கலைச்சொற்கள் | TNPSC | GROUP II | GROUP IV.
Tuesday, April 26, 2022
Friday, April 8, 2022
Tuesday, January 26, 2021
ஒரேயொரு வெல்லக்கட்டி போதும்!
ஒரேயொரு வெல்லக்கட்டி போதும்!
(சமர்ப்பணம்: கதிராமங்கலம் விவசாயிக்கு)
கை கால் முகம் கழுவுவதற்காகக் குளியலறையினுள் சென்று
தண்ணீரைத் திறந்துவிட்டேன்.
பாதி வாளி நிரம்பியபோதுதான்
தண்ணீருக்குள் கட்டெறும்பு ஒன்று
தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
நீச்சல் தெரியாத ஒருவன்
ஆழிப் பேரலைகளுக்குள்
தத்தளிப்பது போல் இருந்தது.
வெந்துவிட்ட பலகாரத்தைச்
சல்லிக் கரண்டியால் எடுப்பதுபோல்
தண்ணீருக்குள் கை நுழைத்து
உள்ளங்கையால் வெளியிலெடுத்தேன்.
மெதுவாக முழங்கை நோக்கி அது
ஊர்ந்ததில் அதன் களைப்பை
உணரமுடிந்தது.
தரித்திரம் பிடித்த எறும்பே
என் வீட்டிற்கா நீ வரவேண்டும்
என்று அதன் காதுகளில்
ஓங்கிச் சொன்னேன்.
போயும் போயும் நீ ஒரு
நிலம் தொலைத்த விவசாயி
வீட்டிற்கா வரவேண்டும்
அதுவும் கதிராமங்கலம்
விவசாயி வீட்டிற்கா வரவேண்டும்.
என் அப்பனிடமிருந்து
மரக்காலைப் பிடுங்கினார்கள்
என்னிடமிருந்து இந்த
உழக்கையும் பிடுங்கிவிட்டார்கள்.
உன் களைப்பைப் போக்க
எண்ணெய் கலந்த தண்ணீரை மட்டும்தான் என்னால் இப்போது
தரமுடியும்.
அந்த எறும்பை வாசல்வரை தூக்கி வந்து
மெதுவாய் இறக்கி வீதியில் விட்டிருக்கிறேன்.
இப்போது அது உங்கள் வீட்டிற்கு கூட
வந்திருக்கலாம்.
அடையாளத்திற்கு அதன் நிறத்தைச்
சொல்கிறேன்.
கறுப்பு.
பார்த்தால் அதனைத் தூக்கிக்
கொஞ்சக் கூட வேண்டாம்.
நசுக்காமல் இருந்தால் போதும்.
முடிந்தால் ஒரேயொரு வெல்லக்கட்டியைத்
தாருங்கள்.
அது உங்களுக்கு மழைக் காலத்தையும்
வெயில் காலத்தையும் கண்டறியக் கற்றுத்தரும்.
- உழவன்
கொலை செய்
பதினாறு வயதினில்
நடிக்க வந்த கவர்ச்சி நடிகை
இப்போது
பேரன் பேத்திகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்
ஏமாற்றத்தைக் கொலை செய்தவர்
நயவஞ்சகத்தைக் கொலை செய்தவர்
துரோகத்தைக் கொலை செய்தவர்
ஏளனப் பேச்சைக் கொலை செய்தவர்
ஒருபோதும்
தன்னைக் கொலை செய்யாதவர்.
- உழவன்
ஆள் பாதி
சர்க்கரைப் பொங்கல்
வாழைப்பழம் என
எல்லோர் வீட்டிலிருந்தும்
ஏதாவதொன்று
கிடைத்துக்கொண்டே இருந்தது
அந்தப்
பூம்பூம் மாட்டிற்கு.
வண்ண வண்ண ஆடைகள்
மற்றும் ஆபரணங்களின்
கனவோடு
பூம்பூம் மாட்டையே
பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு பசித்த நாய்
அத்தெருவோரத்தில்.
-உழவன்
Subscribe to:
Posts (Atom)