Friday, May 29, 2009

ஸ்டாலினும் எனது மாமாவும்...


என் தாத்தா தனது 58வது வயதில் முதன் முதலாக இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு எடுத்தபோது அவருக்கு ஆரோக்கியமான உடல்நிலையே. அந்த இரண்டு மாதங்கள் என் தாத்தாவின் அரசுப்பணியைப் பார்த்தவர் என் மாமா. பக்கத்து வீட்டுக்குக்கூட தெரியாமல் பதவிப்பிரமாணம் நடைபெற என் தாத்தா காய்களை நகர்த்தியதற்க்குக் காரணம், தன்னுடைய வேலையைத் தன் பிள்ளைக்கு வாங்கிக்கொடுப்பதற்கு, அந்த 2 மாத பணி அனுபவம் தன் மகனுக்குக் கூடுதல் தகுதியைப் பெற்றுத்தரும் என்பதால்தான். இது நடந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

நேற்று என் தாத்தாவிடம் பேசியபோது, "நீங்களும் கருணாநிதியும் ஒன்னுதான் தாத்தா" என்று நான் கூறியபோது, புருவம் வளைத்து வியப்புடன் அவர் என்னைப் பார்த்த வேளையில், இன்றைய தமிழக அரசியல் நிலவரம் அறிந்திருந்த மற்ற குடும்பத்தார்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்தேவிட்டனர்.

பின்பு அவரிடம் இன்றைய தமிழக அரசியல் நாடகக் காட்சிகளை விளக்கிக் கூறியவுடன், புரிந்து கொண்டு அவர் அடித்தாரே ஒரு பஞ்ச் அதுதான் அல்டிமேட்.

" உன் மாமனுக்கு அந்த வேலையை வாங்கித் தருவதற்காக, அன்றைக்கு நான் பண்ணுனதெல்லாம் நம்ம குடும்ப நலனுக்காகத்தான்பா.. ஆனா இன்னைக்கு இவரு பண்ணுறதெல்லாம் நாட்டு நலனுக்கா? இல்லை வீட்டு நலனுக்கானு எனக்குத் தெரியாது" னு சொன்னாரே பார்க்கலாம். அவரை கருணாநிதின்னு சொன்னதிற்காக பக்கத்தில இருந்த என் பாட்டிக்கு வேற ஒரே சந்தோசம்.

வாழ்க ஜனநாயகம்!

டிஸ்கி: எல்லா பிஸினஸ்லயும் வாரிசுகளின் தலையீடு இருக்கத்தான் செய்யுது. அதுமாதிரிதான் அரசியல் பிஸினஸ்மேக்னட் கலைஞரும் தன்னோட வாரிசுகளைக் களத்தில் இறக்கிவிடுறாரு. ஆனா ஒன்னுங்க.. எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல.

உழவன்

9 comments:

லக்கிலுக் said...

ஒரு சம்பவம் என்ற முறையில் சுவையாக இருந்தது. ஆனால் நீங்கள் சொல்லவரும் கருத்து ரொம்ப மொக்கை.

உங்கள் மாமாவுக்கு தாத்தா இரண்டு மாதமாக தொழில் கற்றுத் தந்தார். ஸ்டாலின் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார்.

ஆ.ஞானசேகரன் said...

//டிஸ்கி: எல்லா பிஸினஸ்லயும் வாரிசுகளின் தலையீடு இருக்கத்தான் செய்யுது. அதுமாதிரிதான் அரசியல் பிஸினஸ்மேக்னட் கலைஞரும் தன்னோட வாரிசுகளைக் களத்தில் இறக்கிவிடுறாரு. ஆனா ஒன்னுங்க.. எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல.//

நல்ல டிஸ்கி... லாபத்தை கணகிடுவதால் என்று நினைக்கின்றேன்.. விவாசயத்திற்கும் நம்பிக்கை தரும் காலம் வ்ரும் நண்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவை விட டிஸ்கி தான் தூள்.. வருத்தம் கொள்ள செய்யும் உண்மையும் கூட

Anonymous said...

//உங்கள் மாமாவுக்கு தாத்தா இரண்டு மாதமாக தொழில் கற்றுத் தந்தார். ஸ்டாலின் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார்.//

அவங்க மாமா இரண்டு மாதங்களில் கற்றுகொண்டதை உங்க தளபதி
முப்பத்தைந்து ஆண்டாக கற்றுகொண்டாரா?

sakthi said...

ஆனா ஒன்னுங்க.. எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல.

நிதர்சனம்

சொல்லரசன் said...

தி.மு.க என்றில்லை அ.திமு.க,
தே.மு.தி.க,பா.ம.கா விலும் குடும்ப அரசியல் இருக்கிறது.
சில காரணங்களால் இது தவிர்கமுடியாதநிலைக்குவந்துவிட்டது.


எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல.

அரிசிக்கும் காய்கறிக்கும் பாலுக்கும் அன்டைநாடுகளை எதிர்பார்க்கும் நிலை வரும் போது இதன் வலிதெரியும்.

"உழவன்" "Uzhavan" said...

@ லக்கிலுக்
@ஆ.ஞானசேகரன்
@கார்த்திகைப் பாண்டியன்
@Anony
@sakthi
@சொல்லரசன்

அனைவருக்கும் நன்றி!

அன்புடன்
உழவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆனா ஒன்னுங்க.. எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல

:(
வருத்தமான உண்மை

"உழவன்" "Uzhavan" said...

//ஆனா ஒன்னுங்க.. எந்த விவசாயியும் தன் பிள்ளைகளையும் விவசாயியா ஆக்கனும்னு நெனக்குறதில்ல

:(
வருத்தமான உண்மை //

ஆமா அமித்துமா.. நானும் விவசாயக் குடும்பத்தில இருந்து பிரிந்து, சென்னைக்கு வந்திட்டேனே..