Sunday, August 22, 2010

வேலை

நகர இரைச்சலை இருள் முழுமையாக விழுங்கியிருந்தது. மெர்குரி விளக்கின் வெளிச்சத்தின் ஒரு பகுதியை மழுங்கடித்திருந்த சில மரங்களின் ஓரமாய், காலை ஆட்டிக்கொண்டே தூங்கக் கற்றுக்கொண்ட சுந்தரம், தொப்பியைத் தலைக்கு வைத்து ஒருக்களித்துப்படுத்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார்.
 
செக்யூரிட்டி கேட்டின் அருகிலிருந்த தென்னை மரங்கள் சலசலத்துக்கொண்டிருந்தன. குடி தண்ணீர்ப் பாத்திரத்தோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த சில்வர் டம்ளர் காற்றிற்கேற்றவாறு வெவ்வேறு வேகத்தில் ஆடிக்கொண்டிருந்தது.
 
"இந்த அருவா எங்க போச்சு? இந்த எடத்துலதான எப்பவும் இருக்கும்" தேடி எடுத்து, உதிர்ந்து விழுந்த இரண்டு தேங்காய்களோடு, நீளமான கம்பால் தரையைத் தட்டிக்கொண்டே சுந்தரத்தை நோக்கிச் சென்றார் முனியசாமி.
 
"என்ன சுந்தரம் இப்படி டூட்டி நேரத்துல தூங்கிக்கிட்டு இருக்கீங்க?"
 
"இந்த நடு ராத்திரியில எவன் வந்து ஏறிக்குதிக்கப் போறான். நீங்களும் இப்படி விரிச்சுப் படுங்க. செக்யூரிட்டி இருக்காங்கனு தெரிஞ்சாலே எவனும் திருட யோசிப்பான்னே."
 
"வேலைக்கு வந்து ஒரு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ளேயே இப்படியா. உருப்பட்ட மாதிரிதான். கடனேனு எப்பவுமே வேலை பார்க்கக்கூடாது சுந்தரம். அது என்னைக்குமே நமக்குத்தான் ஆபத்து."
 
"அப்படி என்னன்ணே பெரிய ஆபத்து வந்துரப்போகுது? இவன் இல்லேனா இன்னொருத்தன். அவ்வளவுதானே"
 
"அங்கயும் இப்படித்தானப்பு வேலை பார்ப்ப. சரி சரி.. எழுந்து முகத்தைக் கழுவிட்டு, விசிலயும் டார்ச்லைட்டையும் எடுத்திட்டு வா; ஒரு ரவுண்ட் போகலாம்." முனியசாமி சொன்னவுடன், 'என்னடா இவரோட ஒரே தொந்தரவாப் போச்சு'னு முணங்கிக்கிட்டே எழுந்தார் சுந்தரம்.

"அந்தத் தேங்காயக் குடுங்கண்ணே. வெட்டிக் குடிச்சிட்டு, தேங்காயத் திண்ணுக்கிட்டே போகலாம்" என்றவாறே வெட்ட ஆரம்பித்தார் சுந்தரம்.

"முனியசாமியண்ணே, அஞ்சு வருஷமா இங்க வேலை பார்க்குறீங்கில்ல?"
 
"ஆமாமா.. போன வைகாசியோட அஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு"
 
"அஞ்சு வருசமா இங்கேயே வேலை பார்க்குறீங்களே, இந்த அஞ்சு வருஷத்துல ஒரு நாலஞ்சு கம்பெனி மாறியிருந்தீங்கன்னா, இப்ப வாங்குற சம்பளத்தவிட டபுள் மடங்கு வாங்கிக்கிட்டு இருப்பீங்கல்ல" பேசிக்கொண்டே தேங்காயை உரித்துக்கொண்டிருந்தார் சுந்தரம்.
 
"வருஷத்துக்கு ஒரு கம்பெனி, ரெண்டு கம்பெனினு மாறிக்கிட்டே இருக்குறதுதான் புத்திசாலித்தனம்னு நினைக்கிறயா சுந்தரம்? அது ஒரு நேரத்துல உனக்குத்தான் ஆபத்துல முடியும்."
 
"ஆபத்து என்ன ஆபத்து. எனக்கெல்லாம் ஒரு ஐநூறு ரூபாய் சம்பளம் அதிகமா கெடச்சாலே போதும்; நாளைக்கே அங்க போய் சேர்ந்திருவேன். நாந்தான் அப்பவே சொன்னேன்ல. நீங்க வேணா பார்த்துக்கிட்டே இருங்க; ஆறே மாசம்தான். வேற கம்பெனிக்குப் போய்க்கிட்டே இருப்பேன்" சுந்தரம் ரொம்பவும் உறுதியோடு சொன்னார்.
 
சுந்தரத்தோட பேச்சைக் கேட்டு முனியசாமிக்குக்கூட லேசா மனசு ஆட்டம் குடுத்துச்சு. 'சே.. இங்கேயே அஞ்சு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டோமோ' என்ற எண்ணம் லேசா வர ஆரம்பித்தது. அப்படியே சில மாதங்களும் கடந்தன. சொன்னமாதிரியே ஆறே மாசத்துல வேற கம்பெனிக்கும் போய்விட்டார் சுந்தரம்.
 
ஒவ்வொரு வருஷமும் சிறந்த தொழிலாளர்னு ஒரு சிலரைத் தேர்வு செய்து, ஃபேமிலி டே ஃபங்ஷனில் அவார்டு கொடுப்பது கம்பெனியோட வழக்கம். இந்த வருஷமும் வழக்கம் போல ஃபேமிலி டே ஃபங்ஷனுக்கு குடும்பத்தோடு முனியசாமி வந்திருந்தார்.
 
