Tuesday, September 15, 2009

எங்க ஊரு பொங்கலு

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குக் கொண்டாட்டம்தான். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா அம்மன்களுக்கும் அந்தந்த சம்பிரதாயங்களின் பிரகாரம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். அம்மன் கோவில் திருவிழாவில், கூழ் ஊற்றுதல் என்பதை நான் சென்னையில்தான் அறிந்தேன். எங்கள் தென்மாவட்டங்களில் இந்த கூழ் ஊற்றுதல் இருப்பதாக அறிந்ததில்லை. சென்னை போன்ற நகரங்களில் நடைபெறும் இதுபோன்ற விழாக்களில், சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வாழ்க்கைக்காக வந்து குடியேறிய பெரும்பான்மையான மக்களின் ஈடுபாடு மிகக் குறைவாகவே இருக்கும். அதுவும் நகரத்தின் வேகத்திற்கேற்றவாறும், நகரக் கலாச்சாரத்திற் கேற்றவாறும்தான் இந்த பொங்கல் விழாக்கள் நடைபெறுமேயொழிய, கிராமங்களில் நடைபெறுவதுபோல் ஊர்சாட்டி, தலைக்கட்டு வரி வைத்து, வேப்பிலைக் காப்பு கட்டி, முளைப்பாரி வைத்து... இப்படியெல்லாம் நடைபெறுவது கடினமே.

பிள்ளையார் கோவில் ஒன்று புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால், வழக்கத்தைவிட சற்றுக் குறைவான பட்ஜெட்டில், சமீபத்தில் எங்கள் ஊர் காளியம்மன் கோவில் பொங்கல் விழாவானது சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது. அந்த விழாவின் ஹைலைட்ஸ்தான் இங்கே..

காலையில் கோவிலின் முன்பாக அக்னி சட்டி வளர்த்து, அத்தீச்சட்டியோடு ஊரில் இருக்கும் எல்லா வீடுகளுக்கும் சாமி ஊர்வலம் படி வாங்கப் போவதும், அந்தந்த வீடுகளில் உள்ளோர்க்கு திருநீரு கொடுத்து, தேவைப்பட்டால் நேர்த்திக்கடன் போடுவதும் வழமை. அக்னிசட்டி எடுத்து ஆடுகின்ற சாமிகள் ஒரு வாரகாலம் அம்மனுக்கு விரதம் இருந்து, பொங்கலன்று ஊர்சுற்றி முடித்தபின்பு, மீண்டும் அக்னிசட்டியை கோவிலில் கொண்டு இறக்கிவைத்த பின்பு தங்களது விரதத்தை நிறைவு செய்வர்.

ஒருமுறை இப்படித்தான், ஒரு சாமியானது காவல்காரர் வீட்டு முன்னால சாமியாடி குறி சொல்லுச்சு. கிராமங்களில்தான் யார் யார்க்கு என்ன பிரச்சனைனு எல்லோருக்குமேதான் தெரியுமே. குறி சொன்ன அந்த சாமி, உனக்கு இந்தப் பிரச்சனை இருக்கு; அடுத்த வருஷம் எனக்கு மொட்டை போட்டு கெடா வெட்டு; எல்லாத்தயும் நான் சரிபண்ணிக் கொடுக்கேன்னு சொல்ல, அந்த வீட்ல ஆட்கள் நிறைய; கூட்டுக்குடும்பம். அதனால அந்த வீட்டுக்காரர் யாரு சாமி மொட்டை போடனும்னு கேட்க, சாமியோ காவக்காரு மாமாதான் போடனும்னு சொல்லவும், சாமிக்கு எப்படிடா மாமா மச்சான்லாம் தெரியுதுனு கூடியிருந்தவங்க எல்லாரும் சிரிச்சு சாமிய கேலிபண்ண ஆரம்பிச்சிட்டாங்க.பொங்கல் தினத்தன்று இரவு இளைஞிகளின் முளைப்பாரி கும்மி நடைபெறும். முளைப்பாரி தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்த ஒரு பெண்ணிடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் ஒரு வார காலத்திற்கு முன்பே முளைப்பாரி போட தயாராகிவிடுவார்கள். முக்கியமாக இந்தப் பொறுப்பை ஏற்கும் பெண்மணி மிகவும் சுத்தமாகவும், பயபக்தியோடும் இருக்கவேண்டும் எனக் கூறுவர். இதற்காகவே இந்தப் பொறுப்பை மாதவிடாய் நின்றுபோன முதியவர்கள்தான் இதனை ஏற்றுக்கொள்வர். சூரிய ஒளி புகாத ஒரு சிறு அறையில், நவதானியங்களைப் போட்டு என்னதான் பய பக்தியோடு முளைக்கவைத்தாலும் ஒரு சில முளைப்பாரிகளே நல்ல உயரமாக வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும் எனபது வேறுவிடயம். இப்படி வளர்க்கபட்ட முளைப்பாரிகளை வண்ணத்தாள்களால் அலங்காரம் செய்து, மொத்தமாய் ஒரு இடத்தில் வைத்து, அதனைச் சுற்றிலும் பெண்கள் நின்றுகொண்டு பாடலுக்கேற்றவாறு கும்மி ஆசிரியரின் துணைகொண்டு கும்மி அடிப்பார்கள். கோலாட்டம். கரகாட்டம், கயிறுஆட்டம் என கும்மியிலும் பலவகை உண்டு. கும்மி அடிக்கும் பெண்களைப் போட்டோ எடுக்க கூடாது என்ற விதி இருப்பதால் என்னால் க்ளிக்க இயலவில்லை.

