Wednesday, November 4, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர்பதிவு

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?

பெயரில் மட்டுமல்ல; அடிப்படையில் நான் ஒரு உழவன். அவ்வளவே!
(நல்ல வேளை "சிறு" குறிப்பு என்று கேட்டீர்கள்)

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?

நான் ஒரு ரெட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் அது சற்று விலையுயர்ந்ததாக இருந்திருக்குமென நினைக்கிறேன். சில்வர் கலர்; நல்லா வெயிட்டாகவும் சற்று பெரியதாகவும் இருக்கும். அதில் ரோல் வெடியைச் லோடு செய்து விட்டு வெடிக்க ஆரம்பித்தால், ஒரே டமால் டமால் தான். எதுவும் மிஸ் ஆகாது. எனக்கு மிகவும் பிடித்த துப்பாக்கி அது. இரண்டு மூன்று வருடமாக அதை வைத்திருந்த ஞாபகம்.

எட்டோ ஒன்பதோ படிக்கும்போது என நினைக்கிறேன். என் அத்தை பையன் ஒருத்தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தான். எங்கள் வீட்டிலுள்ள ஒரு ரூமில் அடுக்குப் பானை இருக்கும். ஒவ்வொரு பானையிலும் ஊறுகாய், முருங்கை விதை, ஆமணக்கு முத்து.. இப்படி எதாவது ஒன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு பானையில்தான் இந்த துப்பாக்கியை வைத்திருப்பேன்.

இவன் கண்ணுல எப்படி அந்த துப்பாக்கி பட்டதுனு தெரியல. எனக்கு அந்த துப்பாக்கிதான் வேணும்னு ஒரே அழுகை. நான் விடுவேனா என்ன. அந்த துப்பாக்கியைத் தரமாட்டேன்னு நானும் அடம் பிடிச்சு அழுகிறேன். அவன் என்னை விட சின்னப் பையன் வேற. அதனால அவனுக்குததான் சப்போர்ட் அதிகமா இருக்கு. என்ன எப்படி சமாதானப் படுத்துனாங்கனு சரியா ஞாபகம் இல்ல. கடைசியில அவந்தான் ஜெயித்தான். இப்பவும் தீபாவளிக்கு அந்த ரெட்டைக் குழல் துப்பாக்கியை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை.

டிஸ்கி: இவனை மாதிரியே நானும் இன்னொரு சொந்தக்காரங்க வீட்டுக்கு கெஸ்ட்டா போனபோது, அவங்க எனக்குக் கொடுத்தது :-)

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

என் சொந்த ஊரில் தான் :-)

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?

தற்போது இருக்கும் சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டம் வெகு சிறப்பாகவே இருக்கும். அதற்கு சாட்சியாக நான் கண்டது வெடிகள்தான். தீபாவளிக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னரிலிருந்தே எங்கு பார்த்தாலும் வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

ஆனால் எனது கிராமத்தில் இருக்கும்வரை இந்த தீபாவளியை ஒரு பெரிய பண்டிகையாகக் கருதியதே கிடையாது. நகரப் பக்கம் வந்த பின்புதான் ஓ.. இந்த அளவிற்கு தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்களா என்று வியந்தேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. தீபாவளிக்குத்தான் கிட்டத்தட்ட எல்லா தொழிலாளர்களுக்குமே போனஸ் கிடைக்கிறது. அதனால்தான் மற்ற பண்டிகைகளைவிட இது சற்று செழிப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் கூட போனஸ் வாங்குகிற குடும்பங்களில் மட்டும்தான் புத்தாடை இருக்கும்.

நன்கு மழை பெய்து, விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் இந்த தீபாவளிப் பண்டிகை வரும். தீபாவளியன்று காலையில் இட்லியைத் தின்றுவிட்டு, அதையே தூக்குவாளியில் மத்தியான சாப்பாடாக எடுத்துக்கொண்டு, உழுவதற்கும், களையெடுப்பதற்கும் காடுகளை நோக்கி என் மக்கள் விரைந்து கொண்டிருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் காட்டிற்குச் சென்ற பின்பு, அவர்கள் கொடுத்து சில சில்லறைக் காசுகளூக்கு வெறும் பொட்டு வெடியை மட்டுமே வாங்கி வெடித்து விட்டு, வேறு யாராவது போடும் வெடிகளின் சத்தங்களை மட்டுமே கேட்டு மகிழ்ந்து கொண்டு, தீபாவளியை நிறைவு செய்யும் குழந்தைகள் இன்னமும் கிராமங்களில் இருக்கிறார்கள்.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?

