Monday, June 1, 2009

சொந்த மண்ணில் ...


வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா !

உழவன்

நன்றி: இக்கவிதையை வெளியிட்ட யூத்ஃபுல் விகடன்

16 comments:

சொல்லரசன் said...

//இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?//

சந்தேகமே!!!//சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா !//

உண்மைதானுங்க,
இயந்திர‌மய‌மான
வாழ்க்கையின் கவிதை

தமிழ் said...

அருமை சொல்லி உள்ளீர்கள்

sakthi said...

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

உங்கள் கவிதையை மிக மிக ரசித்தேன் உழவரே

ராமலக்ஷ்மி said...

விகடனில் பதிந்த கருத்தையே இங்கும் பதிகிறேன்:)!

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் உழவன்!

Anonymous said...

உள்ளத்தின் ஏக்கம் எக்கச்சக்கமாய் வடிந்திருக்கிறது....மாற்று பரிகாரமேயில்லை...வாழ்க்கை என்னும் பையை கையில் ஏந்திக் கொண்டு இருக்கும் வரை....மனசை என்னவே செய்கிறது.....இந்த ஏக்கம் எதை இழந்து எதை அடைந்துக் கொண்டிருக்கிறோம்.....

கார்த்திகைப் பாண்டியன் said...

அழகா உள்ளத்தின் ஏக்கத்தை சொல்லி இருக்கீங்க நண்பா.. அருமை.. இன்னைக்கு நெறைய பேரு சொந்த் ஆசைகளை தொலச்சுட்டுத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க? இந்த நிலை மாறுமா?

ஆ.ஞானசேகரன் said...

//சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா !//

அழகு மிக அழகு நண்பா



//சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு//

உண்மையான நிகழ்வுகள்

தேவன் மாயம் said...

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !///

பணத்தைத் தேடியலையும் புலம்பெயர்வு மனித இனத்தின் முக்கியமான ஒன்று!!
அருமையாகச்சொல்லியிருக்கீங்க!!

வியா (Viyaa) said...

கவிதை மிகவும் அழகு..
இது தான் எனது முதல் வருகை உங்களின் வலைப்பதிவுக்கு..
கவிதைகள் அனைத்தும் அருமை

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

நச் வரிகள்

"உழவன்" "Uzhavan" said...

நன்றி சொல்லரசன்
நன்றி திகழ்மிளிர்

நன்றி sakthi - என்னை வலைச்சரத்தில் "கவிஞன் உருவாகுகின்றான்" பகுதியில் அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி மேடம்.

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி தமிழரசி
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி thevanmayam
நன்றி வியா (Viyaa) - தங்களின் முதல் வருகை. நன்றி
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா .. என்ன அமித்துமா .. என்ன உங்கள் வரவில் ஒரு சிறு இடைவெளி.. வெளியூர் பயணமா?

வாழ்த்திய அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். தங்களின் வருகையும், கருத்துக்களும் தொடர வேண்டுகிறேன்.

அன்புடன்
உழவன்

பூங்குழலி said...

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
இந்த வரிகளே ஒரு தனி கவிதை போல் இருக்கின்றன

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ

கணினியோடு வாழ்வதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்

"உழவன்" "Uzhavan" said...

@பூங்குழலி

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இக்கவிதையை இப்பொழுதுதான் என்னால் பதிவிட நேர்ந்தது.
மிக்க நன்றி பூங்குழலி உங்களின் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும்!

SUMAZLA/சுமஜ்லா said...

விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

நிச்சயமான வரிகள் மட்டுமல்ல, சத்தியமான வரிகளும் கூட!

///வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !///

சிறு வயது ஞாபகங்களை சொல்லி, ஏங்க வைக்கிறீர்கள், அந்நாட்களுக்கு!

///மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?///

சினிமா பாட்டு போல என்ன ஒரு அழகான சந்தநயம்.

///சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?///

அப்படித்தானே நடக்கிறது, இன்றைய நகர நரக வாழ்க்கையில்!

எதார்த்தத்தை பதிவு செய்யும் விதம், மிக எதார்த்தமாக உள்ளது.

//தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து///

கவிதை இல்லை இது, கவி(தாய்). மனசு வலிக்கிறது, அந்த நாட்களுக்காக ஆசைப்பட்டு!

என்னுடைய டீனேஜில், வானையும் நிலவையும் ரசிப்பது, எனக்கு மிக பிடித்தமான பொழுது போக்கு! வானின் வரைபடமே மனப்பாடம் ஆகிப் போயிருந்த காலம் அது! என் முதல் காதலன், ஒரு நட்சத்திரம். அதற்கு நான் வைத்திருந்த பெயர், Gypsy Star. நான் தொலைத்த அக்காலங்கள்....ம்....

"உழவன்" "Uzhavan" said...

//என்னுடைய டீனேஜில், வானையும் நிலவையும் ரசிப்பது, எனக்கு மிக பிடித்தமான பொழுது போக்கு! வானின் வரைபடமே மனப்பாடம் ஆகிப் போயிருந்த காலம் அது! என் முதல் காதலன், ஒரு நட்சத்திரம். அதற்கு நான் வைத்திருந்த பெயர், Gypsy Star. நான் தொலைத்த அக்காலங்கள்....ம்.... //

உங்களது மிகப்பெரிய பாராட்டை மிகப் பெரிய பின்னூட்டத்திலிருந்தே அறியுமுடிகிறது. மிக்க நன்றி தோழி. தங்கள் வருகை தொடரட்டும்

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு