Wednesday, April 6, 2011

வடிவேலுதான் அடுத்த துணை முதல்வரா?

எந்தச் செய்திச் சேனல்களை எடுத்தாலும் ஒரே தேர்தல் பிரச்சார மயம்தான். கட்சிகளுக்குச் சொந்தமான சன், ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சிகள் பார்க்கச் சகிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் ஒரே புராணம்தான். 2011ல் தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற போட்டி மட்டும்தான் நிலவுகிறதே தவிர, மக்களின் நலன்களில் கிஞ்சித்தும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. கொள்கைகளுக்காக ஆரம்பிக்கும் கழகங்களுக்குப் பதிலாக, கோட்டைக்காக ஆரம்பிக்கும் கட்சிகளின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வாழ்வதற்கான வழிவகைகளைத்தான் ஓர் அரசு ஏற்படுத்தித்தர வேண்டுமே தவிர, வாயிலே சோற்றை ஊட்ட முனையக்கூடாது. மக்களுக்கு தூண்டிலைத் தருவதற்கு வழிவகை செய்வதற்குப் பதிலாக, வீட்டிற்குள் மீனையே தூக்கிப்போடும் அரசின் பின்மண்டையில் சூழ்ச்சி இல்லாமல் இருக்காது என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.


பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தல் காலங்களில் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளரிடம், எங்கள் பகுதியில் குடிநீர் வசதியில்லை; சாலை வசதியில்லை; இந்தப் பிரச்சனை அந்தப் பிரச்சனை என கூறி, அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யக் கோரிக்கை வைப்பர். ஆனால் இன்று வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளரிடம், எங்கள் வீட்டில் ஐந்து ஓட்டு இருக்கிறது. எவ்வளவு தருவீர்கள் எனக் கேட்கும் நிலையே உள்ளது. பொதுப் பிரச்சனைகள் பற்றியெல்லாம் கோரிக்கை வைக்கும் நிலை கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. மக்களின் மனநிலையை இந்த நிலைமைக்கு அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டன. இப்படி மாற்றியதில் திமுகவின் பங்குதான் அதிகம் என்றே சொல்லலாம். திருமங்கலமே இதில் பெரும் பங்கு. ஓட்டு என்றாலே பணம்தான் என்ற ஒரு கலாச்சாரத்தையே கொண்டுவந்துவிட்டார்கள். இருப்பினும் நாளுக்கு நாள் வளரும் மக்களின் படிப்பறிவும், பொருளாதார முன்னேற்றமும் இலவசங்களையும், வாக்குக்குத்தரும் பணத்தையும் ஒருநாள் தூக்கியெறிந்துவிடும்.


திமுகவின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்க்கும்போது, அவர்கள் வடிவேலை மட்டும்தான் நம்பியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. கூட்டணிக் கட்சித்தலைவர்களுக்கே சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கிவிட்டு, வடிவேலுக்குத்தான் கலைஞர் மணிக்கணக்கில் பேச நேரம் ஒதுக்கித்தருகிறார். சன் டிவியில் ஹீரோவாக காட்டப்படுகிறார். வடிவேலு தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக விஜயகாந்தை மிகவும் தரக்குறைவாகத் தாக்கி மேடைகளில் பேசிக்கொண்டிருக்கிறார். அவரின் பேச்சுக்கள் அத்தனையும் திமுகவின் மீதுள்ள பற்றால் அல்ல என்பதை அனைத்து திமுகவினரும் நன்கு அறிவர். ஒருவேளை திமுக படுதோல்வி அடைந்தால், அந்த வடிவேலை யார் காப்பாற்றப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால், அதற்கு வடிவேலுவிற்கு பரிசாக துணைமுதல்வர் பதவியைப் பரிசாகத் தரப்போகிறார்களோ என்னவோ. அந்த அளவிற்கு பேசிக்கொண்டிருக்கிறார். இந்தத் தனிமனிதத் தாக்குதல் தவிர்த்து, வேறு எதாவது அரசியல் ஞானம் வடிவேலுவிற்கு உண்டா? கட்சி பாகுபாடின்றி சில பேச்சாளர்களின் பேச்சைக் கேட்கச் சென்றதெல்லாம் ஒருகாலம். இப்போது அப்படிப்பட்ட பேச்சாளரென்று எவருமில்லை கலைஞர் உட்பட. கேவலமான தனிமனிதத் தாக்குதல்கள், நீ யோக்கியமா நான் யோக்கியமா என்ற நிலையில்தான் இன்று அரசியல்வாதிகள் பேசிக்கொண்டு வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் தேமுதிகவின் வாக்கு விகிதம்தான் ஆளுங்கட்சியைத் தீர்மானிக்கப் போகிறது என்ற செய்தியை அனைத்து ஊடகங்களுமே திட்டவட்டமாகக் கூறிவந்த நிலையில், இன்று அதன் நிலை என்ன என்பது தெரியவில்லை. உண்மையோ பொய்யோ விஜயகாந்த் மீது ஏராளமான விமர்சனங்கள் சமீபத்தில் வந்துகொண்டேயிருக்கின்றன. இவரின் பேச்சில் ஒரு கவர்ச்சி இல்லை என்றே தோன்றுகிறது. விஜயகாந்தின் மனைவியிடம் இருக்கும் பேச்சுத்திறன்கூட இவரிடம் இல்லாதது பின்னடைவுதான். பேச்சு ஒருபுறம் இருந்தாலும், இவரின் வாக்குறுதிகள், கொள்கைகள் என்ன என்றே தெரியவில்லை. குடும்ப ஆட்சி, ஊழல் இவற்றை மட்டுமே முன்வைத்துப் பிரச்சாரம் செய்துவருகிறார். வடிவேலு இவரை ஒரு முழுநேரக் குடிகாரன் என்ற ஒரு அபிப்பிராயத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இவரின் பதிலென்ன என்பது தெரியவில்லை.


