Tuesday, December 21, 2010

 கிரா(மம்) எங்க தாத்தா

புதிய காலண்டர்களும், டைரிகளும் வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டன. சுவருக்கொன்றாய்த் தொங்கிக்கொண்டிருக்கும் காலண்டர்களில் தினம்/மாதம்/காலாண்டு எனக் கிழிக்கவேண்டியவைகளில், பல காலண்டர்கள் கிழிக்காமலேயே இன்னமும் ஜனவரியைக் காட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் புதிய காலண்டர்களையும், டைரிகளையும் தேவையில்லாவிட்டாலும் கேட்டுப் பெற ஆரம்பித்துவிட்டோம். புத்தாண்டின் துவக்கத்தில் எத்தனை காலண்டரும், டைரியும் கிடைத்தாலும் போதும் என்ற எண்ணம் வருவதேயில்லை. கடைசியில் காலண்டர்கள் வீட்டின் அலங்காரப் பொருள்களாகவும், டைரிகள் வீட்டுக் கணக்குகளையும், சமையல் குறிப்புகளையும் எழுதத்தான் பெரும்பாலும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த புத்தகக் கண்காட்சியில் வாங்கிய பல புத்தகங்கள் இன்னும் விரல்படாமல் அப்படியே இருக்கின்றன. அதற்குள்ளாக இதோ அடுத்த புத்தகக் கண்காட்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். காலண்டரும் டைரியும் போலவே புத்தகங்களும் இருந்துவிடக்கூடாதென்பது என் விருப்பம்.

கடந்த ஆண்டு ஏதோ ஒரு பதிப்பகத்தைச் சுற்றி வந்தபோதுதான் அந்தப் புத்தகம் என் கண்ணில் பட்டது. கண்ணில் பட்டவுடன் அதனை வாங்கவேண்டும் என்ற ஆவல் வரக் காரணம் அப்புத்தகத்தின் தலைப்பான "கரிசல் காட்டுக் கடுதாசி". கரிசல் காடு என்ற உடனேயே இயல்பாய் மனதிற்குள் ஒருவித சந்தோசம் ஏற்பட்டுவிடுகிறது. புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்த்தேன். கி.ராஜநாராயணன் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு அது. வெண்தலையோடு செங்கற்சுவற்றில் சாய்ந்தவாறு ஒரு பெரிய சதுரத்திற்குள் முன்பக்க அட்டையில் நின்றுகொண்டிருந்தார்.

அப்புத்தகத்தை வாங்கி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகப்போகிற நிலையில் கடந்த மாதம்தான் முழுவதுமாகப் படித்து முடிக்க முடிந்தது. மனதிற்குப் பிடித்துப்போன புத்தகமாக இருந்தும் படித்து முடிக்க இவ்வளவு காலம் ஆன காரணம் என்ன? தெரியவில்லை; இல்லை படிப்பதற்கென்று நேரம் ஒதுக்கமுடிவதில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் ஏன் ஒவ்வொரு பத்தியையும் படித்து முடித்தவுடன் நீர்ச் சுழல் போல மனம் அந்த இடத்திலேயே சுற்றுகிறது. மனது எருமை மாட்டின் மேலேறி ஊர்வலம் செல்கிறது. என்ன ஒரு அருமையான சவாரி அது. பள்ளி முடித்துவந்த மாலை வேளையில், மாட்டை அழைத்துக்கொண்டு சாலையின் இருபுறமும் இருக்கின்ற புல் வெளியில் மேயவிட்டுருக்கிறேன். அதன் மேலேறி சவாரி செய்துகொண்டே கண்மாயில் சென்று குளிப்பாட்டிருக்கிறேன். என்ன ஒரு தடிமனான தோல். மண்வெட்டி பிடித்து காய்ப்பு விழுந்த உள்ளங்கையை இப்போது பார்க்கிறேன். நகர வாழ்க்கை உள்ளங்கையை மிருதுவாக்கியுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் எருமையாகி என்னை அழைத்துச் செல்கிறது.

கோவில்பட்டியோரக் கிராமங்களைக் கண்முன் நிறுத்துகிறார் கிரா. அவர் நடந்த வீதிகளில் ஏதேனுமொன்றில் நானும் நடந்திருக்கக்கூடும் என்பதை நினைக்கும்போது மனம் கூத்தாடுகிறது. கிரா என்றாலே கிராமம்தான். அதுவும் என் கிராமம். கிராமத்தைப் பற்றிய தன் நினைவுகளை கரிசல் காட்டில் உழுதுகொண்டே எனது தாத்தா எனக்குச் சொல்வதுபோல் உள்ளது.

