Tuesday, November 24, 2009

இனிச்ச மரம்

எங்கள் ஊரில் ஒரு பெரிய புளியமரம் இருந்தது. அதற்கு இனிச்சமரம் என்றுதான் பெயர். அந்த மரத்திற்குப் பக்கத்தில்தான் நான் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு படித்த காலத்தில், எல்லா சிறுவர் சிறுமியர்களுக்கும் பள்ளி நேரம் தவிர்த்த ஏனைய பகல் பொழுதுகள் எல்லாம் இந்த மரத்தடியில்தான். ஆரம்பக் கல்விக்குப் பின்னர் வேறுவேறு ஊர்களுக்குப் படிக்கச் செல்லும் நிலை ஏற்பட்டதால் முன்பு போல் இந்த மரத்தடிக்குச் செல்ல முடியாமல் போனது. எப்போதாவது விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டுக்கு வரும்போது, இந்த இனிச்சமரத்தடிக்குச் செல்வதுண்டு. மரத்தடியிலும் கிளைகளின் மீது ஏறியும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களைக் கண்டு, தன் பழைய நினவுகளை அசைபோட்டுக்கொண்டே, காற்றிற்கு ஏதாவது பழம் விழுந்து கிடந்தால் எடுத்துச் சுவைத்துக்கொண்டு, பெருத்த மரத்தின் வேர்ப் பகுதியில் சிறிது நேரம் உட்காருவதுண்டு. சில நேரங்களில் மரத்தின் கிளைகளிலும்.

சென்னைக்கு வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டதால், அங்கெல்லாம் இப்போது செல்வது ஏறக்குறைய நின்றே போய்விட்டது. ஊருக்குப்போவதே வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைதான் என்றிருக்கும்போது இனிச்ச மரமெல்லாம் நினைவில் கூட இருப்பதில்லை.

போன வாரம் நண்பனொருவன் திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எதிரே இருந்தவர் பரிமாறியவரைப் பார்த்து "என்ன மாப்ளே.. ரசத்துல புளிப்பே இல்ல. இனிச்சமரத்துப் பழம் போட்டாதான் புளிப்பே இருக்காது. ஆனா இப்ப இனிச்ச மரத்துப் பழமும் ஊருல இல்ல. பின்ன எப்படி ரசம் இப்படி இருக்கு" எனக் கேட்டார்.

"அட.. நம்ம இனிச்சமரம். இப்ப பழம் வேற இல்லேனு சொல்றாரு. அவ்வளவு வயசாச்சா அதுக்கு. போகும்போது பார்த்துவிட்டுதான் போகனும்" என முடிவு செய்தபின், பால்ய கால ஞாபகங்களோடு மரத்தின் திசைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


"சாய்ங்காலம் பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்ட பாத்து வர்றதில்லை; பையைக்கூட வீட்டுல வைக்காம அப்படி என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு; ஓடுல வீட்டுக்கு" இனிச்ச மரத்திற்கே வந்து அடித்து அம்மா எத்தனை முறை அழைத்துப் போயிருப்பாள். பள்ளியிலிருந்து நேராக இங்கு ஓடி வந்து பழங்களையும், ஒதக்காய்களையும் பொறுக்கி கால்சட்டையின் இரண்டு பைகளையும் எத்தனை முறை நிறைத்திருப்பேன். ஒதக்காய் என்று சொல்லக்கூடிய பாதி மட்டுமே பழுத்த அந்த பழத்தின் ஒட்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து, ஒவ்வொரு கொட்டையாகக் கடித்து சப்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நம்மால் அவனிடன் கொஞ்சம் கேட்காமல் இருக்கவே முடியாது. அவனிடம் கெஞ்சி வாங்குவதற்குள் இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்.

காமராஜ் கொஞ்சம் வித்தியாசமானவன். இனிச்சமரத்துப் பழங்களைப் புத்தகப் பைக்குள் வைத்திருந்து, பதினோரு மணிக்கு விடப்படும் பத்து நிமிட இடைவேளையின் போது, ஒரு பழம் ஐந்து பைசா என்று விற்பான். அதுவும் விற்றுத் தீர்ந்துவிடும்.

