Monday, April 28, 2008

கடல் தாயே...

உலையிலிட்ட    
அரிசியை
வடிப்பதற்குள்       
நீ
எங்களுக்கு
வாய்க்கரிசி      
போட்டுவிட்டாய் !
 
அழுத குழந்தைக்கு
அமுதூட்டினாள் தாய் !
சேயின் பசி
அடங்கும் முன்பாக
பால் ஊற்றினாய் நீ
தாய்க்கும் சேர்த்து !
 
மணல்வீடு கட்டிய குழந்தை
மரணத்தை நினைத்திருக்குமா ...
காற்று வாங்க வந்தவன்
கல்லறையை நினைத்திருப்பானா ...
 
சுறாவைத்தான்
வைத்திருந்தாய்
என்றிருந்தோம் ..
சுனாமியையுமா
வைத்திருந்தாய் !
 
தாளிக்கும் நேரத்தில்
எங்கள்
தாலி அறுந்து போச்சு !
கூலிகளாய் வேலைசெய்து
குருவிபோல் சேர்த்த பணம்
கூரையோடு சேர்ந்து போச்சு !
 
வலை வீசி
மீன் பிடித்தால்
வயிறு கொஞ்சம்
நிறையும் ..
வேறு தொழில்
என்ன தெரியும் !
 
கடல் தாயே ...
குத்தவைக்க
குடிசையுமில்லை..
கூடி அழ
சொந்தமுமில்லை..
கருணை கொஞ்சம்
காட்டு
உன் சேய்கள் எங்களுக்கு
சோறு கொஞ்சம்
ஊட்டு !
 
" சுனாமியின் கொடூரம் கண்டு
என் மனம் அழுத அழுகை இது "
 
உழவன்
http://tamizhodu.blogspot.com
 

No comments: