Sunday, October 31, 2010

கல்கியில் வெளியான என் கட்டுரை

07.11.2010 தேதியிட்ட இவ்வார “கல்கி”யில் “இனிச்சமரம்” என்கிற என் கட்டுரையும், நண்பர் நிலாரசிகனின் “தனலட்சுமி டாக்கீஸ்” எனும் கட்டுரையும் ஊர்ப்பாசம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இனிச்சமரம்

நீங்கள் எப்போதாவது “இனிச்சமரம்” பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகினில் இருக்கும் எங்கள் ஊரான வேலிடுபட்டி எனும் கிராமத்தில், ஊரின் தென்கிழக்கில் ராட்சதக் குடை போல பரந்து விரிந்திருக்கும் முதுமையான ஒரு புளியமரம் இருக்கிறது. அம்மரத்தின் பழத்தை ஒருமுறை சுவைத்துப் பாருங்கள். ஒரு புளியமரத்தினை இக்கிராம மக்கள் ஏன் இனிச்சமரம் என்றே அழைக்கிறார்கள் என்பதன் காரணம் புரியும். காற்றிற்கு விழும் புளியம் பழங்களை சமைப்பதற்கு எடுத்துச் செல்லும் பெண்கள், இம்மரத்தின் பழத்தில் ரசம் வைக்கக்கூடத் தயங்கும் அளவிற்கு இனிப்பான புளியம்பழங்களைத்தரும் மரம் இந்த இனிச்சமரம்.

இம்மரத்தின் அருகினில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் நான் படித்தபோது, இடைவேளை மணியடித்ததும் போட்டிபோட்டுக் கொண்டு அம்மரம் நோக்கி ஓடிச்சென்று, இனிச்சமரத்தின் பழங்களைப் பொறுக்கித் தின்போம். பழம் கிடைக்காத சக நண்பர்கள் காசு கொடுத்து புளியம்பழத்தை வாங்கித் தின்ற ஞாபகம் இன்றும் நினைவில் இருக்கிறது. கோலி, பம்பரம், ஊஞ்சல் என எல்லோருக்கும் பால்ய காலத்தில் தாய்மடியாக விளங்கிய அம்மர நிழலில் சிறிது நேரம் அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டெடுப்பதை இன்னமும் பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

மரப்பலகையும், ரசம் போன கண்ணாடியுமாக, இம்மரத்தின் நிழலில் பெரும்பாலான நேரங்களில் அமர்ந்திருக்கும் முடி திருத்துபவரான பெருமாளுக்கு, எல்லோரையும் விட அதிகமான பாசம் இம்மரத்தின் மீது உண்டு. காற்றும் மழையுமாக இருந்த ஒரு நாளில், பல மரங்கள் சாய்ந்து கிடந்தாலும், இனிச்சமரத்தின் வடக்குப் பக்கமாய் இருந்த ஒரு பெரிய கிளை ஒடிந்து விழுந்தபோது, ஊரே அங்கு ஓடி வந்து சோகத்தை அவ்விடத்தில் கொட்டித் தீர்த்தது.

எனது தாத்தாவின் பால்ய காலத்திலிருந்து, இன்றுவரை இனிச்சம்பழங்களை வழங்குவது மட்டுமல்லாது, எங்கள் ஊரின் ஓர் அடையாளமாக இருக்கும் இம்மரத்தின் மீதிருக்கும் எங்களின் பாசம் என்றும் மாறவேமாறாது.

உழவன்

நன்றி: கல்கி




8 comments:

விஜய் மகேந்திரன் said...

உங்களின் தனித்துவமான கட்டுரை உழவன்,நீங்கள் தொடர்ந்து இது போன்ற ஊர் மணம் கமழும் கட்டுரைகளை எழுதவேண்டும்.நன்றாக வருகிறது உமக்கு....

ராமலக்ஷ்மி said...

இனிச்ச மரத்துடனான இனிய நினைவுகளை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

நான் படித்த பள்ளியில் இரண்டாம் வகுப்புக் கட்டிடத்தின் வாசலில் இப்படியான பெரிய புளிய மரம் உண்டு. அதன் அடியில் ஒரு ராட்டினமும். புளியம் பழத்தை விட புளியம் பூக்களை பென்சில் டப்பாவில் சேகரித்துச் சாப்பிடுவது எங்களில் பலருக்கும் பிடித்தமானதாய் இருந்தது:)!

கல்கியில் வெளிவந்தமைக்கு உங்களுக்கும் நிலா ரசிகனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்:)!

Unknown said...

வாழ்த்துக்கள் உழவன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களுக்கும் நிலா ரசிகனுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்:)!

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

Chitra said...

கல்கியில் உங்கள் படைப்பு வெளியானது குறித்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

கல்கியில் உங்கள் படைப்பு வெளியானது குறித்து மகிழ்ச்சி. பாராட்டுக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

@விஜய் மகேந்திரன் - மிக்க நன்றி நண்பா. ஊர் மணம் கமழும் கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன்.
@ராமலக்ஷ்மி
@செல்வராஜ் ஜெகதீசன்
@T.V.ராதாகிருஷ்ணன்
@அன்பரசன்
@Chitra
@சே.குமார்
 
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வார ஆனந்தவிகடனில் "வலமும் இடமும்" என்ற என் கவிதை வெளியாகியுள்ளது என்ற தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.