படம்: இணையம்
அமோக வெற்றியுடன் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதாவை, இவர் பழைய ஜெயலலிதா அல்ல; புதிய ஜெயலலிதா என எல்லா ஊடகங்களும் தெரிவித்தன. பதவியேற்ற நாளன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ஏழு திட்டங்களில் கையெழுத்திட்டது; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகத் தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தியது; இலவச அரிசி வழங்கும் திட்டத்தை மிக எளிமையாக நடத்தியது; தனக்காக போக்குவரத்தை நிறுத்தவேண்டாம் என காவல்துறைக்கு ஆணையிட்டது; நலத்திட்டங்களுக்கான ஆலோசனைகளுக்காக அப்துல்கலாமின் உதவியாளரை நியமித்தது என்பன போன்ற காரணங்களுக்காக முதல்வர் ஜெ. புதிய முகம் கொண்டவராக இருக்கிறார் என அனைவரும் கூறிவந்தனர். இவைகளெல்லாம் பாராட்டுக்குரியவைகள்தான்.
இப்படி பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றபோதும், தன்னுடைய ஒரு சில செய்கைகள், ஜெ. வுக்கு மக்களிடம் கெட்டபெயரைத்தான் பெற்றுத்தந்திருக்கின்றன. புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, மெட்ரோ ரயிலின் தூரத்தைக் குறைத்து, மாற்றாக மோனோ ரயில் என்று அறிவித்தது மற்றும் சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெ. நடந்துகொண்டது. இந்த மூன்று முடிவுகளை மக்கள் வெகுவாக விரும்பவில்லை. நேற்றே (10 ஜூன் 2011) சமச்சீர் கல்விக்காகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு மூலம் உயர்நீதி மன்றம் ஜெ.வுக்கு குட்டு வைத்துள்ளது.
2ஜி தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்துவந்த நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கிய தீர்ப்பின் மூலம் உயர்நீதி மன்றம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்களில் குறைபாடுகள் இருப்பினும், எல்லா கல்வி நிலையங்களும் புதுப் பாடத்திட்டத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க தயாரான நிலையிலும், மேலும் ஜூன் மாத முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாலும் உடனடியாக அதனை இந்த அரசு நிறுத்தியிருக்கக்கூடாது; அதுவும் மே மாத இறுதியில். இந்த ஆண்டு இப்பாடத்திட்டத்தைத் தொடரவிட்டுவிட்டு, பொறுமையாக ஒரு குழுவினை அமைத்து அடுத்த ஆண்டுக்கான புத்தகங்களில் குறைபாடுகளை நீக்கியிருக்கலாம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஒரு இக்கட்டான நிலைமைக்கு கருணாநிதியும் ஒரு காரணம். வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் இடையில், தான் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற பேராசையில், தனது சுயபுராணத்தை பாடத்திட்டத்தில் யார் சேர்க்கச் சொன்னது.
நீதிமன்ற உத்தரவில், பாடத்திட்டங்களைத் திருத்தவும் நீக்கவும் தமிழக அரசிற்கு முழு உரிமையையும் உள்ளது என்று கூறியிருப்பதால், எந்தெந்தப் பாடங்களை நீக்கப்போகிறது; எவற்றைப் புதியதாகச் சேர்க்கப்போகிறது எனத் தெரியவில்லை. ஒருவேளை கலைஞரின் கவிதையும், அவரைப் பற்றிப் புகழ்ந்து எழுதப்பட்ட குறிப்புகளும் இந்த ஆண்டு பாடப் புத்தகத்தில் இடம்பெறுமானால், மாணவர்கள் யாரும் அதனைப் படிக்கவேண்டாம். எந்தத் தேர்விலும் கவிதை பற்றிய வினாக்கள் இடம்பெறாது என்பது உறுதி.
புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் எவ்வாறு பயன்படுத்தப்பட இருக்கிறது என்பதும், மெட்ரோ ரயில் எவ்வளவு தூரத்திற்கு பயன்பாட்டுக்கு வரப்போகிறது என்பதும் ஜெ.வின் இமேஜுக்கு மிக முக்கியமாகும். தாலிக்கான தங்கம், இலவச அரிசி இவற்றையெல்லாம்விட, மின்பற்றாக்குறை நிவர்த்திசெய்வதைதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர் புதிய ஜெயலலிதாவா எனத் தெரிந்துகொள்ள சிலகாலம் பொறுத்திருக்கலாம். கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும்.
உழவன்
எனது முந்தைய பதிவு "மல்லிகை மகள்"
Saturday, June 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்ல பதிவு.
வித்தியாசம் தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாழ்த்துக்கள்.
கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவிற்கு வந்துதானே ஆகவேண்டும்.
நல்ல பகிர்வு...
பெரும்பாலோரின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அருமையான அலசல்.
பொறுத்திருந்து பார்க்கலாம்.
@ Rathnavel
@ இராஜராஜேஸ்வரி
@ தமிழரசி
@ ராமலக்ஷ்மி
@ சே.குமார்
அனைவருக்கும் நன்றி
புது ஜெ.. வா இருப்பார்னு நம்பித்தான்.. சரி, விடுங்க.
”..வாலை நிமுத்த முடியுமா”ங்கிற பழமொழிக்கு இலக்கணமாகிவிடக்கூடாதுங்கிறதுதான் ஆசை.
//உழவனின் "நெற்குவியல்"//
பேர் எப்ப மாத்துனீங்க? கவனிக்கவேயில்லை!! அழகான, பொருத்தமான பேர்.
தங்களின் அன்புக்கு மிக்க நன்றி ஹூசைனம்மா :-)
Post a Comment