Friday, April 24, 2009

கட்சியும் வேண்டாம்; கொடியும் வேண்டாம் - சிறுகதை

அந்தா இந்தானு மொத்தம் ஒரு முன்னூறு ரேஷன் கார்டு இருக்கும். சின்ன ஊர்தான் இது. ஆனாலும் தனி பஞ்சாயத்து. பக்குவமா மழை பேஞ்சி நல்லா உழவு வர்ற பருவம் இது. கஞ்சிய குடிச்சிட்டு, கைல தூக்கு வாளியோட வர்றான் பாசம்.

ம்..ம்.. காளியண்ணே.. கரை வேட்டியோட காலயிலேயே கெளம்பியாச்சு போல. இன்னும் உன் மேலக்காடு உழாம கெடக்கு. இன்னிக்கு சரியான பருவம்ணே. உழுது அஞ்சாறு கம்பரிசியை போட்டுட்டா ஈரப்பதத்துலயே அதுவாட்டு வந்துரபோகுது.



சரிதான் பாசம். என்ன பண்ண சொல்ற; கட்சி ஜோலினு வந்திருச்சினா, நம்ம தான பாக்கனும். எம்எல்ஏ வர ரெண்டு நாளுதான்பா இருக்கு. வந்து கொடியேத்துறார்ல நம்ம ஊர்ல. அதான் கட்சி ஜோலியா போய்க்கிட்ருக்கேன்.

அந்த ஊர பொறுத்த மட்டும், காளிதான் அவங்க கட்சிக்கு எல்லாமே. வட்டம், மாவட்டம், எம்எல்ஏ இப்படி யாரு வந்தாலும், ஓடிப்போயி ஒரு மாலையை போட்டு முன்னாடி நிப்பாரு. கொடியேத்தி மிட்டாய் குடுக்குறதுல இருந்து, தலைவர் பொறந்த நாளைக்கு தெரை கட்டி படம் போடுறது வரைக்கு, ஒரு பத்து பேர சேத்துக்கிட்டு, வறட்டு கவுரவத்துக்கு எல்லாத்தயும் பண்ணுவாரு.

ஏலே.. ஆஃப்பாயிலு..எட்டரை கேடிசி போயிருச்சாலே? இல்லணே.. வர்ற நேரம்தான்.
ஆஃப்பாயிலுங்கிறது இவன் பேரு இல்ல. இவன் அப்பன் பேரு. ஆஃப்பாயிலு இல்லாம ஒருநாளும் சாப்பிடமாட்டானாம் இவன் அப்பன் ஆறுமுகம். "ஆஃப்பாயிலு இல்லாத சாப்பாடு அரைச் சாப்பாடுடா" இதுதான் இவன் அடிக்கடி சொல்ற பழமொழி. அதனால ஊரே இவன இப்படித்தான் கூப்பிடும். அப்பன் பேரு புள்ளைக்கும் தொத்திக்கிச்சு.

அதென்ன கேடிசி னு நினைக்கிறீங்களா? அரசாங்கம் பேர மாத்தினாலும், எங்க ஊருக்கு வர்ற பஸ்ஸ கேடிசி னு தான் இப்பவும் சொல்லுவோம்.


ஏல பாண்டி .. எங்கல போன இவ்வளவு நேரம்? வாயெல்லாம் புண்ணு மாமா. அதான் வீட்டுல வெந்தயக்களி கிண்டுனா. ஒரு வாயி தின்னுட்டு வர்றேன்.

அது சரி.. சொல்றத நல்லா கேட்டுக்கோ. இன்னிக்கு ராத்திரி அவங்க நட்டுற புது கொடி கம்பத்த நம்ம வெட்டுறோம். போனவாட்டி அவன் வீட்டு சுவத்துல நோட்டீசு ஒட்டுனதுக்கே அம்புட்டு சண்டை போட்டான் காளி. பேசிகிட்டு இருக்கும்போதே உன் செவுல்ல வேற அடிச்சிட்டான்ல. எதாவது ஒன்னு பண்ணியே ஆகனும்டா.

