Sunday, October 24, 2010

டாக்டர் “எக்ஸ்”

சில ஆண்டுகளுக்கு முன்னர், நண்பரொருவரின் தங்கை திருமண வரவேற்பிற்காகச் செல்லும்போது பைக்கிலிருந்து விழுந்துவிட்டேன். என்னுடன் இன்னொரு நண்பரொருவரும் வந்திருந்தார். அது அவரின் துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள் செல்லவேண்டிய இடமான குரோம்பேட்டைக்குப் பக்கத்தில், பல்லாவரம் பேருந்து நிலையத்தைத் தாண்டியவுடன், என் முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் திடீரென நிற்பதுபோல் இருந்தது. அந்த நேரத்தில் நான் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை. ஒரு விநாடிதான் தாமதம் சாலையின் இடது ஓரமாக இருவரும் விழுந்து கிடக்கிறோம். சைக்கிள் ஓட்டப் பழகிக்கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ முறை கீழே விழுந்த அனுபவம் இருந்தாலும், பைக்கில் இருந்து கீழே விழுவது இதுதான் முதல்முறை.

சிறிய சைக்கிள் வாங்கிக் கொடுப்பதற்கெல்லாம் வீட்டில் அப்போது வசதியில்லை. பெரிய சைக்கிளில்தான் கற்றாகவேண்டிய நிலைமை. இரண்டு மூன்று நண்பர்கள் சேர்ந்துகொண்டு சைக்கிள் பழகுவோம். ஒருவர் ஓட்டினால் மற்ற இருவரும் கேரியர் பக்கமாக இரு பக்கமும் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே வருவர். இந்த அனுபவம் எனக்கு மட்டுமானதல்ல; எல்லோருக்குமானதுதான்.

சைக்கிள் சீட்டுக்கும் ஹேண்டில்பாருக்கும் இடையே இருக்கும் கம்பிக்குக் கீழே காலை உட்பக்கமாக வைத்து, இடுப்பை வளைத்து, டொக் டொக் என அரை பெடல் போட்டு ஓட்டிவருகிறேன். அந்தப் பாதை சற்று பள்ளமானதால் சைக்கிள் வேகமாகவே வருகிறது. அப்பாதையின் ஒரு ஓரத்தில் இருந்த கம்பு, சோளம் போன்ற கதிர்களை அடிக்கும் உருளைக் கல்லை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். நானும் ஹேண்டில்பாரைத் திருப்ப எவ்வளவோ முயற்சி செய்கிறேன்; ஆனாலும் முடியவில்லை. கனவில் யாராவது நம்மைக் கத்தியால் குத்த வரும்போது நாம்மால் ஓடவே முடியாது. அதுபோலதான், சைக்கிள் ஒட்டிப் பழகும்போது எந்தப்பக்கமும் நம்மால் ஹேண்டில்பாரைத் திருப்ப இயலாது. “ஏய் சைக்கிளைப் பிடிங்கடா பிடிங்கடா” எனச் சொல்லிக்கொண்டே அக்கல்லின் மீது மோதி விழுந்தேன். சைக்கிளைப் பிடித்துக்கொண்டு வந்த இரண்டுபேரும் தூரத்திலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது அதன் பின்னர்தான் தெரியவந்தது. துரோகிகள். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. யாருமே பிடிக்காமல் இவ்வளவு தூரம் தனியாக ஓட்டி வந்துள்ளோமே என்பதை நினைத்தபோது.

சென்னையின் சாலையில் யார் விழுந்து கிடந்தாலும், யாருமே கண்டுகொள்ளாமல் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுகொண்டேயிருப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுதான் உண்மையாகவும் இருக்கக்கூடும் என்றும் நம்பியிருக்கிறேன். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியமைத்த நாள், நான் விழுந்து கிடந்த அந்நாள். இரவு ஏழரை இருக்கும் என நினைக்கிறேன். விழுந்து கீழே கிடந்தபோது பக்கத்திலிருந்த கைவண்டிக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிந்தவர்கள் ஒடோடி வந்து தூக்கிவிட்டு, தண்ணீர் கொடுத்து பக்கத்தில் அமரவைத்தார்கள். வேறுவேறு திசையில் கிடந்த கைக்கடிகாரத்தையும் மொபைலையும் எடுத்துக் கொடுத்தார்கள். இந்த நேரத்தில் அவர்களோடு சேர்த்து என் ஹெல்மெட்டுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். என் தாடையில் விழவேண்டிய அடியைத் தாங்கியது அதுதான். முழங்கை முழங்கால் என உள்ளங்கை முதற்கொண்டு சிராய்ப்புகள். இரத்தம் மிதமான வேகத்தில் கசிந்து கொண்டிருந்தன. வேகமாக வந்து இடது பக்கமாகச் சாய்ந்து விழுந்ததில் இடது பக்க ஸோல்டரில்தான் பலமான அடி. கையை அசைக்கக்கூட முடியவில்லை. எனது பின்னால் அமர்ந்து வந்த நண்பருக்கு, கையிலும் காலிலும் ஏற்பட்ட சிராய்ப்பில் ஒரே இரத்தம்.