திமுகவின் இலவசங்களுக்கு இணையாக அதிமுகவும் அறிவித்து உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளனர். ஆடு மாடுகள் எல்லாம் கொடுப்பதாக அம்மா அறிவித்துள்ளார். மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்களைத் தயாரிக்க ஏதாவதொரு பெரிய கம்பெனியிடம் ஆர்டர் கொடுத்துவிடலாம். ஆனால் ஆடு, மாடுகளுக்கு யாரிடம் ஆர்டர் கொடுக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. திமுகவின் குடும்ப ஆக்ரமிப்பு, மெகா ஊழல் இன்னும் பலவற்றால் கடுப்பாகிப் போயிருக்கும் மக்களுக்கு, மாற்றாக அதிமுக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தாததே இவர்களின் பலவீனம். திமுகவிற்கு இந்த முறை ஓட்டு போடமாட்டேன் என்ற முடிவை எடுத்தவர்கள், இன்னும் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களின் முடிவைப் பொறுத்துதான் அதிமுகவின் வெற்றி இருக்கிறது.


ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். நம்மை ஆளப்போகும் எவரும் நல்லவர்களுமில்லை; நம்பிக்கையானவர்களும் இல்லை. மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத, பதவிகளைக் கொண்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மட்டுமே செழிக்க வைக்கப் போகும் யாரோ ஒருவர்தான் நாளைய முதல்வர். அந்த நாளைய முதல்வருக்கு ஒரேயொரு வேண்டுகோள். பதவியேற்றதும் பீகார் சென்று ஒரு ஆறுமாத காலமாவது இருந்துவிட்டு வாருங்கள்.

உழவன்

16 comments:

Chitra said...

உள்ளதை உள்ளப்படி சொல்லி இருக்கீங்க.... சரியான கருத்துக்கள்.

sakthi said...

எனது கைதட்டல் உங்கள் காதில் விழுகிறதா உழவரே என் மனதில் நான் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தான் நீங்க இப்போ சொல்லி இருக்கீங்க

ராமலக்ஷ்மி said...

அருமை. அதிலும் கடைசி பத்தி க்ளாஸ்.

ராமலக்ஷ்மி said...

//மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்களைத் தயாரிக்க ஏதாவதொரு பெரிய கம்பெனியிடம் ஆர்டர் கொடுத்துவிடலாம். ஆனால் ஆடு, மாடுகளுக்கு யாரிடம் ஆர்டர் கொடுக்கப்போகிறார்கள்//

நல்ல கேள்வி:))!

Anonymous said...

என்ன செய்வது ?

இருக்கிற் அயோக்கியர்களில் யார் கொஞ்சமாவது நம்பக்கூடிய அயோக்கியர் என்று பார்க்க வேண்டிய நிலை.

ஆட்டிப்படைத்த அராஜ்கமா?

வாரி வழங்கிய ஊழல் ராஜ்யமா?

"உழவன்" "Uzhavan" said...

பின்னூட்டம் இட்டவர்களுக்கு ரொம்ப நன்றி. மிகக் குறைவானவர்களே இந்தப் பதிவைப் படித்திருப்பதால், யாராவது தங்கள் வலையிலும் இதைப் போட்டு லின்க் கொடுத்தீங்கன்னா, இன்னும் நிறைய பேரு படிப்பாங்க :-)

kumar said...

இலவசம் இலவசம்ன்னு சொல்லுறாங்களே, யாரோட பணம்
அவன்குளோட அப்பன்வீட்டு பணமா இல்ல ஆத்தா வீடு பணமா.
மக்களோட பணம்.
ஒழுங்கா எல்லோருக்கும் வேலை வாய்ப்பை கொடுக்க முடியல
இலவசம் கொடுகின்றங்கலான்.
இவங்க குடும்பம் கொழுத்து வாழறதுக்கு நம்ம சம்பாதித்த பணத்துல இருந்து
பிச்சை எடுத்து வாழுராணுக. வெட்கமா இல்லை. கடவுள் ஒருத்தர் இருக்கார்.

goma said...

நல்லாத்தான் ஆழமா உழுதுட்டீங்க....விளைச்சல் நல்லா இருக்கணும்...

பலே பிரபு said...

வடிவேலு பேச்சை கேட்கவே சகிக்கவில்லை.
நல்ல வேளை விஜயகாந்த் திருப்பி தாக்கிப் பேசவில்லை.

"உழவன்" "Uzhavan" said...

@Chitra
ரொம்ப நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

@sakthi
ஓ அப்படியா.. உங்களின் சார்பா நான் சொல்லிருக்கேன். நிறைய பேருடைய எண்ணமும் அதுதாங்க.. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி
தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@kumar
பொங்கி எழுந்திட்டீங்க போல.. என்ன பண்ணுறது.. ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கவேண்டும் நண்பா.. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@goma
ரொம்ப நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

@பலே பிரபு
ஆமா.. அந்த வகையில நாம தப்பிச்சோம்..நன்றி

Anonymous said...

மாப்பு வடிவேலுக்கு இருக்கு ஆப்பு. கருணாநிதியே வைப்பார். செத்தான் பயபுள்ள....நார வாயன் வடிவேல்...நல்ல வேலை விஜயகாந்த் எதிர்த்து பேசல. " சூரியன பார்த்து நாய் குலைத்தால் யாருக்கு நட்டம்?