வாசம் அடிக்குதே?
இஃகிஃகி!//

இல்ல நண்பா.. நமக்கு தூத்துக்குடிப் பக்கம்..
தங்கள் வருகைக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

செம எக்ஸ்பீரியன்ஸ் போல.

23சி நடுவுல சைதாப்பேட்டைல கூட் நின்னு போகும், தெரியும்ல.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்புறம் அந்த பி.கு பதிவு எப்ப போடுவீங்க.

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
அப்புறம் அந்த பி.கு பதிவு எப்ப போடுவீங்க//

விரைவில்... உங்கள் அபிமானத் திரையில் :-)

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
செம எக்ஸ்பீரியன்ஸ் போல.
23சி நடுவுல சைதாப்பேட்டைல கூட் நின்னு போகும், தெரியும்ல.//

அண்ணா அறிவாலயத்துக்கும், தெளசன்லைட்டுக்கும் இடையில எங்க அமித்துமா சைதாபேட்டை இருக்கு? அங்கிருந்து வரும்போதுதான இருக்கு.

உண்மைத்தமிழன் said...

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் சென்னைக்கு வந்த புதிதில் ஏற்பட்டிருக்கிறது..!

"உழவன்" "Uzhavan" said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644)
எனக்கும் இப்படி ஒரு அனுபவம் சென்னைக்கு வந்த புதிதில் ஏற்பட்டிருக்கிறது..!//

உங்களூக்குமா? வருகைக்கு நன்றி!

Karthick said...

இந்த அனுபவம் என்னுடையது போலவே இருக்குது. ஒருவேளை எனது முதல் வேலையும் தி -நகரில் அமைந்ததுதான் காரணமோ என்னவோ.
மிக அழகான வார்த்தைகள்.

கார்த்திக்
http://eluthuvathukarthick.wordpress.com/

"உழவன்" "Uzhavan" said...

//Karthick
இந்த அனுபவம் என்னுடையது போலவே இருக்குது. ஒருவேளை எனது முதல் வேலையும் தி -நகரில் அமைந்ததுதான் காரணமோ என்னவோ.
மிக அழகான வார்த்தைகள்.

கார்த்திக்//
 
தங்களின் தொடர் வருகைக்கு நன்றி கார்த்திக்.. பழைய இடுகைகளையெல்லாம் தேடிப்பிடித்து படிக்கிறீர்கள். மகிழ்ச்சி