டமடமன்னு கொட்டுச் சத்தம் கேட்கவும் என்ன விசயம்னு தெரிஞ்சிக்க எல்லாரும் தெருவுக்கு வந்து பார்த்தாங்க. ‘இன்னிக்கு மடத்துல கூட்டம்; எல்லாரும் வந்திருங்கனு’ சத்தம் போட்டுச் சொல்லிக்கிட்டே டமடமன்னு கொட்டடிச்சிக்கிட்டு கருப்பன் போய்க்கிட்டிருந்தான்.
“ம்.. எல்லாரும் பேசாம இருந்தா எப்படி? கூட்டம் சேர்ந்திருச்சில்ல. பேச்சை ஆரம்பிங்க” நல்லா குத்துக்கால் போட்டு, தூணோரமா சாஞ்சி உட்கார்ந்திருந்த காளிமுத்து பேச்சை ஆரம்பிச்சாரு.
அதுவரைக்கும் அமைதியா இருந்த கூட்டத்துல, லேசா காத்தடிக்கும்போது சருகெல்லாம் சலசலன்னு உதிருமில்ல அதுமாதிரி லேசா சலசலன்னு சத்தம் வந்தது. தலைவரு பேச்சை ஆரம்பிக்கவும் திரும்பவும் கூட்டம் அமைதியாயிடுச்சு.
நல்லா கருத்த தேகம். டவுணுக்கு கிவுணுக்கு போனாதான் சட்டை போடுறது. மத்தபடி காடுகரைக்கு போனாலும் சரி; இல்ல ஊருக்குள்ள இருக்கும்போதும் சரி; எப்பவுமே சட்டை போடாமத்தான் அலையுறது. மேல ஒரு துண்டு மட்டும் எப்பவும் கிடக்கும். சம்சாரிங்கன்னா அப்படித்தான. ரெண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யை உடம்புல பூசிட்டு வந்திருக்காரு போல. மடத்துல எரியுற குண்டு பல்பு வெளிச்சத்துல தலைவரு உடம்பு மினுமினுன்னு தெரியுது. கழுத்துல கிடந்த குடல்துண்டை சரிபண்ணிக்கிட்டே “என்னப்பா நாராயணா. என்ன உன் பிரச்சனை?”னு கேட்டாரு ஊருத் தலைவர்.
நாராயணன் பேச்சை ஆரம்பிச்சாரு. ‘இந்தப் பய ராசா இருக்கானே.. என் வீட்டுல பூந்து பத்து பவுனு நகையைத் தூக்கிட்டுப்போயிட்டான். அது என்னானு கேட்டுக் குடுங்க”
“எந்த ராசா? நம்ம கோபாலபுர பண்ண வீட்டுல மாடு மேச்சானே.. அந்தப் பயபுள்ளயா இப்படிச் செஞ்சான்?!”
“ஆமாமா.. அந்தப் பயதான். இப்ப எங்க மாடு மேய்க்கப் போறான். இப்படி அங்க இங்கனு எப்படியாவது காசு பார்த்திடுறான். அப்புறம் எதுக்கு மாடு மேய்க்கப் போகனும்”
“இந்தப் பயபுள்ள காட்டுல ஒன்ன விடமாட்டான். பருத்திய களவண்டுருவான்; ஆமணக்கு முத்த ஒடிச்சிருவான். எல்லாரு பிஞ்சையுலயும் கை வச்சிருவான். காவல்காருட்ட எத்தனை தடவை பூசை வாங்கிருக்கான் தெரியுமா”
“போன மாசம் களத்துல காயப்போட்டிருந்த மிளகா வத்தலை அள்ளிட்டுப்போயிட்டான். கை நீண்டுக்கிட்டே போகுது இவனுக்கு. ஒடிச்சாத்தான் சரியா வரும்” கூட்டம் இப்படி ஆளாளுக்கு ஒரு புகாரச் சொல்ல ஆரம்பிச்சிருச்சு.
ஒரு ஓரத்துல நின்னுக்கிட்டிருந்த ராசாவை “இப்படி முன்னாடி வாடா”னு தலைவரு காரமா கூப்பிட்டாரு. “என்னடா.. எல்லாரும் சொல்றதெல்லாம் உண்மையா? நீதான் நகைய எடுத்தியா?”
“ஐயையோ நான் எப்ப எடுத்தேன். எல்லாரும் ஏன் என் மேல இப்படி அநியாயமா பழி போடுறீக?” ஓ..னு அழ ஆரம்பிச்சான்.