கவர்ச்சிகர சினிமாக்களாலும், நாடகமெனும் பெயரில் வீட்டுக்குள் வரும் தொலைக்காட்சித் தொடர்களாலும் மேடைநாடகங்களின் வாழ்நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறதோ என்று அதன் விசிறிகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும், இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் புராண நாடகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன என்ற செய்தி மகிழ்வையே தருகிறது.

ஆண்டுதோறும் ஒரு நாள் நிகழ்ச்சியாக எனது கிராமத்தில் புராண நாடகம் நடைபெறுவது வழக்கம். அரிச்சந்திர மயான கண்டம், வள்ளி திருமணம், வீரபாண்டிய கட்டபொம்மன், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி என்பன போன்ற பல புராண நாடகங்கள் இதுவரை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த நாடகங்களைக் காண்பதற்கு நாம் ஒரு முழு இரவையும் காணிக்கையாக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ நாடகம் முடியும் தருவாயில், ஒரு ஐம்பது பேராவது பார்வையாளராக இருந்தால் அதுவே பெரிய விசயம். இன்னொரு நாளில் நடைபெற்ற "ஆடல் பாடல்" நடன நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தில் நான்கில் ஒரு பகுதியினரே இந்த நாடக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இந்த ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடைபெற்றது
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குபெறக்கூடிய வகையிலான பல வித விளையாட்டுப் போட்டிகளை வழமைபோல் சிறப்பாக நடத்தி முடித்து, அதற்கான பரிசளிப்பு விழாவானது நிறைவுபெற்ற பின்பு, அடுத்த நிகழ்ச்சியான ஆடல் பாடல் தொடங்குவதற்கு முன்னர் கிடைத்த 2 மணி நேரத்தில் "தொலைக்காட்சித் தொடர்கள் குடும்பங்களைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?" என்ற தலைப்பில் ஒரு சிறு பட்டிமன்றமானது நடைபெற்றது. இந்தப் பட்டிமன்றத்துக்கு என்னை நடுவராகப் பொறுப்பேற்க வைத்து என்னை வியப்பில் ஆழ்த்தினர். விழாக்குழுவினருக்கு நன்றிஅனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அன்பு நண்பர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்!

மகிழ்வுடன்
உழவன்

19 comments:

ராமலக்ஷ்மி said...

//இந்தப் பட்டிமன்றத்துக்கு என்னை நடுவராகப் பொறுப்பேற்க வைத்து//

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

கிராமத்து வழக்கங்களை அழகாய் விவரித்திருக்கிறீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல ஊரா இருக்கு உங்க ஊரு..
ஊருக்காரவங்க ரொம்ம்ம்ம்ம்ப நலல்வங்களும் போல:)

நடுவரா இருந்ததுக்கு வாழ்த்துக்கள்..

பித்தன் said...

ரொம்ப நல்லாருக்கு, இந்த மாதிரி திருவிழா பார்த்து ரொம்ப வருசம் ஆச்சு, எங்க இப்ப எல்லாம் அந்த பாய்ஸ், இந்த பாய்ஸ்னு ஒரே சினிமாப் பாட்டு தான் டான்ஸ்தான் ஆடறாங்க(கன்றாவி). எல்லாம் சரி பட்டிமன்ற நடுவர்தான் இடிக்குது, "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு".

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

//கவர்ச்சிகர சினிமாக்களாலும், நாடகமெனும் பெயரில் வீட்டுக்குள் வரும் தொலைக்காட்சித் தொடர்களாலும் மேடைநாடகங்களின் வாழ்நாள் சுருங்கிக்கொண்டிருக்கிறதோ//

இது என்னவோ உண்மை நண்பரே, எனது பள்ளி நாட்களில் இது போன்ற பொங்கல் திருவிழாக்கள் எங்கள் கிராமங்கள் பக்கம் வெகு விமர்சையாக நடைபெறும், கண்டு ரசித்தது உண்டு, தற்பொழுது மிக மிகக் குறைந்தே காணப்படுகிறது.

நாடோடி இலக்கியன் said...

அருமையா சொல்லியிருக்கீங்க.

கோலாட்டம்,கும்மியெல்லாம் எங்க ஊரில் இப்போ இல்லை.மீண்டும் அதையெல்லாம் பார்க்க முடியுமான்னு தெரியல.

