Sunday, May 17, 2009

அத்வானி தற்கொலை?

மக்கள் மன்றத்தில் வேட்பாளராக இல்லாமல், கொல்லைப்புறமாக வந்தவர் என்றும், இந்தியாவின் மிகப் பலவீனமான பிரதமர் என்றும் விமர்சிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன்சிங்கை, அவர் மீதான இப்படிப்பட்ட விமர்சனங்களையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மீண்டும் அரியணையில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்திய மக்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து பல கட்சிகள் பிரிந்து வந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என்று பல அணிகளாய் 15வது மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டபோது, தொங்கு பாராளுமன்றம்தான் அமையப்போகிறது என்றும், மூன்றாவது அணியோ, நான்காவது அணியோ ஆதரவளிக்காமல் யாரும் ஆட்சியைக் கைப்பற்றமுடியாது என்றும், ஒருவேளை மூன்றாவது அணியே ஆட்சியமைக்கக்கூடிய நிலைமையும் வந்துவிடலாம் என்றும், இப்படி பலவாறு பலராலும் யூகிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஏறக்குறைய தனிப்பெரும்பான்மையாகவே காங்கிரஸ் கூட்டணியானது ஆட்சியமைக்கப் போகிறது. இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தேடித்தந்த பெருமை பெரும்பாலும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிக்கே சேரும்.

இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட மேற்குவங்கத்திலும் கேரளத்திலுமே இவர்களூக்குப் பலத்த பின்னடைவு. யார் ஆட்சியமைக்க வேண்டுமானாலும் இடதுசாரிகளின் ஆதரவு முக்கியம் என்றும், இவர்கள் பாரளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய சக்தி என்றும் எண்ணியதால்தான், இவர்களோடு பலரும் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்கினார்கள். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு, சுய லாபங்களுக்களுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறி, எந்தக் கூட்டணிக் கொள்கையும் இல்லாமல், வருபவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு, நாங்களும் ஒரு அணி என்று இவர்கள் கூறியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுக்கிவைக்கப்பட்ட அட்டைகளில், நடுவிலுள்ள ஒரு அட்டையை எவரேனும் உருவிவிட்டால் அத்தனையும் சரிந்துவிழுவதுபோல்தான், இந்தக்கூட்டணியிலும் நாளை ஏற்பட்டுவிட்டால் என்று மக்கள் எண்ணியிருக்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பாமக விற்கு இது ஒரு மிகப்பெரிய பாடம். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான் கூட்டணி வைத்துக்கொள்வேன் என்ற நிலையை இனி அவர்கள் பரிசீலிப்பார்கள். அன்புமணி ராமதாஸ் அவர்கள் காங்கிரஸோடுதான் கூட்டணியில் நீடிக்கவேண்டும் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதை ராமதாஸ் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் செய்திகள் வெளிவந்தன. அப்படியிருக்கையில் அன்புமணி அவர்களால் எப்படி முழுமனதோடு பிரச்சாரம் செய்திருக்கமுடியும்? என்ன சொல்லி வாக்குக் கேட்டிருப்பார்? போராடி நான்கு சீட்டுகளை வாங்கிய மதிமுகவே ஒரு இடத்தில் வென்றிருக்கும்போது, கேட்ட சீட்டுக்களை எளிதாக அம்மாவிடம் பெற்றுவந்த பாமகவால் அவர்களின் செல்வாக்கு நிறைந்த தொகுதிகளிலேயே ஒரு இடத்தில்கூட வெல்லமுடியவில்லை.

அதிமுக தலைமையிலான கூட்டணி உருவானதிலிருந்தே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுதான். மதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வியே ஆரம்பத்தில் எழுந்தது. இதுபோக சேதுசமுத்திரத் திட்டத்தில் இவர்களுக்குள் கருத்தொற்றுமையும் இல்லாமல் போனது. தமிழகத்தில் பிஜேபி க்காரர்களைத் தவிர மற்ற எல்லோருமே சேதுசமுத்திரத் திட்டத்தை ஆதரிப்பவர்கள்தான். தமிழகத்தில் எவ்வளவு பிஜேபிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள்கூட கட்சித்தலைமைக்காக மட்டுமே இத்திட்டம் தேவையில்லை என்று சொல்லுபவர்கள். இக்கூட்டணியின் மிகப்பெரிய தவறு, ஈழப்பிரச்சனை ஒன்றை மட்டுமே வைத்து இவர்கள் தேர்தலைச் சந்தித்ததுதான். ஈழத்தமிழர்களுக்காக அம்மாவிடம் ஏற்பட்ட திடீர் மனமாற்றத்தையும் மக்கள் கவனிக்கத் தவறவில்லை என்பதையும் உணரமுடிகிறது. தமிழகத்திலேயே ஜாக்பாட் யாருக்கென்றால், அது திருமாவளவன் அவர்களுக்குத்தான்.

