Monday, April 19, 2010

உழவனின் “நெல்மணிகள்" - 2

சித்திரைத் திருவிழாவிற்காக அகமதி, அம்மாவோடு ஊருக்குச் சென்றாள். வழியனுப்பி வைப்பதற்காக நான் அவர்களோடு எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் செல்லவேண்டிய முத்துநகர் விரைவுவண்டியில், அவர்களுக்கான இருக்கையில் உடைமைகளை வைத்துவிட்டு, வெளியே வந்து நின்று பேசிக்கொண்டிருந்தோம். பயணம் செய்யவேண்டியவர்கள், வழியனுப்ப வந்தவர்கள் என நடைமேடையெங்கும் கூட்டம்.

அகமதியோடு கொஞ்சிக்கொண்டிருந்த நான், பளார் என விழுந்த அறைச் சத்தம் கேட்டு திரும்பினேன். எங்களுக்கு மிக அருகினில் டி சர்ட், ஜீன்ஸ் சகிதம் இருந்த ஒரு இளைஞர், ஒரு பையனை (இருக்கைகளின் கீழே சுத்தம் செய்துவிட்டு, ஏதாவது நம்மிடம் கேட்டு வாங்கிச் செல்வார்களே. அதுபோன்றதொரு தோற்றம் கொண்ட, 20 வயது மதிக்கத்தக்க ஒருவன்) சட்டையைப் பிடித்துக் கொண்டு, ‘இங்க என்னடா பண்ணுற? என்ன வேணும் உனக்கு?’ எனக் கேட்டுக்கொண்டே அடுத்த அறைக்குத் தன் கையைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார். பின்னாலயே நகர்ந்து, தண்டவாளங்களுக்குள் குதித்து அடுத்த நடைமேடையில் ஏறி அந்தப் பையன் ஓட, அந்த இளைஞனும் அவனைப் பிடிக்க பின்னாலயே ஓடினார்.

என்ன நடந்தது எனத் தெரியாமல் அனைவரும் குழம்பிக்கொண்டிருந்த சில நிமிடங்களில், அந்தப் பையனை சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்த அந்த இளைஞர், இவனுக்கு யாராவது சாப்பாடு கொடுக்கிறேனு சொன்னீங்களா? எனக் கேட்க, அனைவருமே இல்லை எனத் தலையாட்ட, அந்தப் பையனை அப்படியே இழுத்துச் சென்றார். அப்போது நான், ‘நீங்க யாரு சார்?’ எனக் கேட்க, போலீஸ் எனப் பதிலளித்துச் சென்றார்.
உண்மையிலேயே அந்தப் பையன், யாரிடமாவது ஏதாவது வாங்கித் தன் பசியைப் போக்கிக் கொள்ளலாம் என வந்தானா, இல்லை பயணிகள் தன்னை மறந்து உறவினர்களுடன் அளவளாவிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் திருடிச் செல்பவனா என்பது தெரியவில்லை.

ஆனால், இதுபோன்று மக்கள் அதிகமாகக் கூடுகின்ற ரயில் நிலையத்தில், சாதாரண உடுப்பிலும் காவல் துறையினர் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் மனநிறைவையே தந்தது.

0o0

முத்து நகர் விரைவு வண்டி மெதுவாய் நகர ஆரம்பித்த உடன், நான் அப்படியே பின்னோக்கி வந்துகொண்டிருக்கிறேன். ரயிலை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் ப்ளீஸ் என்று சொல்லியவாறு இரண்டு பெண்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் கண் முன்னால் ரயில் போவதைப் பார்த்துக்கொண்டே. வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு காவலர், ‘நான் நிறுத்த முடியாது; பின்னால Guard இருக்காரு, அவர்ட்ட சொல்லுங்கம்மா’ என்று சொல்லிக் கொண்டே முன் நோக்கி ரயிலோடு போய்க்கொண்டிருக்கிறார். ஆணாக இருந்திருந்தால் ரயில் செல்லும் வேகத்திற்கு ஏறிவிட வாய்ப்பிருக்கிறது. கூட்டமெல்லாம் அப்படியே நின்றுகொண்டு ரயில் நிற்குமா நிற்காதா என ஒரு விதப் பரிதவிப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ரயிலின் வால் நுனியில் வெள்ளை வெளீரென Guard கையில் கொடியோடு நின்றுகொண்டிருக்கிறார். இரு பெண்களின் கெஞ்சலைக் கேட்ட அவர் ரயிலை நிறுத்த அப்பெண்கள் ஏறிச் சென்றனர். எனக்குக் கூட அப்பாடா என்றிருந்தது.