எல்லாக் காலங்களிலும் புளியமரம் காய்ப்பதில்லை. இருப்பினும் மரத்தில் ஏறி விளையாட, கோலி, பம்பரம், ஊஞ்சல் என எல்லாவற்றிற்கும் எங்களுக்கு இந்த இனிச்சமரம்தான். "பள்ளிக்கூடத்த இனிச்ச மரத்துக்கு மாத்திட்டாங்களா?" என்று சொல்லுமளவிற்கு ஒட்டு மொத்த பள்ளிக்கூடமே மாலை வேளையில் இங்குதான் இருக்கும்.

பின்னால் இருந்து வந்த சைக்கிளின் மணியோசை, என் மனதினுள் விண்டோஸ் மீடியா பிளேயரில் ஓடிக்கொண்டிருந்த பழைய நினைவுகளை pause செய்தது. திரும்பிப் பார்த்தால் காமராஜ். "என்ன காமராஜ் புளி வியாபாரமா?" சைக்கிள் கேரியரைப் பார்த்துக் கொண்டே கேட்டேன். "ஆமாம்பா.. புளியோ பூண்டோ எது கெடச்சாலும் விக்க வேண்டியதான" சொல்லிக் கொண்டே சென்றுகொண்டிருந்தான் அதே காமராஜ்.

இதோ வந்துவிட்டது; பால்காரர் வீட்டை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பினால் இனிச்சமரம் கண்ணில் பட்டுவிடும். சற்று வேகமாகவே கால்கள் இயங்குகின்றன. "ஆஹா.. மரத்தக் காணோமே; அந்த இடத்துல பெரிய கட்டடம் ஒன்னு இருக்கு" இயங்கிய கால்கள் தயங்கி நிற்கின்றன. இனிச்சமரத்தையே வெட்டும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் வந்தது. அப்படி அது என்ன கட்டடம் என்றுதான் பார்த்து விடுவோமே என எண்ணியவாறே மெதுவாய் நடக்கிறேன். "பிரபாத் மேச் பாக்டரி" என எழுதப்பட்ட போர்டு இப்போது தெளிவாகத் தெரிகிறது. எட்டயபுரத்தில் தானே இந்த தீப்பெட்டி ஆபீஸ் இருந்தது. இப்போது இங்கும் ஆரம்பித்திருக்கிறார்களா. அருகினில் சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறேன். இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.

உழவன்

31 comments:

S.A. நவாஸுதீன் said...

இனிச்ச மரம், இனிமையான நினைவுகள் உழவரே.

//அருகினில் சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறேன். இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.//

இறுதியில், மனதில் ஒரு இனம்புரியாத வெறுமையை ஏற்படுத்திவிட்டீர்கள்.

Anonymous said...

//இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.// - TOUCHING... :(

VERY NICE STORY..

க.பாலாசி said...

ஒவ்வொருத்தருக்கும் சொந்தஊரில் இப்படி சொந்தங்கள் இருக்கிறது மரங்கள் வடிவில். கடைசியா முடிச்சீங்க பாருங்க...செம டச்...

PPattian said...

//இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்//

இதை படிக்கும்போது நான் கூட

சுவையான நினைவுகளும்.. சற்றே எதிர்பார்த்த ஆனாலும் சோகமான முடிவும்..

மாதேவி said...

இனிச்சம் பழத்தை சுவைத்து வந்த எங்களுக்கு முடிவில் சோகம் நெஞ்சில் அடித்தது.

ராமலக்ஷ்மி said...

அருமையான நடை. இனிமையான நினைவுகள். என் இரண்டாம் வகுப்பறைக்கு முன் இருந்த புளிய மரமும் [புளியம் பூவையும் சேகரிப்போம். அதுவும் ஒரு சுவை], வீட்டுக்குப் பின்னிருந்த அரசமரமும் நினைவுக்கு வருகையில் எல்லாம் நெருக்கமாகத் தோன்றுபவையாகும். நல்ல பகிர்வு உழவன்.

கலகலப்ரியா said...

:-) அருமை..! அழகான இடுகை..!

ஆ.ஞானசேகரன் said...

//எட்டயபுரத்தில் தானே இந்த தீப்பெட்டி ஆபீஸ் இருந்தது. இப்போது இங்கும் ஆரம்பித்திருக்கிறார்களா. அருகினில் சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறேன். இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.//


ஆகா அழகான நினைவுகள்... கடைசியில் மனதில் வலிகளோடு வெறுமை...

என் இடுகை நேரம் இருந்தால் பாருங்கள் நண்பா..

என்மீது கல்லெறிந்தவர்கள்-புளியமரம்

விஜய் மகேந்திரன் said...

katturai miga nanraga irundadu,nenngal engu irukkurerkal my no 9444658131

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுவாரஸ்யமா படிச்சிட்டே வந்து கடைசியில் :(

மதார் said...

எங்கள் வீட்டு மரத்தின் புளியும் இனிப்பாக இருக்கும் அதன் சுவைக்கு எங்கள் ஊரே அடிமை . உங்கள் பதிவை படிக்கும்பொழுது என் சின்ன வயது குறும்பு என் மரத்தோடு நான் விளையாடியது நினைவில் வந்து சென்றது . எங்கள் மரத்தின் ஒரு ஒரு கிளையின் நுனியிலும் நான் சென்று பறித்த பழங்கள் ..................முடிவில் மனம் கனத்துவிட்டது . என்று ஒழியும் இந்த நிலை ?

Anonymous said...

சுகமான பயணம் சுமையான முடிவு...இனிச்ச மரத்தின் நினைவுகள் புளிக்கவில்லை இனித்தது கண்களோ பனித்தது..

Abbas said...

மரத்த வெட்டுனவன் நல்லாதான் யோசிச்சு இருக்கான்
வெட்டினத எரிப்பதற்கு தீக்குச்சி வேண்டாம்.....

முதல்ல அங்க ஒரு தீ குச்சி வாங்கி
Right To Education பில்ல கொளுத்தனும்...

thiyaa said...

சோகமான முடிவு

"உழவன்" "Uzhavan" said...

@S.A. நவாஸுதீன்
நன்றி தோழா :-)
 
@Sachanaa
நன்றி
 
@PPattian : புபட்டியன்
நன்றி
 
@க.பாலாசி
நன்றி பாலாஜி
 
@மாதேவி
நன்றி
 
@ராமலக்ஷ்மி
புளியம்பூவைக் கூட விடுறதில்லையா? பொண்ணுங்கன்னாலே இப்படித்தானோ :-))) கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி
 
@கலகலப்ரியா
நன்றி ப்ரியா
 
@நன்றி தமிலிஷ்
 
@ஆ.ஞானசேகரன்
நன்றி நண்பா.. ஏற்கனவே உங்களின் இந்த இடுகையைப் படித்துள்ளேன். அருமை
 
@vijay mahindran
என் அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து என்னோடு பேசியமைகண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றி நண்பா.
அகநாழிகையில் இடம்பெற்ற உங்கள் கதை மிக அழகு. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள் :-)
 
@அமிர்தவர்ஷினி அம்மா
தொடர்ந்து தரும் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :-)
 
@மதார்
உங்கள் வீட்டு புளியமரக் கதையைப் பகிர்ந்தமைக்கும், தங்களின் முதல் வருகைக்கும் நன்றி.
 
@தமிழரசி
நன்றி தமிழம்மா :-)
 
@Abbas
கருத்துக்கு நன்றி அப்பாஸ்
 
@தியாவின் பேனா
நன்றி

Anonymous said...

few tears dont know why...but hurts a lot

ஹேமா said...

நினைவலைகள் தொடங்கி அடிக்க அதில் நானும் சிக்கிகொண்டேன்.
கடைசியில் நெகிழ்வோடு முடித்துவிட்டீர்கள்.அதுவும் சிறுவர்களோடு அங்கே !

நிலாமதி said...

என் வாழ்விலும் எங்கள் ஊரிலும் ஒரு புளிய மரம் .கோவிலுக்கு அண்மையில் இருந்தது ....இனிக்கும்நினைவுகளை மீடியது . அந்த செம்பழம்( ஓதக்காய்) இருகிறதே அதை நானும் அனுபவித்திருக்கிறேன். நாவில் இப்பவும் ஜாலம் ஊற வைத்து விடீர்கள்.எங்களுக்கு ( நாங்க பொட்டை பசங்க)முடியாது எங்கள் வயது அண்ணா தம்பிமார் உலுப்பி கீழே விழபொறுக்கி சாப்பிடும் அழகு ...அடடா மீண்டும் என் கிராமத்துக்கு போகணும் .நான் இடம் பெயரும் போது அது கோறை விழுந்து பட்டு விட்டது . நீண்ட ஆயுள் ஐம்பது வருடங்கள் இருக்கும்

அமுதா said...

இனிச்ச மரம் எனது புளிய மர நினைவுகளைக் கிளறியது.

/*இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.
*/
:-( இப்படி முடியும் என எதிர் பார்க்கவில்லை... வருத்தமாக இருந்தது

"உழவன்" "Uzhavan" said...

@Anonymous
நன்றி.. பேரைச் சொல்லியிருக்கலாமே..
 
@ஹேமா
நன்றி ஹேமா
 
@நிலாமதி
உங்களின் அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள். நன்றி
 
நன்றி அமுதா மேடம்

கமலேஷ் said...

நல்லா அனுபவங்கள்...
நல்லா நேர்த்தியான எழுத்துக்கள்..
ரசிக்க முடிகிறது.....

"உழவன்" "Uzhavan" said...

நன்றி கமலேஷ்

anujanya said...

எல்லோருக்கும் நேரும் அனுபவங்கள். அழகாக, எளிமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து, நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள் நண்பா.

அனுஜன்யா

"உழவன்" "Uzhavan" said...

//அனுஜன்யா
எல்லோருக்கும் நேரும் அனுபவங்கள். அழகாக, எளிமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து, நிறைய வாசித்து, நிறைய எழுதுங்கள் நண்பா.
அனுஜன்யா //
 
உங்களின் திடீர் வருகையால் மகிழ்ந்துபோனேன் ஜி.. நன்றி
நிறைய எழுத முயற்சிக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

நண்பரே,

அருமையான இடுகை.
உங்களுக்கு புளியமரமென்றால் எங்களுக்கு பள்ளிக்கு எதிரிலேயே இருக்கும் வேப்ப மரம்.அதையும் வெட்டிவிட்டார்கள்.

//ஒதக்காய் என்று சொல்லக்கூடிய பாதி மட்டுமே பழுத்த அந்த பழத்தின் ஒட்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து, ஒவ்வொரு கொட்டையாகக் கடித்து சப்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நம்மால் அவனிடன் கொஞ்சம் கேட்காமல் இருக்கவே முடியாது. அவனிடம் கெஞ்சி வாங்குவதற்குள் இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்.
//

ஒதக்காய் ருசியை எழுத்தை படிகும்போதே உணர்ந்தேன்.எங்க ஊரில் இதை செங்காய் என்போம்.


இந்த அனுபவ பகிர்வை அழகான சிறுகதையாக்கியிருக்கலாம்.பாதி இடுகைக்கு மேல் கதை போலவே நகர்த்தி இருக்கின்றீர்கள்.அதையே முழுமை படுத்தியிருந்தால் மிகச் சிறப்பான படைப்பாக இருந்திருக்கும்.

நாடோடி இலக்கியன் said...

