Thursday, January 22, 2009

ஈழத் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..
பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..
சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !

3 comments:

ரவி said...

good kavithai...

ஆதவா said...

தாலாட்டு வடிவில்........... ஒரு தாயின் புலம்பல்..

வித்தியாசமான வடிவம்...

எந்த ஒரு தாயும், இங்கு பிறப்பதற்குப் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்றுதான் நினைப்பாள்... ஈழத்தாயைத் தவிர!!!!

தொடருங்கள்!!!

FunScribbler said...

மனசை நெகிழ வைத்த கவிதை!!

//சமாதிக்குப் பறித்துப்போட்ட பூக்கள் வாடும்முன்னே நாம் கூட சமாதியாகலாம் //

மனசு அழுதது இவ்வரியை படித்தவுடன்.

//ஈழக்குருதி சிந்திய யாழ்மண்ணில் செய்த பொம்மைதான் உன் கையிலிருக்கு என் செல்ல மகனே//

யதார்த்தம்!!! ரொம்ப ரொம்ப அருமை!!

ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு.:)