கம்பெனி முதலாளி மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது "இந்த ஆண்டுக்கான சிறந்த தொழிலாளியாக முனியசாமி அவர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக நமது கம்பெனிக்கு மிகுந்த கடமையுணர்வோடும், பொறுப்புடனும் பணியாற்றியமையை நிர்வாகம் அடையாளங்கண்டு அவருக்கு இந்த அவார்டை அளிக்கிறது. அவர் குடும்பத்தோடு வந்து இந்த "சிறந்த தொழிலாளர்" அவார்டையும், அதற்கான பரிசுத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தையும் பெற்றுக்கொள்ள வருமாறு அழைக்கிறோம்" என்று சொல்லவும், கூட்டத்தோட கூட்டமா இருந்த முனியசாமி ஆனந்தக் கண்ணீரோட போயி அவார்ட வாங்கிட்டு வந்திருக்கிறார்.
 
oOo
 
'வேற வழியில்லை; இன்னிக்குப் போய் முனியசாமி அண்ணனைப் பார்த்துப் பேசவேண்டியதுதான்' மனதில் வலியோடு சுந்தரம் வேகவேகமாய் சென்றுகொண்டிருந்தார்.
 
கம்பெனி கேட்டின் அருகினில் வழக்கமான மிடுக்குடன் நின்றுகொண்டிருந்த முனியசாமி அண்ணனைப் பார்த்தவுடன், "முனியசாமியண்ணே எப்படிண்ணே இருக்கீங்க?" என சுரத்தில்லாமல் விசாரித்தார்.
 
"நல்லா இருக்கேன் சுந்தரம். நீ எப்படி இருக்க? "
 
"ம்ம்.. இருக்கண்ணே.. எனக்கு இங்க ஒரு வேலை வாங்கிக்குடுங்களேண்ணே" பட்டுனு சுந்தரம் கேட்க,
 
விசாரித்த போதுதான் 'இங்கயும் ஒரு ஆறுமாசம்தான வேலை பார்க்கப்போறோங்கிற நெனப்புல, பொறுப்பில்லாம நைட் டூட்டில தூங்கியிருக்கிறாரு. அந்த நேரத்துல நிறைய பொருள்கள் திருடு போய்விட்டதால் வேலையை விட்டுப் போகச் சொல்லிட்டாங்க' என்பது தெரிந்தது.
 
'இனிமேலாவது எங்க வேலை பார்த்தாலும் கடேனுன்னு பார்க்காத; கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோனு புத்திமதியெல்லாம் சொல்லி, அங்கேயே முதலாளிகிட்ட சிபாரிசு பண்ணி வேலையும் வாங்கிக் கொடுத்தாராம்.
 
உழவன் 
 
இது கதையெழுதும் முயற்சியே. மற்றும் இது கம்பெனி மேக்கஸினுக்காக எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

18 comments:

ராமலக்ஷ்மி said...

முயற்சி திருவினையாகியுள்ளது:)! நல்லாயிருக்கு கதை. தொடரலாம். களத்தில் இறங்குங்கள். வாழ்த்துக்கள்!

ஹுஸைனம்மா said...

நல்ல கதை.

மீள் பதிவா? முன்னரே படித்த ஞாபகம்.

bsatheeshme said...

nalla irukku.... good...

பத்மா said...

i have read this before ...nice

Chitra said...

good story.... :-)

ஆ.ஞானசேகரன் said...

முயற்ச்சிக்கு வாழ்த்துகள் நல்லாயிருக்கு நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி நண்பா..:-))

'பரிவை' சே.குமார் said...

முயற்சி திருவினையாகியுள்ளது... நல்லாயிருக்கு.

rvelkannan said...

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே
முயற்சியை தொடருங்கள் ... வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

ராமலக்ஷ்மி
ஹுஸைனம்மா
சதீஷ் குமார்
பத்மா
Chitra
ஆ.ஞானசேகரன்
கார்த்திகைப் பாண்டியன்
சே.குமார்
kannan

தொடர்ந்து ஊக்கம் தரும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி

தமிழ்க்காதலன் said...

சொல்ல வந்த கருத்தும், சொல்லியுள்ள விதமும், மிக அருமை. ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடமையுணர்ச்சிப் பற்றி மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர் உழவரே. நல்ல படைப்புகள் தொடருங்கள்.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி தமிழ்க் காதலன்.

விநாயக முருகன் said...

என்ன தல.... எல்லா கவிஞர்களும் கவிதையை விட்டுட்டு சிறுகதைக்கு தாவுறாங்க

Haiku charles said...

Arumai

"உழவன்" "Uzhavan" said...

//என்.விநாயகமுருகன் navina14@hotmail.com
என்ன தல.... எல்லா கவிஞர்களும் கவிதையை விட்டுட்டு சிறுகதைக்கு தாவுறாங்க//

சும்மாதான் தல.. திட்டமிடல் எல்லாம் இல்லை. நன்றி

//Haiku charles
Arumai //

ரொம்ப நன்றிங்க

Ahamed irshad said...

நல்லாயிருக்கு கதை..ஆரம்ப வரிகள் பிரமாதம்..

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நன்றி அஹமது இர்ஷாத்

பா.ராஜாராம் said...

நடை பிரமாதம்!

முடிவில் நீதி இருப்பது, சிறுகதையை சற்று எத்துகிறது. (கம்பனி பிராண்ட் என்பதால் இருக்கலாம்.)

உழவரே, சிறுகதை எழுதும் பருவம் தொடங்கியாச்சு. தொடங்கணும்..