தீபாவளி நேரத்தில் தி.நகரின் கூட்ட நெரிசலை நினைத்துப் பார்த்தேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கினால் போதும்; நம்மை தீபாவளிக்கூட்டமே அழைத்துக்கொண்டுபோய் ரங்கநாதன் தெருவில் விட்டுவிடும். அதனால் புத்தாடை எடுக்கவில்லை. இருந்தாலும் அகமதிக்கு எடுக்கவேண்டுமே. என் வீட்டின் அருகிலுள்ள ஒரு சிறிய கடையிலேயே அவளுக்கு மட்டும் ரெண்டு ட்ரெஸ் எடுத்தோம். அப்போது மனைவியும் புத்தாடை எடுத்துக்கொண்டார்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

முறுக்கு, முந்திரிக்கொத்து, பாசிப் பருப்பு உருண்டை.. அதிரசம் செய்வதற்கான ராமெட்டீரியலில் ஒரு சின்ன டெக்னிக்கல் ப்ராபிளம். சோ அதிரசம் கேன்சல்.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

அமிர்தவர்ஷினி அம்மா அளித்த பதிலையே இந்த இடத்திலும் போட்டுக்கொள்ளவும்.

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் தான். ஆனால் என்னையே தொலைக்கின்ற அளவிற்கு எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நண்பர்கள் பத்து பதினைந்து பேர் சேர்ந்துவிட்டால் பெரும்பாலும் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்க செல்வதுண்டு. தொடர்ந்தாற்போல் இரண்டு படங்களையெல்லாம் பார்த்த அனுபவமும் உண்டு. இந்த தீபாவளிக்கு படம் பார்க்க செல்லவில்லை.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

சொல்லிக்கொள்ளும் அளவில் அப்படி பெரிதாய் எந்த உதவியும் யாருக்கும் செய்யவில்லை.

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

முத்துச்சரம் ராமலட்சுமி
அம்மா அப்பா ஞானசேகரன்
என் வானம் அமுதா
மனவிலாசம் நவாஸ்


"அகமதியோடு கொண்டாடிய தீபாவளியைப் பற்றி சொல்லுங்க" என அன்போடு என்னை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்காகவும், மற்றும் "Scrumptious blog award" கொடுத்து தனது மேலான அன்பினைப் பகிர்ந்து கொண்டமைக்காகவும் "அமிர்தவர்ஷினி அம்மா" வுக்கு நன்றிகள்.


அகமதியோடு நாங்கள் கொண்டாடும் முதல் தீபாவளி என்ற ஒரு சந்தோசம் தீபாவளிக்கு முன்னரே இருந்தது. அவள் ஆறு மாதக் குழந்தை என்பதால், பலமாக வெடிக்கும் வெடிகளை வீட்டின் முன்னால் வெடிக்கவில்லை. புஸ்வானம், தரைச்சக்கரம்.. போன்ற வெடிக்காது ஒளி தரும் வெடிகளைக் காட்டலாமென்றால், அதற்கும் வீட்டில் தடா. அதிலிருந்து கண் கூசும் அளவில் வெளிச்சம் வருமாம். மற்றபடி தீபாவளியன்று அவளுக்கு நாங்கள் எடுத்தது போக, எங்கள் வீட்டிலும் எடுத்த எல்லா புத்தாடையையும் போட்டு அழகு பார்த்து, மனம் லயித்து அவளோடு விளையாடிய நினைவுகள் நிறைய! ஒவ்வொருவரும் பெற்றோர்கள் ஆன பின்பு, அவர்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே தங்களது குழந்தைகளுக்காகத்தான். அடுத்த தீபாவளிக்கு அவள் கையில் வெடியைக் கொடுத்து வெடிக்கச் சொல்லவேண்டும்.


அன்புடன்
உழவன்

15 comments:

"உழவன்" "Uzhavan" said...

பதிவு போட கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு என் வலையுலக சொந்தங்களே..

அமிர்தவர்ஷினி அம்மா said...

