Thursday, June 16, 2011

மரணப்பள்ளத்தில் ஒரு குளியல்

குளியல் என்றால் சாதரணமானது. ஆனால் அருவிக் குளியல், ஆற்றுக் குளியல் எனில் அது அலாதியானது. கண்மாயிலும் ஓடையிலும் குளித்துதான் நீச்சல் கற்றுக்கொண்டேன். கிணற்றின் மேலிருந்து குதித்து விளையாடும் விளையாட்டு ஒரு தனி ரகம். சென்னையில் வாழ்க்கை அமைந்துவிட்ட பிறகு இப்படியான குளியலுக்கெல்லாம் வாய்ப்பில்லாமல் போனது. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு எனக் கட்டணம் கொடுத்து நீச்சல் குளத்தில் குளிக்கவேண்டிய கட்டாயம். அதுவும் குளோரின் கலந்த நீரில். குளித்து முடித்த பின்பு உடலெல்லாம் வெளிரிப்போய்விடுகிறது. இதற்காகவே நண்பர்களின் வீட்டு விஷேசங்கள் வெளியூர்களில் நடைபெற்றால், அவ்வூருக்கு அருகினில் எதாவது அருவியோ ஆறோ குளமோ இருந்தால் உடனடியாக நண்பர்களோடு கிளம்பிவிடுவதுண்டு. அப்படி குற்றாலம், திற்பரப்பு, அகஸ்தியர் அருவி, பாணதீர்த்தம், ஒகேனக்கல் என பல இடங்களுக்கு பல முறை சென்றதுண்டு. ஒருமுறை திருவண்ணாமலை சென்றுவிட்டுத் திரும்பும்போது ஒரு வயல்காட்டில் தண்ணீர் பாய்ச்சுக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் காரை நிறுத்திவிட்டு குளிக்கச் சென்றுவிட்டோம்.



சமீபத்தில் உடன் வேலை பார்க்கும் நண்பனொருவனின் திருமணம் ஆத்தூர் (சேலம்) அருகேயுள்ள தம்மம்பட்டியில் நடைபெற்றது. அப்போதுதான் `புளியஞ்சோலை’ எனும் ஒரு இடம் தம்மம்பட்டியின் அருகினில் இருப்பதாகவும், கொல்லிமலை அருவியிலிருந்து விழும் நீரானது புளியஞ்சோலையின் வழியாக வருவதாகவும் சொன்னதால் அங்கு செல்வதென முடிவுசெய்தோம். ஆத்தூரில் காலை உணவினை முடித்துவிட்டு நண்பர்கள் சுமார் 25 பேர் வேனில் புறப்பட்டோம். ஆத்தூரிலிருந்து சுமார் 85 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த இடம். சாலையில் பயணிக்கும்போது எங்கு பார்த்தாலும் தென்னந்தோப்புகள். சுற்றிலும் பசுமையான மலை. அங்கங்கே வயல் வெளிகள் தென்படுகின்றன. பயணிப்பதற்கே அழகாக இருந்தது. திருச்சி மெயின் ரோட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணத்திற்குப் பின்பாக, கொப்பம்பட்டி என்ற இடத்திலிருந்து வலது புறம் திரும்பி வைரி செட்டிப்பாளையம் வழியாகச் செல்லவேண்டும். இந்தச் சாலை மிகக் குறுகியதாகவும் மோசமானதாகவும் இருப்பதால் மெதுவாகவே செல்லவேண்டியுள்ளது.



புளியஞ்சோலை என்றே மக்கள் சொன்னாலும் அங்கு வரும் சிற்றுந்து `பெரியசாமி கோவில்’ என்றுதான் போர்டு மாட்டி வருகிறது. இக்கோவிலின் வரைதான் கனரக வாகனங்கள் செல்லமுடியும். அங்கிருந்து அரைகிலோமீட்டர் நடந்து சென்றால் புளியஞ்சோலையை அடையலாம். தண்ணீர் சிற்றாறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்கள் போனபோது தண்ணீர் மிகக் குறைவாகவே இருந்தது. மலைப்பகுதியானதால் ஆற்றில் சிறு சிறு பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. மக்கள் ஆங்காங்கே குளித்துக்கொண்டும், துவைத்துக்கொண்டும் இருந்தார்கள். பலர் தங்கள் இரு சக்கர வாகனத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். ஆண்கள் பெண்கள் என குடும்பம்குடும்பமாக வந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. தண்ணீர் குறைவாக வந்ததாலோ என்னவோ பெரும்பாலான பகுதிகளில் மூழ்கக்கூடிய அளவிற்கு ஆழம் இல்லாமல் இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் நல்ல ஆழமாக உள்ளது. அப்பகுதிகள் நீந்திக் குளிப்பதற்கும், பாறைகளின் மேலேறி ஓடிவந்து குதித்துக் குளிப்பதற்கும் ஏற்றதாய் இருக்கிறது. சுற்றிலும் மரங்கள் நிறைந்திருப்பதால் இளைப்பாறுவதற்கும், மது அருந்துபவர்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.



அருகினிலிருக்கும் பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சலில் விளையாடி மகிழ்கிறார்கள். பலாபழம், அன்னாச்சிபழம், வறுத்த மீன் மற்றும் நொறுக்குத்தீனிகள் கிடைக்கின்றன. பெரிய சுற்றுலாதலமாக இல்லாவிட்டாலும், வார இறுதிகளில் சில மணி நேரங்கள் பொழுதைப் போக்குவதற்கு ஏற்ற இடம்.

உழவன்

முக்கியக் குறிப்பு: இரண்டு நாட்களுக்கு முன்னர் (ஜூன்15’ 2011) சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பபட்ட “மரணப்பள்ளம்” பகுதியில் இந்த புளியஞ்சோலையைத்தான் காட்டினார்கள் என நண்பர்கள் சொன்னார்கள். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது நீர்ச்சுழல் இருக்குமாம். அந்த நேரங்களில் அங்கு செல்வைதைத் தவிருங்கள். நாங்கள் செல்வதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டிருக்குமாயின் அங்கு சென்றிருக்கவே மாட்டோம். ஆனால் இப்போது அலுவலகத்தில் நாங்கள் சொல்வதெல்லாம் “நாங்கெல்லாம மரணப்பள்ளத்திலேயே குளிச்சவங்கடா”

3 comments:

ராமலக்ஷ்மி said...

எழில் கொஞ்சும் இடத்தில் இப்படியும் ஒரு அபாயம். பசங்க டைவ் அடிக்கிற படம் சூப்பர்:)!

மாதேவி said...

அழகிய இடம்.

மரணப் பள்ளம் :(

Kitchen Kara said...

Thiis was a lovely blog post