ஒரு ஆட்டோ பிடித்து, போகிற வழியில் ஏதாவது மருத்துவமனையில் காட்டிவிட்டுச் செலுங்கள் எனச் சொல்லி நண்பரை அனுப்பிவிட்டு, என் நண்பர்களின் வருகைக்காகக் காத்திருந்தேன். சூளைமேட்டிலிருந்து அவர்கள் வந்து, என்னை அழைத்துக்கொண்டு வடபழனியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குள் செல்லும்போது இரவு பதினோரு மணி இருக்கும். நம் அறைப் பக்கத்திலேயே இருக்கும் மருத்துவமனையில் காட்டிக்கொள்ளலாம் என்பதாலயே, பல்லாவரம் பக்கத்தில் எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் அங்கு சென்றோம். பசி வேறு உயிர் போகிறது. இதில் வலி வேறு. அரைமணி நேரத்திற்கும் மேலாக முதலுதவி செய்யக்கூட யாரும் வரவில்லை.

எப்படியோ ஒருவழியாக வந்த மருத்துவர் ஒருவர், எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்துவிட்டு, “எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டிருக்கிறது, உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்” எனவும், “இப்பவே அட்மிட் ஆகிருங்க. ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பன்ணிடலாம். காலையில் ஆர்த்தோ ஸ்பெசலிஸ்ட் வந்த உடனே ஆப்பரேசன் பண்ணிருவாரு” என்றும் கூறினார். இது என்னடா வம்பா போச்சுனு நினைச்சிக்கிட்டு ஒரு நிமிடம் யோசித்தேன். எதுவா இருந்தாலும் நம்ம டாக்டரிடம் காலையில் பேசிவிட்டு ஒரு முடிவு எடுக்கலாம் என முடிவுசெய்து விட்டு, முதலுதவி மட்டும் இப்போது செய்யுங்கள்; வேறெதுவும் வேண்டாம் எனப் பிடிவாதமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டேன்.

சென்னை இஸபெல் மருத்துவமனையின் கேஸ்ட்ரோ என்ராலஜிஸ்ட் ஆக இருப்பவர் டாக்டர் பர்னபாஸ் துரைராஜ். இவர் எனக்குத் தெரிந்த மருத்துவர் என்பதால், இவரிடம் காலையில் எழுந்தவுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு கீழே விழுந்த விசயத்தைக் கூறினேன். அப்போது அவர் எனக்கு அறிமுகப்படுத்திய மருத்துவர்தான் டாக்டர் எம். சுப்ரமணியன்; ஆர்த்தோ ஸ்பெசலிஸ்ட். இவரும் இஸபெல் மருதுவமனையில்தான் பணிபுரிகிறார். அறுபது வயதைத் தாண்டிய நல்ல அனுபவசாலி. (இக்கட்டுரையை எழுத ஆரம்பித்ததே இவருக்காகத்தான்)

மந்தைவெளியின் பஸ்டெப்போவிற்கு அருகில், தன் வீட்டிலேயே மருத்துவம் பார்க்கும் இவரிடம் சென்றபோது, வேறொரு கோணத்தில் மேலும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு, தொட்டில் மட்டும் போட்டு கைக்கு அசைவு கொடுக்காமல், ஒரு வாரம் வைத்துக்கொள்ளுங்கள். வலிக்கு மட்டும் இப்போது மாத்திரை எழுதித்தருகிறேன்; எல்லாம் சரியாகிவிடும் எனக் கூலாகச் சொல்லிவிட்டார். “சார்.. அந்த ஆஸ்பத்திரியில ஆப்பரேசன் பண்ணனும்னு சொன்னாங்களே” எனக் கேட்டபோது, அப்படியும் குணப்படுத்தலாம்; இப்படியும் குணப்படுத்தலாம் எனக் கூறினார். அன்று இந்த மருத்துவர் எனக்குக் கிடைக்கவில்லையெனில், அறுவைச் சிகிச்சை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். நன்றி டாக்டர். அநாவசியமாக அது இது என்று யாரிடமும் காசு பிடுங்க மாட்டார் என்பதையும் அதன் பின்னர் தெரிந்துகொண்டேன்.