தேர்தல் முடிவிற்குப் பின்னர், அத்வானி அவர்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாகவும், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். ஏன் இப்படி? அவரால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லையா? இந்த முடிவு அவரின் செல்வாக்கைக் குறைக்கவே செய்யும் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் ஒரு சில மாணவர்கள் தற்கொலை முடிவிற்குப்போவார்கள். அதுபோல்தான் அத்வானியின் முடிவும் உள்ளது.

எது எப்படியோ.. இப்போது இருக்கும் ஏராளமான கூட்டணிகளில், காங்கிரஸ் கூட்டணியால்தான் ஒரு நிலையான, நல்ல ஆட்சியைத் தரமுடியும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். பாரளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள் என்பதும் இதன்மூலம் தெரிகிறது. இனிமேலாவது மக்களவைத் தேர்தல் என்று வரும்போது, மூன்றாவது அணி, நான்காவது அணி, ஐந்தாவது அணி.... என்று, ஏதோ பத்தாவது வட்டத்தின் சார்பாக, பதினோராவது வட்டத்தின் சார்பாக, முப்பத்தெட்டாவது குறுக்குச்சந்தின் சார்பாக.. என்றெல்லாம் ரசிகர் மன்றம் அமைப்பதுபோல் அல்லாமல், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அமைக்கப்படும் கூட்டணிக்கு மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள் என்பதையும் இத்தேர்தல் முடிவு சொல்லுவதுபோல் உள்ளது.

நம்மை நம்பித் தந்த இவ்வளவு பெரிய வெற்றியை, மக்களுக்காகவே பயன்படுத்துவோம் என்ற எண்ணம் மன்மோகன்சிங் தலைமையிலான அரசுக்கு வரட்டும். வாழ்க ஜனநாயகம்! வளர்க இந்தியா!!

உழவன்

7 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமா அலசி இருக்கீங்க நண்பா.. தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்ல எதிர்க்கட்சி தலைவராக அத்வானி வர வேண்டும்..பார்ப்போம்..

நையாண்டி நைனா said...

மிக நன்றாய் இருக்கிறது....

ஒரு சிறு திருத்தும் அது கொல்லை புறம், கொள்ளை புறம் அன்று...(எனது ஊகம் சரியென்றால் திருத்தி கொள்ளவும்) ஒரு வேளை அரசியல் என்பதனால் 'கொள்ளை" புறமும் சரிதானோ.

குடந்தை அன்புமணி said...

நல்ல அலசல். அத்வானிக்கு அவ்ளவுதான் தைரியம் போலிருக்கு...

Vidhya Chandrasekaran said...

நல்ல அலசல். அதே சமயம் (தமிழகத்தைப் பொறுத்த மட்டில்) காங்கிரஸின் வெற்றி ஏற்றுக்கொள்ளக்கூடியதா என பார்க்கனும்.
\\அதிமுக தலைமையிலான கூட்டணி உருவானதிலிருந்தே அவர்களுக்குள் கருத்து வேறுபாடுதான்.\\
பெரிய ட்ராபேக் அம்மாவின் "நான்" என்ற அகங்காரம் தான்.

சொல்லரசன் said...

ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு, சுய லாபங்களுக்களுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறி, எந்தக் கூட்டணிக் கொள்கையும் இல்லாமல், வருபவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு, நாங்களும் ஒரு அணி என்று இவர்கள் கூறியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.......அதற்குதான் மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் நண்பரே

"உழவன்" "Uzhavan" said...

தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கார்த்திகைப் பாண்டியன்.


@குடந்தைஅன்புமணி
//நல்ல அலசல். அத்வானிக்கு அவ்ளவுதான் தைரியம் போலிருக்கு... //

இப்ப அவருக்கு தைரியம் வந்திடுச்சி :-)

@வித்யா
பெரிய ட்ராபேக் அம்மாவின் "நான்" என்ற அகங்காரம் தான்.//

ஆம். வித்யா.
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

@சொல்லரசன்
//ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டு, சுய லாபங்களுக்களுக்காக கூட்டணியிலிருந்து வெளியேறி, எந்தக் கூட்டணிக் கொள்கையும் இல்லாமல், வருபவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு, நாங்களும் ஒரு அணி என்று இவர்கள் கூறியதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.......அதற்குதான் மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்//

ஆம்.. சொல்லரசரே.. மக்கள் சரியான தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

@ ஆ.ஞானசேகரன்
நல்ல அலசல் நண்பரே//

நன்றி நண்பரே.. அப்புறம் பயணம் முடித்து திரும்பியாச்சா?

@நையாண்டி நைனா
மிக நன்றாய் இருக்கிறது....

ஒரு சிறு திருத்தும் அது கொல்லை புறம், கொள்ளை புறம் அன்று...(எனது ஊகம் சரியென்றால் திருத்தி கொள்ளவும்) ஒரு வேளை அரசியல் என்பதனால் 'கொள்ளை" புறமும் சரிதானோ.//

மிக்க நன்றி நைனா.. கொல்லை புறம் என்று சரிசெய்யப்பட்டு விட்டது. ஆனாலும் 'கொள்ளை" புறத்துக்கு நீங்க கொடுத்த விளக்கம் இருக்கே.. அடடா சூப்பர். :-)