மன்னிக்கவும் நண்பரே லேபிளை இப்போதுதான் கவனித்தேன்.

சிறுகதை என்ற அளவில் பார்த்தால்,

//காமராஜ் கொஞ்சம் வித்தியாசமானவன்//

என்று ஆரம்பிக்கும் பாராவிலிருந்தே ஒரு சிறுகதைக்கான அம்சம் ஆரம்பமாகிறது என்பது என் எண்ணம்.மேலும் உங்களின் பழைய இடுகை ஒன்றில் சென்னையில் செட்டிலாகி சொந்த ஊரை மிஸ் பண்ணுவதை குறித்த படித்த நினைவு,எனவே இதுவும் அனுப பகிர்வு என்ற எண்ணத்திலேயே படித்துவிட்டேன்.

"உழவன்" "Uzhavan" said...

@நாடோடி இலக்கியன்
 
////காமராஜ் கொஞ்சம் வித்தியாசமானவன்//

என்று ஆரம்பிக்கும் பாராவிலிருந்தே ஒரு சிறுகதைக்கான அம்சம் ஆரம்பமாகிறது என்பது என் எண்ணம்//
 
உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.. நானும் இது போன்ற என்னை நெறிப்படுத்த உதவும் கருத்துகளையே எதிர்பார்க்கிறேன்.. மிக்க மகிழ்ச்சி.
எனக்கும் லேபிள் போடுவதில் சற்றுக் குழப்பம் இருந்தது. அனுபவம் என்று போட்டிருக்கலாம். ஆனால் இதற்கு சிறுகதை என்று போடுவதற்கு ஒரேயொரு காரணம், இன்னும் அந்த இடத்தில் இனிச்சமரம் கம்பீரமாக இருக்கிறது.
 
அந்தக் கதாபாத்திரத்திற்கு "காமராஜ்" என்று பெயர் வைத்ததற்கே காரணம் உள்ளது. பெரும்பாலும் தென்மாவட்டதுக்காரர்களுக்குப் புரிந்திருக்கலாம் :-)
 
//ஒதக்காய் ருசியை எழுத்தை படிகும்போதே உணர்ந்தேன்.எங்க ஊரில் இதை செங்காய் என்போம்.//
 
செங்காய்.. பெயர் அழகாக உள்ளது. நான் ஒதக்காய் என்பதற்கான விளக்கத்தைக் கொடுப்பதற்கும் இதுதான் காரணம்; ஒவ்வொரு ஊர்களிலும் வேறுவேறு பெயர்கள் இதற்கு இருக்கலாம். ஒதக்காய் என்று மட்டும் நான் சொல்லி, அது நிறையப் பேருக்கு புரியாமல் போய்விடக்கூடாதல்லவா.
 
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் நாடோடி இலக்கியன்

Jayadev Das said...

இந்தக் கதை ஆரம்பிக்கும் போதே எதிர் பார்த்தேன், முடிவில் அந்த மரம் இருக்காதென்று. இது நிஜத்தில் நடக்கும் வேதனையான விஷயம். இயற்க்கை அன்னையை கொன்று போட்டுவிட்டு கம்பியூட்டர் காதலிக்கு அவளது இதயத்தை பரிசாக கொடுக்க ஓடிக்கொண்டிருக்கிறோம், சீக்கிரம் இடறிவிழுந்து செத்துப் போவோம், அதற்குள் நின்று நம் அன்னையை சாவின் விளிம்பிலிருந்து காப்போமா? நினைத்தால் கண்ணீர் வருகிறது.

ALHABSHIEST said...

"ஒவ்வொரு கொட்டையாகக் கடித்து சப்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நம்மால் அவனிடன் கொஞ்சம் கேட்காமல் இருக்கவே முடியாது. அவனிடம் கெஞ்சி வாங்குவதற்குள் இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்".எச்சி ஊற வச்சிட்டியளே

RAJESH KANNAN said...

Super Machan...




Rajesh Kannan

RAJESH KANNAN said...

Super Machan...




Rajesh Kannan