0o0

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற ‘பாதுகாப்பு தின’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஒருவர் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில், வெட்டப்பட்ட கறிகளையே புலிகளுக்கு உணவாகப் போட்டுவந்தார்களாம். (இங்க வண்டலூர்லயும் அப்படித்தான்) ஒருநாள், உயிரோடு ஒரு மாட்டை உள்ளே விட்டுவிட்டு வேட்டையாடி சாப்பிட வைப்போமே என்று முடிவுசெய்து, ஒரு மாட்டை உள்ளே விரட்டி விட்டார்களாம். ஆனால், புலியானது வேட்டையாடாமல் அப்படியே நின்றதாம். பாதுகாப்பு சம்பந்தமான ட்ரெயினிங்களும் அடிக்கடி ஏற்படுத்தவேண்டும். இல்லையேல் அந்தப் புலி வேட்டையாடவே மறந்ததுபோல, நாமும் பாதுகாப்பு சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் மறந்துவிடுவோம் என்றார். இது எல்லாவற்றிற்குமே பொருந்தும். எந்த ஒரு செயலையும் நாம் நீண்ட காலமாக செய்யாமல் இருந்துவிட்டால், அது மறந்துபோகக்கூடிய நிலை ஏற்படும். ஆகையால் எதுவாயினும் தொடர்ந்து பயிற்சியில் இருங்க.

0o0

“நமது கல்வி முறையில் விடைத்தாள்களைத் திருத்துவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகும். திருத்துவதற்கு ஆள் கிடைக்காது. பொதுவாக அந்தந்த பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் விடைத்தாள்களைத் திருத்த வேண்டும். ஆள் கிடைக்காத சமயத்தில் வேறுமாதிரியாகிவிடும். கீ என்ற ஒன்றை வைத்துக்கொண்டு திருத்தவேண்டிய நிலை. இந்த இடத்தில் பாட சம்பந்தமாக எதுவுமே தெரியவில்லையென்றாலும் இந்த விடைத்தாள்களை யாராலும் திருத்த முடியும். அதற்காகத்தான் இந்த கீ. குறிப்பிட்ட பாயிண்டுகளை எழுதியிருந்தால் போதும், அதற்கு மார்க் உண்டு. அதற்காகத்தான் இந்த கீ.

ஆங்கிலமே தெரியாதவர்கள் மாணவர்களின் ஆங்கில விடைத்தாள்களைத் திருத்துகிறார்கள். கணக்கே தெரியாதவர்கள் கணக்கு விடைத்தாள்களைத் திருத்துகிறார்கள். திருத்துவதற்கு ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. இதில் மாணவர்களின் தலையெழுத்தைத்தான் என்ணி வருத்தப்பட வேண்டும்.”

இம்மாத (ஏப்ரல் 2010) வடக்குவாசல் இதழில், ‘தேவையற்ற பொதுத் தேர்வு முறை’ என்ற தலைப்பில் சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதியவைதான் மேலேயுள்ளவை.

ம்ம்.. இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்ல? இந்த லட்சணத்தில் விடைத்தாள்கள் வேறு காணாமல் போய்விடுகிறது.