கடந்த ஆண்டில் வாங்கிய பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான "கனகதுர்கா"வை லயித்து வாசித்தபோதும், இன்னும் வாசிக்கப்படவேண்டியவை நிறைய மீதமிருக்கின்றன. அதுபோலத்தான் லட்சுமணப்பெருமாள் அவர்களின் சிறுகதைகளும்.

இப்போது வண்ணதாசனை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டிற்குள்ளாக வாசித்து முடிப்பேனா எனத் தெரியவில்லை. அவ்வளவு நெருக்கமான எழுத்து. மனது நாய்க்குட்டி போல ஒவ்வொரு பத்தியையும் சுற்றிவருகிறது. பக்கத்திற்கு பக்கம் கவிதைகள் ஒளிந்துள்ளன. வண்ணதாசனுக்குள் கல்யாண்ஜி ஒளிந்துள்ளார்; கல்யாண்ஜிக்குள் வண்ணதாசன் ஒளிந்துள்ளார்.

இதுபோல சொல்லவேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. இந்த ஆண்டில் எத்தனை புத்தகங்கள் சேரப்போகிறதோ தெரியவில்லை. எப்போது படித்து முடிக்கப்போகிறேனோ தெரியவில்லை.

*********************************************************

நாஞ்சில் நாடனுக்கு 2010-ன் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. நாஞ்சிலார்க்கு பூங்கொத்துகள்!

*********************************************************

இந்த ஆண்டுக்கான (2010) தமிழ்மணவிருதுகளுக்கான இடுகைத் தெரிவுகள் ஆரம்பமாகிவிட்டன. கீழ்க்கண்ட எனது பதிவுகளைப் படித்து, பிடித்திருந்தால் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. ராசா வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை - அரசியல், சமூக விமர்சனங்கள்

2. டாக்டர் எக்ஸ் - செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்

3. மன்னிக்கவும் (கவிதை) - படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

அன்புடன்
உழவன்

11 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பகிர்வு.

//காலண்டரும் டைரியும் போலவே புத்தகங்களும் இருந்துவிடக்கூடாதென்பது என் விருப்பம்.//

உண்மைதான். நானும் இதை மனதில் நிறுத்திக் கொண்டேன்.

விரைவில் வாங்கியவற்றை வாசித்து முடிக்க வாழ்த்துக்கள்.

கிராமத்து நினைவுகள் பற்றிய பகிர்வு மிக அருமை.

ராமலக்ஷ்மி said...

சொல்ல மறந்து விட்டேன்.

தலைப்பும் அருமை:)!

ஹுஸைனம்மா said...

//டைரிகள் வீட்டுக் கணக்குகளையும், சமையல் குறிப்புகளையும் எழுதத்தான்//
பிள்ளைகளுக்கு கிறுக்குவதற்கும்கூட!! :-)))

வண்ணதாசனைப் படிச்சுட்டு என்னத் தலைப்பு வைப்பீங்கன்னு யோசிக்கிறேன்!!

விக்னேஷ்வரி said...

கரிசல் காட்டுக் கடுதாசி - நினைவில் கொள்கிறேன்.

ம், வண்ணதாசனை இன்னும் வாசிங்க. ஒரு வித லயிப்பிலேயே இருக்கும் மனம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான பதிவு. நானும் இப்படித்தான். கைபடாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நாம் விலை கொடுத்து வாங்கிவிட்டால் நமதுதானே மெதுவாகப் படித்துக் கொண்டால் போயிற்று என்கிற மனப் பான்மை வந்து விடும் போலும்

'பரிவை' சே.குமார் said...

கிராமத்து நினைவுகள் பற்றிய பகிர்வு மிக அருமை.

கரிசல் காட்டுக் கடுதாசி - நினைவில் கொள்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
@ ஹுஸைனம்மா – எழுதும்போது என்ன தோணுதோ அப்படியே வச்சிடவேண்டியதான் :-)
@ வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
@ சே.குமார்
அனைவருக்கும் நன்றி

Anonymous said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அருமையான பதிவு. நானும் இப்படித்தான். கைபடாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. நாம் விலை கொடுத்து வாங்கிவிட்டால் நமதுதானே மெதுவாகப் படித்துக் கொண்டால் போயிற்று என்கிற மனப் பான்மை வந்து விடும் போலும்

ஆமோதிக்கிறேன் நானும்..

"உழவன்" "Uzhavan" said...

@ தமிழரசி
@ விக்னேஷ்வரி

நன்றி..

Muruganandan M.K. said...

எங்கள் மனசோடு உறவாடுகிறது ரசனையோடு படித்து நீங்கள் பதிவிட்டமை.
காலண்டர்களும், டைரிகளும் புது வருடங்களோடு வந்து வருடத்தை முந்தி மறைந்து போகின்றன.

"உழவன்" "Uzhavan" said...

@ Dr.எம்.கே.முருகானந்தன்

மிக்க நன்றி