அதிகால எந்திரிச்சு
அள்ளி முடிஞ்சி
அடச்ச கோழி திறந்து விட்டு
ஆடு மாடு சாணம் அள்ளி
முத்தம் பெருக்கி
வாச தெளிச்சி
பருத்தி மாரெடுத்து பத்த வச்சி
துருத்தி போல வாயால ஊதி
கடுங்காப்பி கொதிக்கும்போது
தட்டி என்ன எழுப்பிடுவா !
பக்கத்துக் கம்மாயிக்கே
பத்து நடை போகனுமேனு
ரெட்டைக் குடம் சுமந்து
பத்துக் குடம் தண்ணியெடுப்பா !
ஆட்டுக் குட்டிக்கு
அறுத்து வந்த அகத்திக்கீரையில
அஞ்சாறு ஆஞ்செடுத்து
பச்சவாடை போகும்வரை
பக்குவமாய் வதக்கி வச்சி
பழைய சோத்துக்கே ருசி சேத்திடுவா !
மாட்டு வண்டி போட்டுக்கிட்டு
மத்தியானக் கஞ்சியோடு
மாமன் நான் போகும்போது
தட்டைப் பயறு அவிச்சி
தாளிச்சுக் கொடுத்தனுப்புவா !
மஞ்சனத்தி நிழலில
கஞ்சி குடிக்கும் பொழுதில
மகராசி அவள நெனப்பேன்
தின்னாளோ இல்லையானு நான் தவிப்பேன்
அவிச்சித் தந்த பயறில
அவளுக்காக மிச்சமும் வைப்பேன்
பொழுது சாஞ்சி வீடு போயி
அவ கையில நான் கொடுப்பேன் !
பொட்டப்புள்ள பெத்ததால
பொங்கலு தீபாவளி
எங்களுக்கு இல்ல
பொசுக்குனு செலவழிக்க
பொட்டியில காசும் இல்ல - அவ
காடு கரைக்குப் போகாத நாளுமில்ல
கடைசிவரை உழைக்காத பொழுதுமில்ல !
களை எடுப்பா கதிர் அறுப்பா
பாத்தி கட்டி நாத்தும் நடுவா
வயசு வந்த பொண்ணுக்காக
வாயக்கட்டி வயித்தக்கட்டி சேத்துவப்பா!
தாலி கட்டுன நாளுல இருந்து
பேரன் பேத்தி எடுத்தது வரை
உனக்குனு ஒருநாளும் நீ வாழலியே
வீதியில என்ன விட்டுவிட்டு
நீ மட்டும் இப்ப பரலோகம் போறீயே!
என் முழு உசுரும் நீ தானடி
இப்போ நீ இல்ல நான் பிணம் தானடி
உனக்கு மட்டுமா இந்த ஆறடி
நானும் வாரேன் கூட்டிட்டுப் போடி!
4 comments:
\\தாலி கட்டுன நாளுல இருந்து
பேரன் பேத்தி எடுத்தது வரை
உனக்குனு ஒருநாளும் நீ வாழலியே
வீதியில என்ன விட்டுவிட்டு
நீ மட்டும் இப்ப பரலோகம் போறீயே!
என் முழு உசுரும் நீ தானடி
இப்போ நீ இல்ல நான் பிணம் தானடி
உனக்கு மட்டுமா இந்த ஆறடி
நானும் வாரேன் கூட்டிட்டுப் போடி\\
அண்ணா பின்னி பெடலெத்துட்டீங்க.
மிக அருமை, வார்த்தைகளும் அதன் வலியும்.
தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி !
உழவன்
மிக மிக அருமை. அழாமல் இருப்பது மிகவும் கடினமாக இருந்தது.
இது எனது பாட்டியை நினைவு படுத்திற்று....
கண்ணில் எட்டி பார்த்த துளியை துடைக்கும் முன்னரே விழுந்து தெறித்தது மனது
Post a Comment