இவர் மந்தைவெளியில் இருக்கும் தனது வீட்டில், வாரமொருமுறை ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவத் தொண்டு செய்கிறார். அந்நாளில் அத்தெருவே கூட்டமாக இருக்கும். அன்றைய தினம் மருத்துவம் பார்க்க வரும் ஏழைகள் ஐந்து ரூபாய் மட்டும் செலுத்தித் தன் பெயரை முன்பதிவு செய்துகொண்டால் போதுமானது. அடுத்த வாரத்திற்கான இலவச மருத்துவம் நடைபெறும் நாளை, முந்திய வாரத்திலேயே எழுதிப்போட்டுவிடுகிறார்கள். இதனை அறிந்தபோது, இந்தச் சென்னையில் இப்படி ஒரு மருத்துவரா என நான் வியந்துபோனேன். மற்ற நாட்களில் மாலை மூன்று மணிக்கே சென்று பெயரைப் பதிவு செய்தால்தான், அன்று நாம்மால் மருத்துவரைப் பார்க்கமுடியும். அந்த அளவிற்கு தினமும் கூட்டம் வரும். முகவரி: Dr. Subramaniyan M.S. Ortho., 5, Trustpakkam (North), Mandaveli, Chennai - 28 Phone: 044-24622494

மருத்துவம் என்பது புனிதமான தொழில். ஆனால் இன்று எல்லாமே காசுக்காக என்று ஆகிவிட்டது. அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில், ஒரு நல்ல மருத்துவர் நமக்குக் கிடைப்பது மிக மிக அரிது. அப்படிக் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகளே. இவரைப் போன்ற நல்ல மருத்துவர்கள் உங்கள் பகுதியிலும் இருக்கக்கூடும். அவர்களைப் பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளத்தான் இப்பதிவு. நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

உழவன்

24 comments:

ராமலக்ஷ்மி said...

அறுவை சிகிச்சை என வந்தாலே எப்போதும் இரண்டாவது கருத்து எடுக்க வேண்டும். அதுவும் தெரியாத இடத்தில் சொன்னால்.. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

நல்ல மருத்துவருக்கு உரிய மரியாதை செய்துள்ளீர்கள்.

// சைக்கிளைப் பிடித்துக்கொண்டு வந்த இரண்டுபேரும் தூரத்திலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது அதன் பின்னர்தான் தெரியவந்தது. துரோகிகள். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி. யாருமே பிடிக்காமல் இவ்வளவு தூரம் தனியாக ஓட்டி வந்துள்ளோமே என்பதை நினைத்தபோது.//

இப்படித்தான் இருக்கணும்:))!

Pattu & Kuttu said...

Good Post..our blogger should make to review all..including hospital ,,we need good tamil portal like mouthshout..

There is another Dr name Dr Jaganmohan at RK mutt Road, he charges Rs10/ only (it was Rs5/ sometime back)

VS Balajee

sakthi said...

நல்ல மனம் படைத்த டாக்டர் !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

ஹுஸைனம்மா said...

ஆச்சர்யம்தான்.. அங்கங்கே இப்படியும் சிலரைக் குறித்துக் கேள்விப்படும்போது மகிழ்ச்சி.. இதை மறவாமல் இங்கு பகிர்ந்ததற்கு நன்றி. கைவலி பரவாயில்லையா இப்ப?

ஜெயந்த் கிருஷ்ணா said...

வியப்பாக உள்ளது .. நல்ல மனம் படைத்த டாக்டர்...

அன்பரசன் said...

//மருத்துவம் என்பது புனிதமான தொழில். ஆனால் இன்று எல்லாமே காசுக்காக என்று ஆகிவிட்டது.//

உண்மைதாங்க..

vasu balaji said...

இப்படியான மருத்துவர்கள் அரிது. பகிர்வுக்கு நன்றி

Suresh S R said...

நானும் இதே போல் விபத்தில் மாட்டிய போது பின்னால் bike-ல் வந்தவர்கள் அனைவரும் நன்கு உதவி செய்தார்கள்.
இதற்கு காரணம் நான் சுய நினைவு இழக்காமல் இருந்தது என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் சுய நினைவு இழந்து, நிறைய ரத்தம் வெளியேறி இருக்கும்போது எவரும் உதவி செய்வதில்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பெரும்பாலும் சுய நினைவு இழந்து, நிறைய ரத்தம் வெளியேறி இருக்கும்போது எவரும் உதவி செய்வதில்லை.//
உண்மை தான்.. இது போன்ற சந்தர்ப்பத்தில் மனிதாபிமானத்தைவிடவும்
தன் பயம் அதிகமாகி பின்வாங்கிவிடுவது .