சிறுகதை பட்டறைக்கு வந்திருந்தீர்களோ?

ஹேமா said...

அழகான திருவிழாவும் ஒரு கிராமமும் கொண்டாட்டங்களும் கண்ணில் வந்து போனது.அதோடு கலந்துகொண்டது போல பிரம்மையும் கூட.

வித்யா said...

நல்ல கவரேஜ். என்ன தீர்ப்பு சொன்னீங்க?

குடந்தை அன்புமணி said...

ஊர்த்திருவிழாவை நேரில் கண்டது போலிருந்தது உங்கள் எழுத்து நடை. அதுசரி தீர்ப்பு என்ன சொன்னீங்க?

" உழவன் " " Uzhavan " said...

/ராமலக்ஷ்மி
//இந்தப் பட்டிமன்றத்துக்கு என்னை நடுவராகப் பொறுப்பேற்க வைத்து//
வாழ்த்துக்கள்.//
 
கிராமத்து வழக்கங்களை அழகாய் விவரித்திருக்கிறீர்கள். //
 
எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆசிகள் மேடம் :-)

" உழவன் " " Uzhavan " said...

//முத்துலெட்சுமி/muthuletchumi
ரொம்ப நல்ல ஊரா இருக்கு உங்க ஊரு..
ஊருக்காரவங்க ரொம்ம்ம்ம்ம்ப நலல்வங்களும் போல:)
நடுவரா இருந்ததுக்கு வாழ்த்துக்கள்.. //
 
ஆமா.. அவ்ளோ நல்லவங்க நாங்க :-)
நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//பித்தன்
ரொம்ப நல்லாருக்கு, இந்த மாதிரி திருவிழா பார்த்து ரொம்ப வருசம் ஆச்சு, எங்க இப்ப எல்லாம் அந்த பாய்ஸ், இந்த பாய்ஸ்னு ஒரே சினிமாப் பாட்டு தான் டான்ஸ்தான் ஆடறாங்க(கன்றாவி). எல்லாம் சரி பட்டிமன்ற நடுவர்தான் இடிக்குது, "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு".//
 
இடிக்குதா.. என்ன செய்யுறது? கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோங்க.  தீர்ப்ப சொல்லல.. அப்புறம் எங்க மாத்தி சொல்லுறது? :-)

" உழவன் " " Uzhavan " said...

ஷஃபிக்ஸ்/Suffix
இது என்னவோ உண்மை நண்பரே, எனது பள்ளி நாட்களில் இது போன்ற பொங்கல் திருவிழாக்கள் எங்கள் கிராமங்கள் பக்கம் வெகு விமர்சையாக நடைபெறும், கண்டு ரசித்தது உண்டு, தற்பொழுது மிக மிகக் குறைந்தே காணப்படுகிறது. //
 
ஆம் நண்பா.. ஆனாலும் இன்னும் கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

" உழவன் " " Uzhavan " said...

//நாடோடி இலக்கியன்
அருமையா சொல்லியிருக்கீங்க.
கோலாட்டம்,கும்மியெல்லாம் எங்க ஊரில் இப்போ இல்லை.மீண்டும் அதையெல்லாம் பார்க்க முடியுமான்னு தெரியல.
சிறுகதை பட்டறைக்கு வந்திருந்தீர்களோ? //
 
ரொம்ப நன்றி. ஆம் நான் சிறுகதைப் பட்டறைக்கு வந்திருந்தேன். நம்மலே வரலேனா எப்படி? :-)

" உழவன் " " Uzhavan " said...

//ஹேமா
அழகான திருவிழாவும் ஒரு கிராமமும் கொண்டாட்டங்களும் கண்ணில் வந்து போனது.அதோடு கலந்துகொண்டது போல பிரம்மையும் கூட.//
 
அப்படியா தோழி.. மிக்க மகிழ்ச்சி. நன்றி :-)

" உழவன் " " Uzhavan " said...

//வித்யா
நல்ல கவரேஜ். என்ன தீர்ப்பு சொன்னீங்க? //
 
//குடந்தை அன்புமணி
ஊர்த்திருவிழாவை நேரில் கண்டது போலிருந்தது உங்கள் எழுத்து நடை. அதுசரி தீர்ப்பு என்ன சொன்னீங்க? //
 
ரெண்டு பேருக்கும் நன்றி. தீர்ப்பா? அப்படியெல்லாம் தனியா தீர்ப்புனு எதுவும் இல்ல. நீங்க என்ன சொல்றீங்களோ அதான் தீர்ப்பு.

தமிழரசி said...

ஒரு எட்டு எங்களையும் கூட்டிட்டு போறது....வந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து போயிருப்போம்ல.......

ஆனால் பதிவு நேரில் பார்த்தது போல இருந்தது நிகழ்வுகளை....

அட நடுவரா நாட்டாமை எந்த பக்கம் தீர்ப்பை சொன்னாரு?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தொகுப்புக்கு நன்றி உழவன்

shunmugam said...

ThanK YOU FOR POPULAR MY VILLAGE