“அழுத, கழுத்த ஒடிச்சிருவேன் ஒடிச்சி. செய்யுறதயும் செஞ்சிட்டு நடிக்குறதப் பாரேன். இன்னைக்குக் காலையில ரவிராஜ் நகைக்கடையில ஒரு மோதிரத்தை விக்கப் போயிருக்க. அதப் பார்த்த சோலையப்பண்ணன் சொல்லித்தாண்டா எல்லாருக்கும் தெரியும். பத்தாயிரம் ரூபா நகைக்கு அஞ்சாயிரம் கொடுத்தா போதும்னு சொன்னியாமே” படபடத்தார் நாராயணன்.
“பார்க்குற பர்வையை பாரு. நல்லா மூக்க வெடச்சிக்கிட்டு. ஆளும் மண்டையும். எந்திச்சு வந்து மிதிச்சேன்; சாணி சந்தைக்கு போயிரும். எங்கடா வச்சிருக்க எல்லாத்தயும்” தலைவரோட குரல்ல நடுங்குனவன் “வீட்டு குலுக்கையிலதான் வச்சிருக்கேன். மன்னிச்சிருங்க” னு ரெண்டு கையையும் முன்னால கட்டிக்கிட்டு, கீழ பார்த்தமானிக்கு நின்னுக்கிட்டிருந்தான் ராசா.
“சரிய்யா.. இந்தப் பயபுள்ளய என்ன செய்யலாம்? மன்னிச்சு விட்டுறலாமா? இல்ல எதாவது பைசல் பண்ணனுமா?” தலைவரு கூட்டத்தப் பார்த்துக் கேட்டாரு.
“பத்தாயிரம் அபராதம் போடுங்க. மேற்படி, பிள்ளையார் கோயிலுக்குப் பதினோரு நாளைக்கு காலையிலயும் சாய்ந்திரமும் தண்ணி எடுத்து ஊத்தச் சொல்லுங்க” கூட்டத்துல இருந்த ஒரு பெரிசு சொன்னாரு.
“என்னது பிள்ளையார் கோயிலுக்கா? இந்தப் பய தண்ணி எடுத்து பிள்ளையாருக்கு ஊத்துனா அதுவே பெரிய பாவம். ஊருப் பொது கக்கூச ரெண்டு வேளை கழுவச் சொல்லுங்க” ஒரு விடலைப் பையன் டகால்னு இப்படிச் சொல்லவும், கூட்டமும் அப்படியே பண்ணட்டும்னு சொல்லிடுச்சி.
“சரிடா.. இதான் உனக்குத் தண்டனை. பத்தாயிரத்தை வர்ற செவ்வாய்க்குள்ள பொதுக்கணக்குல கட்டிரனும். நாளையில இருந்து பதினோரு நாளைக்கு ரெண்டு வேளை சுத்தம் பண்ணிரனும். இப்ப வீட்டுக்குப் போயி அந்த நகையெல்லாம் எடுத்திட்டு வா” தலைவரு உத்தரவு போட்டாரு.
முத்தத்துல கயித்துக் கட்டில போட்டு உட்கார்ந்து, முத்தையாதாத்தா வீட்டம்மா கூடப் பேசிக்கிட்டு இருந்தாரு. தண்ணி குடிச்சிட்டு வச்சிருந்த வெண்கலச் செம்பு கட்டிலுக்குப் பக்கதுல இருந்திருக்கு. டொக்கு டொக்குனு வெத்தலய உரல்ல போட்டு இடிச்சிக்கிட்டு இருந்த வேலாயி பாட்டி, ராசா தெருவழியா நடந்து வர்றத பார்த்திடுச்சி. உடனே தாத்தாட்ட சொன்னதாம் “ஆ...ராசா வர்றான். செம்ப எடுத்து உள்ள வையுங்க”
உழவன்
Tuesday, November 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கிராமப் பஞ்சாயத்தையும் கதாபாத்திரங்களையும் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். நல்ல நடை.
முடித்த விதம் ரசித்தேன்:)!
athu sari....
raja vaaraan.... athanalaa marakkama
"செம்ப எடுத்து உள்ள வை"
ரசித்தேன்.
ரசிக்கும்படியாக இருக்கு வாழ்த்துகள்
nalla irukkunga ...
nice one krishna
@ராமலக்ஷ்மி
@அருள்
@சே.குமார்
@Chitra
@ஆ.ஞானசேகரன்
@அரசன்
@தமிழரசி
அனைவருக்கும் நன்றி
Are you from Tuticorin Dist? All these "vattara vazahkku" words remind me of my native place. I am from a village near Vilathikulam.
@Raj Chandirasekaran
கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கீழ்க்கண்ட பதிவை படிங்க.
http://tamiluzhavan.blogspot.com/2010/10/blog-post_31.html
தமிழ்மணவிருதுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நல்லா இருக்குங்க.
//DrPKandaswamyPhD
நல்லா இருக்குங்க.//
மிக்க நன்றி டாக்டர்
Post a Comment