நல்ல விசயம்.. எழுதி இருக்கீங்க..மற்றவர்களை அதுபோன்ற மருத்துவர்களை அடையளம் காட்ட சொல்லி
இருக்கிறீர்கள்..பாராட்டுகள்.

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
அறுவை சிகிச்சை என வந்தாலே எப்போதும் இரண்டாவது கருத்து எடுக்க வேண்டும். அதுவும் தெரியாத இடத்தில் சொன்னால்.. விழிப்புணர்வைத் தரும் பகிர்வு.

நல்ல மருத்துவருக்கு உரிய மரியாதை செய்துள்ளீர்கள். //
 
மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//Pattu & Kuttu
Good Post..our blogger should make to review all..including hospital ,,we need good tamil portal like mouthshout..

There is another Dr name Dr Jaganmohan at RK mutt Road, he charges Rs10/ only (it was Rs5/ sometime back)

VS Balajee //
 
ஒரு நல்ல மருத்துவரையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
நல்ல மனம் படைத்த டாக்டர் !!! //
 
ஆம்.. வருகைக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//T.V.ராதாகிருஷ்ணன்
விழிப்புணர்வைத் தரும் பகிர்வு. //
 
நன்றி சார்.

"உழவன்" "Uzhavan" said...

//ஹுஸைனம்மா
ஆச்சர்யம்தான்.. அங்கங்கே இப்படியும் சிலரைக் குறித்துக் கேள்விப்படும்போது மகிழ்ச்சி.. இதை மறவாமல் இங்கு பகிர்ந்ததற்கு நன்றி. கைவலி பரவாயில்லையா இப்ப? //
 
மிக்க நன்றி மேடம்.. உங்க அக்கறையான விசாரிப்புக்கும் :-)

"உழவன்" "Uzhavan" said...

//வெறும்பய
வியப்பாக உள்ளது .. நல்ல மனம் படைத்த டாக்டர்... //
 
ஆமா.. நல்ல டாக்டர். நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//அன்பரசன்
//மருத்துவம் என்பது புனிதமான தொழில். ஆனால் இன்று எல்லாமே காசுக்காக என்று ஆகிவிட்டது.//

உண்மைதாங்க.. //
 
இப்படிப்பட்ட சூழலிலும் நல்ல மருத்துவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//வானம்பாடிகள்
இப்படியான மருத்துவர்கள் அரிது. பகிர்வுக்கு நன்றி //
 
மிக்க மகிழ்ச்சி சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

//Suresh S R
நானும் இதே போல் விபத்தில் மாட்டிய போது பின்னால் bike-ல் வந்தவர்கள் அனைவரும் நன்கு உதவி செய்தார்கள்.
இதற்கு காரணம் நான் சுய நினைவு இழக்காமல் இருந்தது என்று நினைக்கிறேன்.

பெரும்பாலும் சுய நினைவு இழந்து, நிறைய ரத்தம் வெளியேறி இருக்கும்போது எவரும் உதவி செய்வதில்லை. //
 
நீங்கள் சொல்வதும் சரிதான் சுரேஷ்.. அந்த நேரத்தில் உதவி செய்ய வருபவர்கள் மிகமிகக் குறைவே.
கருத்துக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

/முத்துலெட்சுமி/muthuletchumi
\\பெரும்பாலும் சுய நினைவு இழந்து, நிறைய ரத்தம் வெளியேறி இருக்கும்போது எவரும் உதவி செய்வதில்லை.//
உண்மை தான்.. இது போன்ற சந்தர்ப்பத்தில் மனிதாபிமானத்தைவிடவும்
தன் பயம் அதிகமாகி பின்வாங்கிவிடுவது .

நல்ல விசயம்.. எழுதி இருக்கீங்க..மற்றவர்களை அதுபோன்ற மருத்துவர்களை அடையளம் காட்ட சொல்லி
இருக்கிறீர்கள்..பாராட்டுகள். //

"உழவன்" "Uzhavan" said...

/முத்துலெட்சுமி/muthuletchumi
 
ஆமா.. பயம்தான் அதற்குக் காரணம். பாராட்டுக்கு மிக்க நன்றி :-)

மாதேவி said...

டாக்டரைப் பாராட்டுவோம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல மருத்துவருக்கு உரிய மரியாதை செய்துள்ளீர்கள்.

டாக்டரைப் பாராட்டுவோம்.

"உழவன்" "Uzhavan" said...

தமிழ்மணவிருதுக்கு இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.