கொடிக்கம்புக்கு பெயிண்ட் அடிச்சிக்கிட்டு இருக்காங்க. பத்து மணிக்குள்ள நட்டிட்டு எல்லாரும் போயிருவாங்க. நம்ம மொத கோழி கூவுறதுக்குள்ள கொடிக்கம்பத்த வெட்டி சாய்க்கிறோம். கெடைக்கிற ஒரு மொழக் கம்புலதாண்டா அவனுங்க காலைல கொடி ஏத்தனும். அவங்களுக்கு நாலு பேருனா, நமக்கும் நாலு பேருனு புரியனும். கோபமாகவும் நிதானமாகவும் பேசி முடித்தான் கொண்டுசாமி.

இப்படித்தான் இவனுங்களுக்குள்ள கட்சி பேர வச்சி அப்ப அப்ப சண்ட வரும். சிலநேரம் அடிச்சுக்குவாங்க. கட்சி மேல அவ்வளவு பாசமாம். ஒரு ஊருக்குள்ள இருந்துக்கிட்டு மூஞ்சி குடுத்து பேசமாட்டானுங்க. சல்லிக்காசு பெறாத விஷயத்துக்கெல்லாம் சட்டைய கிழிச்சுக்கிடுவாங்க. தொடர்ந்து மூணு நாளைக்கு வேலைக்குப் போகலனாலே, உலை வைக்கவே திண்டாடுவானுங்க. இருந்தாலும் வறட்டுக் கவுரவம் கொறயில்லாம இருக்கும்.


சொன்ன மாதிரியே வெட்டிடானுங்க. பொழுது விடிஞ்சது. விஷயம் ஊருபூராம் தெரிஞ்சது. பச்ச மிளகா கடிச்ச மாதிரி சும்மா சுள்ளுனு நின்னான் காளியும் அவன் ஆளுங்களும். இந்த சின்ன ஊர்ல வெட்டுனது யார்னு தெரியாமலா போகும். ஒருத்தன் கைய வெட்டுவேன்றான். இன்னொருத்தன் தலய வெட்டுவேன்றான். காபி கடையே காலியாக் கெடக்கு. அவ்வளவு பேரும் கொடிக்கம்பம் இருக்கிற களத்து மேட்டுலதான் இருக்காங்க. ரெண்டு மூணு பெருசுங்க தலயிட்டதால, ஒருவழியா அப்போதைக்கு பிரச்சனை முடிவுக்கு வந்தது. இப்படி அடியும் புடியுமா இவங்க காலம் ஓடிக்கிட்டு இருந்தப்பதான் இந்த சம்பவம் நடந்திச்சு.



இவ்வளவு சீக்கிரம் இப்படி நடக்கும்னு இவனுங்க யாரும் நெனச்சுப் கூடப் பாத்திருக்க மாட்டானுங்க. வரப்போற சட்டசபை தேர்தல மனசில வச்சி, கட்சியப் பலப்படுத்தனும்னு, இவனுங்க கட்சியும் அவனுங்க கட்சியும் கூட்டணி வச்சுக்கிடுச்சி. ரெண்டு கட்சி தலைவர்களும் கை கோர்த்துக்கிட்டு எடுத்த போட்டா, பேப்பர்ல மொத பக்கத்தில இருக்கு.

அப்புறம் என்ன.. அய்யய்யோ... தாயா புள்ளயா பழகுற ஒரு ஊருக்குள்ள, இவ்வளவு நாளா யாருக்காகவோ அடிச்சிக்கிட்டு கெடந்தோம்னு புரிஞ்சதுக்கு அப்புறம், இப்பதான் சண்ட சச்சரவு இல்லாம நிம்மதியா காலத்த ஓட்டுறாங்க. பொண்டாட்டி, புள்ள, குடும்பம்னு அவன் அவன் நிம்மதியா இருக்கான். குடிசையில எதுக்குங்க கொடி?


உழவன்

இச்சிறுகதை இளமை விகடனில் 22.04.2009 அன்று வெளியாகியுள்ளது.