0o0

கடந்த வியாழக்கிழமை (15.04.2010) நமது GSLV D3 தோல்வியில் முடிந்து எல்லோரையுமே வருத்தத்தில் ஆழ்த்தியது. வெற்றிக்குப் பின்னால் எல்லா விஞ்ஞானிகளோடும் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் ISRO தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள், அன்று தனியாகவே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். சில பொழுதுகளில் சிலர் கேட்கும் சில கேள்விகளால், விஞ்ஞானிகளின் மனம் மேலும் புண்படக்கூடும் என்பதாலாயே தனியாகச் சந்திப்பதாகக் கூறினார். ஒரு தலைமை இப்படித்தான் இருக்கவேண்டும். வெற்றிகளை அனைவரோடும் பங்கு போட்டுக்கொண்டும், தோல்விகளுக்குத் தானே பொறுப்பேற்றுக்கொள்வதும் தலைமைக்கான மிகச் சிறப்பான பண்பாகும். இன்னும் ஓராண்டுக்குள் நமது சொந்தத் தயாரிப்பு கிரையோஜெனிக் உதவியுடன் மீண்டும் ஏவப்படும் என்று ISRO கூறியுள்ளது. வாழ்த்துகள் விஞ்ஞானிகளே!
 
உழவன்

11 comments:

ராமலக்ஷ்மி said...

கடந்த வாரம் சென்னை-பெங்களூர் ட்ரெயினில் வந்த விருந்தினர் பயணித்த கோச்சின் பக்கத்து பெட்டிகளில், அடுத்தடுத்து சன்னல் வழியே 3 சங்கிலி பறிப்புகள். உடனடியாக போலிஸ் வந்தாலும் இருட்டுக்குள் ஓடி திருடர்கள் தப்பித்து விட்டனர். குற்றங்கள் பெருகி விட்டன.
---
//எந்த ஒரு செயலையும் நாம் நீண்ட காலமாக செய்யாமல் இருந்துவிட்டால், அது மறந்துபோகக்கூடிய நிலை ஏற்படும்.//

தத்துவம் சரியே. உதாரணம் பயங்கரம்:)!

---

பகிர்ந்த நெல்மணிகள் யாவும் நன்று.

ஹுஸைனம்மா said...

எல்லாமே அருமை.

GSLV D3 - திரு. அப்துல் கலாமும் தனது வாழ்வில் இவ்வாறு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொல்லியிருந்தார் - ஒரு தோல்வியில், சம்மந்தப்பட்ட அந்நாளைய மத்திய அமைச்சர் தோல்வியை ஏற்றுக் கொண்டதாகவும், அது தம் குழுவினருக்கு மேலும் ஊக்கத்தைத் தந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமுதா said...

/*பகிர்ந்த நெல்மணிகள் யாவும் நன்று*/
வழிமொழிகிறேன்

Chitra said...

பார்த்து பார்த்து "நெல்மணிகளை" எடுத்து எழுதி இருக்கீங்க. நல்லா இருக்குங்க.

ஹேமா said...

அத்தனை அனுபவங்களும் அருமையான மணிகள்தான் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெல்மணிகள் : அழகான கோர்வை.

விநாயக முருகன் said...

நெல்மணிகளா? வைரமணிகள் மாலையா? அருமை.

'பரிவை' சே.குமார் said...

உழவன்,
அத்தனை நெலமணிகளும் அருமை...!
நடப்புக்களை நல்லா படம்பிடிச்சிருக்கீங்க...!

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, அடுத்த ஏவுகனை வெற்றியடைய பிரார்த்திக்கின்றேம். ஹிசைனம்மா சொன்னது போல அவர் மத்திய அமைச்சர் கிடையாது. கலாம் அவர்களுக்கு புராக்ஜட் அதிகாரியாக(சதீஷ் தவான்) இருந்தவர். அவர் பெயரில்(ஆர்.கே தவான்) ஒரு மத்திய அமைச்சரும் இருந்தார். ஆனால் இருவரும் வேறு,வேறு. மிக்க நன்றி.

இரசிகை said...

nantru......!

"உழவன்" "Uzhavan" said...

ராமலக்ஷ்மி., ஹுஸைனம்மா, அமுதா, Chitra, ஹேமா, அமிர்தவர்ஷினி அம்மா, விநாயகமுருகன், சே.குமார், பித்தனின் வாக்கு, இரசிகை
அனைவருக்கும் நன்றி