துப்பாக்கி - அழகான பகிர்வு.

அடுத்தவருஷம் அகமதி கொஞ்சம் பெரியவங்களா ஆகிடுவாங்க. அப்புறம் அவங்களே கேட்டு வாங்குவாங்க எல்லாத்தையும் :)))

விடாது தொடர்பதிவு, மீண்டும் ஒரு தொடர்பதிவு எழுத உங்களை அழைத்திருக்கிறேன்.

:)))

ஹேமா said...

உழவன் இடைவெளிவிட்டுத் தீபாவளியோடு வந்திருக்கிறீர்கள்.பதிவு ரசிக்கக்கூடியதாய் இருக்கு.

ஆ.ஞானசேகரன் said...

இடுகை எதார்த்தமாக இருக்கு,... மேலும் உங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி. இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்ததில் மிக்க மகிழ்ச்சி... நன்றி உழவன்

ஆ.ஞானசேகரன் said...

//அகமதியோடு நாங்கள் கொண்டாடும் முதல் தீபாவளி என்ற ஒரு சந்தோசம் தீபாவளிக்கு முன்னரே இருந்தது.//


அகமதிக்கு அன்பு வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள் உழவன். ரெட்டைக் குழல் துப்பாக்கி உங்களிடம் வந்து சேர்ந்த விதம்தான் சூப்பர்:))!

அழைத்திருக்கும் அன்புக்கு நன்றி!

அகமதிக்கு என் அன்பு.

S.A. நவாஸுதீன் said...

உழவரே என்னையும் அழைத்திருப்பது மகிழ்ச்சி. தீபாவளிக்கு பதிலாக பெருநாள் நினைவுகளோடு வருகிறேன் விரைவில்.
முழுவதும் படிக்கவில்லை. சனிக்கிழமை வந்து படிக்கிறேன். ஆஃபிஸ் நேரம் முடிந்துவிட்டது

பா.ராஜாராம் said...

//எட்டோ ஒன்பதோ படிக்கும்போது என நினைக்கிறேன். என் அத்தை பையன் ஒருத்தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தான். எங்கள் வீட்டிலுள்ள ஒரு ரூமில் அடுக்குப் பானை இருக்கும். ஒவ்வொரு பானையிலும் ஊறுகாய், முருங்கை விதை, ஆமணக்கு முத்து.. இப்படி எதாவது ஒன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு பானையில்தான் இந்த துப்பாக்கியை வைத்திருப்பேன்.//

சித்திரமாக விரிகிறது உழவரே...அருமையான பகிர்வு!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

/டிஸ்கி: இவனை மாதிரியே நானும் இன்னொரு சொந்தக்காரங்க வீட்டுக்கு கெஸ்ட்டா போனபோது, அவங்க எனக்குக் கொடுத்தது :-) //

மிகவும் சுவாரசியமாக இருந்தது உழவர்!

அமுதா said...

சுவாரசியமான பதிவு. அழகான நினைவுகள். "முந்திரிக்கொத்து" ... தெரிஞ்சிருந்தால் வந்திருப்பேனே!!!! எனக்கு ரொம்ப பிடிக்கும். அகமதிக்கு எனது அன்பு. அழைப்புக்கு நன்றி. அடுத்த வாரம் பதிவிடுகிறேன்.

Admin said...

நல்ல பதில்கள்

ஆ.ஞானசேகரன் said...

என் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்

க.பாலாசி said...

//கிராமங்களில் கூட போனஸ் வாங்குகிற குடும்பங்களில் மட்டும்தான் புத்தாடை இருக்கும்.//

சரியாகச் சொன்னீர்கள்.

எல்லா பதில்களும் நன்று...

S.A. நவாஸுதீன் said...

மறக்க முடியாத சம்பவம். மலரும் நினைவுகள். அழகா சொல்லி இருக்கீங்க உழவரே

"உழவன்" "Uzhavan" said...

அமிர்தவர்ஷினி அம்மா
ஹேமா
ஆ.ஞானசேகரன்
ராமலக்ஷ்மி
S.A. நவாஸுதீன்
பா.ராஜாராம்
-Tamilish Team
ஜெஸ்வந்தி
அமுதா
சந்ரு
க.பாலாசி

அனைவருக்கும் நன்றி