11 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

மானங்கெட்ட அரசியலின் ஒரு பகுதியை சொல்லி இருக்கீங்க.. இன்னும் எத்தனையோ கிராமத்துல நடக்குற விஷயம்தானே இது.. கதை நல்லா இருக்கு

"உழவன்" "Uzhavan" said...

வாங்க கார்த்திகைப் பாண்டியன். தங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சொல்லரசன் said...

அருமையான கதை நண்பரே.
தேர்தல் நேரத்தில் கிராமங்களில் மட்டும் இல்லை நகரங்களிலும் சன்டையிட்டு
கொள்ளும் அடிமட்ட தொண்டர்களுக்கு புரிந்தால் சரி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க பக்கம் எளிமையா இருக்கு.. அதனால் சட்டுன்னு லோட் ஆகிடுச்சுங்க டெஸ்ட் பாஸ்.. :)
அடுத்த தேர்தலில் கட்சி தாவிட்டாங்கன்னா திரும்ப சண்டை போடுவாங்கள் தானே..
கேட்டா .. அது ப்போனாஅ அ அ தேர்தல் இது இந்த தேர்தல்ல்ன்னு சொல்லமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.. :)

ஆ.ஞானசேகரன் said...

படங்களை மினக்கிட்டு சேகரிச்சிருகிங்க... நல்லா இருக்கு... கைதையும் அருமை

"உழவன்" "Uzhavan" said...

@ஆ.ஞானசேகரன்
//படங்களை மினக்கிட்டு சேகரிச்சிருகிங்க... நல்லா இருக்கு... கைதையும் அருமை//
உண்மைதான் நண்பரே.. படங்களைச் சற்று மெனக்கிட்டுதான் சேகரித்தேன் :-)
பாராட்டுக்கு நன்றி

***

@தமிழ் பிரியன்
:) //

இந்த சிரிப்பின் பொருள் என்ன நண்பரே :-) வருகைக்கு நன்றி

***

@முத்துலெட்சுமி-கயல்விழி
//உங்க பக்கம் எளிமையா இருக்கு.. அதனால் சட்டுன்னு லோட் ஆகிடுச்சுங்க டெஸ்ட் பாஸ்.. :)//
ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்ன்ன்ன்.. பாஸ்மார்க் போட்ட மு-க மேடத்துக்கு நன்றி :-)

//அடுத்த தேர்தலில் கட்சி தாவிட்டாங்கன்னா திரும்ப சண்டை போடுவாங்கள் தானே..
கேட்டா .. அது ப்போனாஅ அ அ தேர்தல் இது இந்த தேர்தல்ல்ன்னு சொல்லமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.. :) //

இப்படியேதான் அவங்க பொழப்பு ஓடுது. ஆனா நம்ம பொழப்புதான் எப்பவும் கேள்விக்குறி

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

***

@சொல்லரசன்
//அடிமட்ட தொண்டர்களுக்கு புரிந்தால் சரி. //

புரியவேண்டும் என்பதற்காகத்தான் நாம் எவ்வளவோ செய்கிறோம். ம்ம்ம்..விரைவில் புரியும் என நம்புவோமாக :-)

Venkatesh Kumaravel said...

'உரையாடல்' போட்டிக்கும் அனுப்பலாமே தல? நல்ல படைப்பு... வாழ்த்துகள்!

"உழவன்" "Uzhavan" said...

@வெங்கிராஜா
//'உரையாடல்' போட்டிக்கும் அனுப்பலாமே தல? நல்ல படைப்பு... வாழ்த்துகள்! //

ரொம்ப நன்றி. இது எழுதி ரொம்ப நாள் ஆச்சு தல. அதனால வேறொரு கதை அனுப்பிருக்கேன்.

Karthick said...

அருமையான கதை. இன்றுதான் படித்தேன். உண்மையான கதையும் கூட.

"உழவன்" "Uzhavan" said...

//Karthick
அருமையான கதை. இன்றுதான் படித்தேன். உண்மையான கதையும் கூட. //
 
நன்றி கார்த்திக்

VENIKARTHIKA said...

mikavum arumaya chonninga. manidharkal edhavathu oru karanathai solli sandai podukiarkal, katchi, jathi, matham, mozhi, annan-thambi, ippadi pala vagai...